இலங்கைக்காக வரலாற்று தங்கப் பதக்கதை வென்ற நதீஷா

Asian Athletics Championship 2023

201
Asian Athletics Championship 2023

25ஆவது ஆசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாளான இன்று (13) மாலை நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீராங்கனை நதீஷா ராமாநாயக்க தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

போட்டி தூரத்தை 52.61 செக்கன்களில் நிறைவு செய்த அவர், இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கைக்காக முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவரது அதி சிறந்த நேரப் பெறுதியாகவும் இது பதிவாகியதுடன், பெண்களுக்கான 400 மீட்டரில் இலங்கை வீராங்கனையொருவரால் பதிவு செய்யப்பட்ட 3ஆவது அதி சிறந்த நேரப் பெறுதியாகவும் இது இடம்பிடித்தது.

இறுதியாக 2000ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீட்டரில் தமயந்தி தர்ஷா ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். எனவே, 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான 400 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்று நதீஷா ராமநாயக்க சாதனை படைத்தார்.

அதேபோல, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் வரலாற்றில் இலங்கைக்கான 8ஆவது தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தவராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார். அத்துடன், 50 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை வென்ற 20ஆவது தங்கப் பதக்கமாகவும் இது இடம்பிடித்தது.

அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான 400 மீட்டரில் தேசிய சம்பியன்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற நதீஷா ராமநாயக்க ஆசியாவில் வென்ற முதலாவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டரில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியி;ல் நதீஷாவிற்கு பலத்த போட்டியைக் கொடுத்த உஸ்பெகிஸ்தானின் பரிடா சொலிவா (52.95 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் ஐஸ்வர்யா கைலாஷ் (53.07 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இதேவேளை, இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்களான அருண தர்ஷனவும் (45.69 செக்.), ரஜித்த ராஜகருணாவும் (46.60 செக்.) முறையே 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களைப் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

எவ்வாறாயினும்;, ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜப்பான் வீரர்களான சாடோ கென்டாரோ (45.00 செக்.) தங்கப் பதக்கத்தையும் சாட்டோ புகோ (45.13 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரிக்க, சவுதி அரேபியாவின் யூசுப் அஹ்மட் (45.19 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றார்

.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<