2021 ஆசிய கிண்ண தொடர் 2023 வரை ஒத்திவைப்பு

Asia Cup -2021

190

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி, 15ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கையில் நடக்க இருந்தது. எனினும், கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி இந்த ஆண்டில் (2021) ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஆனால், கொரோனா அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் ஆசிய கிண்ண கிரிக்கெட்டை நடத்த வாய்ப்பில்லை என்று இலங்கை கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்குரிய ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் பேரவை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ச்சியாக சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால் இந்த ஆண்டில் ஆசிய கிண்ணத்தை நடத்த சாத்தியம் இல்லை

அதன் பிறகு 2022ஆம் ஆண்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி இருப்பதால் 2021ஆம் ஆண்டுக்குரிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை 2023ஆம் ஆண்டில் மட்டுமே நடத்த வாய்ப்பு இருப்பதாக ஆசிய கிரிக்கெட் பேரவையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக, 2018இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.