46ஆவது தேசிய விளையாட்டு விழாவை டிசம்பரில் நடத்த உத்தேசம்

112

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தினால் இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்காக வருடந்தோறும் நடாத்தப்படுகின்ற தேசிய விளையாட்டு விழா இவ்வருடம் நடைபெறுமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய விளையாட்டு விழா: மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகள் ஒத்திவைப்பு

முன்னதாக 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற பிரதேச மட்டப் போட்டிகள் பெரும்பாலானவை நிறைவுக்கு வந்தாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அத்துடன், இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டுப் பணிப்பாளர்களையும் கொழும்புக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது

இம்முறை மூன்று கட்டங்களின் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு விழாவின் முதலாம் கட்ட மாகாணப் போட்டிகள் கொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 9 வகையான போட்டி நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.  

விளையாட்டுத்துறை அமைச்சுக்கு SLC இனால் பி.சி.ஆர் இயந்திரம் கையளிப்பு

அத்துடன் அநுராதபுரம், பொலன்னறுவையில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்டத்தில் மேலும் 9 வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும், கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் நடைபெறவிருந்த 3ஆவது கட்டத்தில் 6 வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் உள்ளடக்கப்பட்டன.

அத்துடன், இந்த வருடத்துக்கான 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

இதனிடையே, இம்முறை தேசிய விளையாட்டு விழாவை நடத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் .பி விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்

இம்முறை தேசிய விளையாட்டு விழாவை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கான சூழல் நாட்டில் தற்போது இல்லை. அதனால் தேசிய விளையாட்டு விழாவை காலவரையின்றி ஒத்திவைக்க அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த விளையாட்டுப் பணிப்பாளர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திவிட்டோம்

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு 5,000 ரூபா உதவித் தொகை

எனவே, இதுதொடர்பில் இறுதித் தீரமானத்தை எடுப்பதற்கு அனைத்து விளையாட்டு  பணிப்பாளர்களையும் கொழும்புக்கு வரும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.

தற்போதைய நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து அந்த மாகாணத்தின் பணிப்பாளர் கொழும்புக்கு வருவது சற்று கடினம் தான். ஆனாலும் மிக விரைவில் இந்த சந்திப்பினை நாங்கள் நடத்தவுள்ளோம். 

போட்டி நிகழ்ச்சிகளை குறைத்தாவது தேசிய விளையாட்டு விழாவை நடத்தும்படி விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்தியுள்ளார். எனவே, அதுதொடர்பில் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

எதுஎவ்வாறாயினும், தேசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான அட்டவணையை நாங்கள் மீள தயாரித்துக் கொண்டு இருக்கிறோம். எப்படியாவது இம்முறை தேசிய விளையாட்டு விழாவை நடத்தவதில் விளையாட்டுத்துறை அமைச்சு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது” அவர் தெரிவித்தார்

செப்டம்பரில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்த முஸ்தீபு

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் ஓரிரண்டு மாதங்களில் குறைவடைந்தால் எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தேசிய விளையாட்டு விழாவை நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது தேசிய மட்ட நிகழ்ச்சியாக நடைபெற்ற தேசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<