ஆசிய மெய்வல்லுனரில் கயன்திகா, நதீகாவுக்கு வெண்கலம்

143
25th Asian Athletics Championship 2023

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நேற்று (12) ஆரம்பமான 25ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டது.  

பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரத்னவும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நதீகா லேக்கம்கேவும் இவ்வாறு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர் 

பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள் 14.39 செக்கன்களில் நிறைவுசெய்து கயன்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார் 

1973ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் முதல் தடவையாக பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது 

அதுமாத்திரமின்றி, இலங்கையின் சிரேஷ்ட மெய்வல்லுனர் வீராங்கனைகளில் ஒருவரான 36 வயதுடைய கயன்திகா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் வரலாற்றில் வென்ற 3ஆவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2017இல் பெண்களுக்கான 800 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், 2019இல் பெண்களுக்கான 800 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்றார் 

1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜப்பான் வீராங்கனைகளான நஸோமி கொடாசுமி (4:06.750) தங்கப் பதக்கத்தையும், யுமே கோட்டோ (4:13.25) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். 

இதனிடையே பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட முன்னாள் தேசிய சம்பியனான நதீஷா தில்ஹானி லேக்கம்கே வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 60.93 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த அவர் இலங்கை சாதனையையும் நிலைநாட்டினார். 

முன்னதாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நதீகா லக்மாலி 60.64 மீட்டர் தூரம் எறிந்து நிலைநாட்டிய இலங்கை சாதனையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு நதீஷா தில்ஹானி முறியடித்தார் 

அத்துடன், ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அவர் வென்ற 2ஆவது பதக்கம் இதுவாகும். முன்னதாக அவர் 2017இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில், பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஜப்பானின் மரீனா சய்ட்டோ (61.67 மீட்டர்) தங்கப் பதக்கத்தையும், சீனாவின் லியு ஷியிங் (61.51 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். 

அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் அன்னுராணி, 59.10 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 4ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார் 

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் முதலாவது அரை இறுதிப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, போட்டித் தூரத்தை 45.79 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தையும், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குகொண்ட ரஜித்த ராஜகருணா 46.12 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து 5ஆவது இடத்தையும் பிடித்து இன்று (13) மாலை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர்.    

அதேபோல, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தகுதிகாண் சுற்றில் பங்குகொண்ட நதீஷா ராமநாயக்க, போட்டியை 53.06 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்து இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக்கொண்டார்.   

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட ரந்தி குரே, 13.17 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.    

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<