சுப்பர் சன்னை வீழ்த்த உதவிய புது மணமகன் ரிப்னாஸ்

507

திருமண பந்தத்தில் இணைந்து அடுத்த தினத்தில் களமிறங்கிய மொஹமட் ரிப்னாஸ், அணித் தலைவராக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ரினௌன் விளையாட்டுக் கழகம் டயலொக் சம்பின்ஸ் லீக் தொடரில் சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

வெர்னன் பெர்னாண்டோ அரங்கில் நேற்று (25) நடைபெற்ற இப்போட்டியில் சுப்பர் சன் கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அணியின் சம்பியன் பட்டம் வெல்லும் குறுகிய வாய்ப்பு முடிவுக்கு வந்துள்ளது. ரினௌன் அணி தற்போது தனது நெருங்கிய போட்டியாளரும் அடுத்தடுத்து நடப்பு சம்பியனுமான கொழும்பு விளையாட்டுக் கழகத்தை புள்ளிப்பட்டியலில் முந்தியுள்ளது. கொழும்பு விளையாட்டுக் கழகத்திற்கு ஆறு புள்ளிகளுடன் ஒரு போட்டி எஞ்சியுள்ளது.

சுப்பர் சன் மற்றும் ரினௌன் கழகங்கள் முறையே கடந்த வாரம் நடந்த கிரிஸ்டல் பெலஸ் கால்பந்து கழகம் மற்றும் பொலிகன்ஸ் விளையாட்டுக் கழகங்களை வீழ்த்திய நிலையிலேயே ஒன்றை ஒன்று எதிர்கொண்டன. இரு அணிகளும் தனது பிரதான முன்கள வீரர்களான அபிஸ் ஒலயெமி (சுப்பர் சன்) மற்றும் ஜொப் மைக்கல் (ரினௌன்) ஆகியோர் இன்றியே களமிறங்கின. இவர்கள் இரட்டை மஞ்சள் அட்டை பெற்றதால் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.

மைதானம் மோசமான சூழலில் இருந்ததால் இரு அணிகளும் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்ப மிகவும் போராடின. ஆரம்பத்தில் 10 ஆவது நிமிடத்தில் ரினௌன் கழகத்தின் கோல் பெறும் முயற்சி தவறியது.

சொந்த மைதானத்தில் சுபர் சன்னிடம் வீழ்ந்த கிரிஸ்டல் பெலஸ்

டயலொக் கால்பந்து சுற்றுப் போட்டியில் தொடராக வெற்றிகளைப் பதிவு செய்து கொண்டுள்ள சுபர் சன்…

அது தொடக்கம் அமைதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரினௌன் கழகத்திற்கு பேருவளையின் நம்பிக்கை நட்சத்திரமான அர்ஷாத் உதவ ரிப்னாஸ், ரினௌன் கழகம் சார்பாக முதலாவது கோலைப் பெற்றார். பெனால்டி எல்லைக்குள் எதிரணியின் தற்காப்பு அரணில் ஏற்பட்ட இடைவெளியை பயன்படுத்தி அர்ஷாத் பந்தை ரிப்னாசுக்கு கடத்தினார். அந்த பந்தை பெற்ற ரிப்னாஸ் முன்னாள் ரினௌன் கோல் காப்பாளர் லாரான்ஸ் பிரின்ஸை கடந்து கோலுக்குள் அடித்தார்.

மைதானத்தின் நிலை ஒரு வேகமான கால்பந்து ஆட்டத்தை தடுப்பதாக இருந்தது. எனினும் ரினௌன் கழகம் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி முதல் பாதியின் பெரும்பாலான நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது.

மொஹமட் ரமீஸ் கோணர் திசையில் இருந்து வந்த பந்தை தலையால் முட்டி கோல் பெறும் அரிதான வாப்பொன்று கிட்டியபோது ரசிகர் உற்சாகம் அடைந்தனர். எனினும் விரைவிலேயே சுப்பர் சன் 0-2 என பின்தங்கியது. இதன்போது அர்ஷாத் மற்றும் ரிப்னால் தனது பங்களிப்பை மாற்றி செயற்பட்டனர். ப்ரீ கிக் மூலம் செலுத்தப்பட்ட பந்தை அர்ஷாத் தலையால் முட்டி கோலாக்கினார்.

முதல் பாதியை நெருங்கும்போது ரினௌன் கழகம் கோல் ஒன்றை பெற்றபோதும் அது ஒரு ஓப் சைட் கோலாக இருந்தது. எதிரணியின் தற்காப்பு வீரர்களது நெருக்கடிக்கு மத்தியில் ட்ரவொரே மொஹமட் பந்தை பரிமாற ரிப்னாஸ் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தியதை காணமுந்தது. இதன்போது கோலை விட்டு துள்ளி விலகிச் செல்லும் பந்தை ரிப்னாஸ் கோல் கம்பத்திற்குள் நேராக உதைக்க நடுவர் அதனை ஓப் சைட் என சைகை காட்டினார்.

முதல் பாதி: சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் 0 – 2 ரினௌன் விளையாட்டுக் கழகம்

கருமேகம் மைதானத்தை சூழ்ந்துகொள்ள இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பமானது. குளிரான காற்று சுப்பர் சன்னின் ஆட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது. முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் அந்த அணி மேலும் உத்வேகத்தோடு ஆடியது. எனினும் சுப்பர் சன் அணிக்கு வாய்ப்புகள் கிட்டுவது கடினமாக இருந்தது.

சுப்பர் சன் அணியின் பதில் தாக்குதல் ஒன்றை அர்ஷாத் சிறப்பான முறையில் தடுத்து கோல் பெறும் வாய்ப்பை இல்லாமல் செய்தார். சுப்பர் சன் கோல்களைத் தேடி பந்தை முன்னோக்கி செலுத்தியபோதும் அவை ஏமாற்றத்திலேயே முடிந்தன.

போட்டி முடியும் தருவாயில் ரினௌன் கழகம் சில வாய்ப்புகளை பெற்றபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனினும் ரினௌன் கழகம் புள்ளிப்பட்டியலில் ஆறு புள்ளிகளால் முதல் இடத்தில் முன்னிலை பெற்றது.

முழு நேரம் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் 0 – 2 ரினௌன் விளையாட்டுக் கழகம் 

ThePapare.com இன் சிறந்த வீரர் – மொஹமட் ரிப்னாஸ்

கோல் பெற்றவர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம் மொஹமட் ரிப்னாஸ் 11’, மொஹமட் அர்ஷாத் 31’

மஞ்சள் அட்டைகள்

சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் அல்பொன்சு கிறிஸ்துராஜ் 37’, மொஹமட் ரமீஸ் 66’

ரினௌன் விளையாட்டுக் கழகம் ஹகீம் காமில் 22’, மொஹமட் முஜீப் 73’