ஜப்னா கிங்ஸ் அணியில் இணையும் துனித் வெல்லாலகே

Lanka Premier League 2022

163
Jaffna Kings Sign Dunith Wellalage

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவரும், இளம் சகலதுறை வீரருமான துனித் வெல்லாலகே, இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் நடப்புச் சம்பியனான ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

லங்கா பிரீமியர் லீக்கின் மூன்றாவது அத்தியாயம் இம்மாதம் 31ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டிக்கான வீரர்களை தெரிவு செய்யும் வீரர்கள் ஏலம் இன்று (05) மாலை இணைய காணொளி வாயிலாக இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தில் ஒட்டுமொத்தமாக 353 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதில், 180 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 173 உள்ளூர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, வீரர்கள் ஏலத்துக்கு முன், ஒரு அணியில் 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். மேலும் கடந்த ஆண்டு விளையாடிய நான்கு வீரர்களைத் தவிர, அந்தந்த அணி மற்றும் வீரரின் விருப்பத்தின் அடிப்படையில் மற்றொரு அணியிலிருந்து 2 வீரர்களைப் பெற முடியும்.

அந்த அடிப்படையில், LPL தொடரின் கடந்த இரண்டு அத்தியாயங்களிலும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கிங்ஸ் அணிகளுக்காக ஆடியிருந்த அந்த அணியின் முன்னணி சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க, வீரர்கள் ஏலத்துக்கு முன் ஜப்னா அணியில் இருந்து வெளியேறியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அவர் இம்முறை LPL தொடரில் கண்டி வொரியர்ஸ் அணிக்காக விளையாடுவார் என குறிப்பிடப்படுகின்றது.

மறுபுறத்தில் கடந்த ஆண்டு கொழும்பு கிங்ஸ் அணிக்காக விளையாடிய தனன்ஜய டி சில்வாவும் வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக ஜப்னா கிங்ஸ் அணியுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இது இவ்வாறிருக்க, கடந்த சில மாதங்களாக இலங்கை கிரிக்கெட்டில் ஜொலித்து வருகின்ற 19 வயது இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகே, இந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வீரர்கள் ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணிக்கும் 2 உள்ளூர் வீரர்களையும், 2 வெளிநாட்டு வீரர்களையும் ஒப்பந்தம் செய்ய முடியும் என்ற விதிமுறைகளுக்கு அமைய துனித் வெல்லாலகேவை தமது அணியில் இணைத்துக் கொள்ள ஜப்னா அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு முற்பகுதியில் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ICC 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராகச் செயல்பட்ட துனித் வெல்லாலகே, குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடம் பிடித்தார்.

அதன்பிறகு இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடர் மற்றும் நான்கு நாட்கள் தொடர்களில் ஜப்னா அணியில் இடம்பிடித்து விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இதில் ஜப்னா அணியின் பயிற்சியாளராக ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்ற திலின கண்டம்பி பணியாற்றியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறித்த இரண்டு தொடர்களிலும் வெளிப்படுத்திய திறமை காரணமாக வெல்லாலகே அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாகினார். குறித்த தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இலங்கை சார்பில் அறிமுக ஒருநாள் தொடரில் வனிந்த ஹஸரங்கவை பின்தள்ளி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரராக இடம்பிடித்தார்.

எனவே, மிகவும் குறுகிய காலப்பகுதியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சிறந்த முறையில் பயன்படுத்தி அனைவரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுக் கொண்ட துனித் வெல்லாலகே, இந்த ஆண்டு LPL தொடரில் ஜப்னா அணிக்காக விளையாடி வனிந்து ஹஸரங்கவின் இடத்தை நிரப்பக் கூடிய ஒரு வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<