2017ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் இடம்பெறவுள்ளது.

ஐ.சி.சியினால் நடாத்தப்படும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்றைய அறிமுக நிகழ்வின் போது குழுக்கள், போட்டி கால அட்டவணை, போட்டி மைதானங்கள் என்பவை தொடர்பான முழு விபரங்களும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

குழுக்கள்

குழு A: அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ்
குழு B: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா

இந்தக் கிண்ணத்தின் முதல் போட்டியில் தொடரை நடாத்தும் இங்கிலாந்து பங்களாதேஷை சந்திக்கிறது. இந்தப் போட்டி ஜூன் மாதம் 1ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஜூன் மாதம் 2ஆம் திகதி நடைபெறும் போட்டியில் 2015ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்தித்த நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் எட்பஸ்டன் மைதானத்தில எதிர்கொள்ளவுள்ளது.

முன்னாள் வெற்றியாளர்களான இலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகள் தமது முதல் போட்டியில் ஜூன் மாதம் 3ஆம் திகதி ஓவல் மைதானத்தில் சந்திக்கின்றன.

அது போன்று 4ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இந்தியாவை .சி.சியினால் நடத்தப்பட்ட தொடர்களில் வெற்றி பெறாத பாகிஸ்தான் அணி சந்திக்கிறது. இந்தப் போட்டி எட்பஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை அணி விளையாடும் போட்டிகளில் 3ஆம் திகதி தென் ஆபிரிக்க அணியையும் 08ஆம் திகதி இந்திய அணியையும் சந்திக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை அணி தனது 3ஆவது போட்டியில் 12ஆம் திகதி பாகிஸ்தான் அணியை கார்டிப் மைதானத்தில் சந்திக்கவுள்ளது.

அந்த அடிப்படையில் 18 நாட்களில் மொத்தமாக 15 போட்டிகள் ஓவல், எட்பஸ்டன் மற்றும் கார்டிப் மைதானங்களில் நடைபெறவுள்ளது. இரண்டு குழுக்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் ஜூன் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் விளையாடவுள்ளது. அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெரும் இரண்டு அணிகளும் ஜூன் மாதம் 18ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

ஐ.சி.சியின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் இது தொடர்பாக கூறுகையில் இந்தத் தொடர் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடும் அணிகளை தெரிவு செய்யும் இறுதித் தினத்துக்கு 3 மாதங்களுக்கு முன் இந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகக் கூறியுள்ளார்.

போட்டி கால நேர அட்டவணை

ஜூன் 1 – இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ் (ஓவல்)
ஜூன் 2 – அவுஸ்திரேலியா எதிர் நியுசிலாந்து (எட்பஸ்டன்)
ஜூன் 3 – இலங்கை எதிர் தென் ஆபிரிக்கா (ஓவல்)
ஜூன் 4 – இந்தியா எதிர் பாகிஸ்தான் (எட்பஸ்டன்)
ஜூன் 5 – அவுஸ்திரேலிய எதிர் பங்களாதேஷ் (ஓவல்)
ஜூன் 6 – இங்கிலாந்து எதிர் நியுசிலாந்து (கார்டிப்)
ஜூன் 7 – பாகிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா (எட்பஸ்டன்)
ஜூன் 8 – இலங்கை எதிர் இந்தியா (ஓவல்)
ஜூன் 9 – நியுசிலாந்து எதிர் பங்களாதேஷ் (கார்டிப்)
ஜூன் 10 – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (எட்பஸ்டன்)
ஜூன் 11 – இந்தியா எதிர் தென் ஆபிரிக்கா (ஓவல்)
ஜூன் 12 – இலங்கை எதிர் பாகிஸ்தான் (கார்டிப்)
ஜூன் 14 – அரையிறுதிப் போட்டி {A1 v B2} (கார்டிப்)
ஜூன் 15 – அரையிறுதிப் போட்டி {A2 v B1} (எட்பஸ்டன்)
ஜூன் 18 – இறுதிப் போட்டி (ஓவல்)

இந்தத் தொடரில் ஜூன் மாதம் 5ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறும் அவுஸ்திரேலிய, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் ஜூன் மாதம் 7ஆம் திகதி எட்பஸ்டன் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான், தென் ஆபிரிக்காஅணிகளுக்கு இடையிலான போட்டியை தவிர மற்ற அனைத்துப் போட்டிகளும் நாள் போட்டிகளாக நடைபெறவுள்ளதுடன், அந்த இரண்டு போட்டிகளும் பகல்/இரவு போட்டிகளாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள் போட்டிகள் இங்கிலாந்து நேரப்படி காலை 10.30 மணிக்கும் பகல்/இரவு போட்டிகள் இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சம்பியன்ஸ் கிண்ண முந்தைய சம்பியன்கள்

1998 – தென் ஆபிரிக்கா (மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக)
2000 – நியுசிலாந்து (இந்திய அணிக்கு எதிராக)
2002 – இலங்கை, இந்தியா
2004 – மேற்கிந்திய தீவுகள் (இங்கிலாந்து அணிக்கு எதிராக)
2006 – அவுஸ்திரேலியா (மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக)
2009 – அவுஸ்திரேலியா (நியுசிலாந்து அணிக்கு எதிராக)
2013 – இந்தியா (இங்கிலாந்து அணிக்கு எதிராக)

2017ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்தில் 3ஆவது தடவையாக நடைபெறுகிறது. இதில் கடந்த 2 தடவை நடைபெற்ற போட்டிகளிலும் போட்டியை நடாத்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. ஆனால் 2004ஆம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும் 2013ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராகவும் சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தது.

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணம் தொடர்பான சில குறிப்புகள்

50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டிகளாக நடைபெறும் இந்தத் தொடர் முதன் முதலாக 1998ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்றது. இந்த முதலாவது சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் தென் ஆபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கட்டுகளால் தோற்கடித்து சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது.

  • விளையாடும் அணிகள் – 8
  • நடப்பு சம்பியன் – இந்தியா அதிக தடவை கிண்ணத்தை வென்ற அணிகள் – இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா (2 தடவை)
  • அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் – க்றிஸ் கெயில் (791 ஓட்டங்கள்)
  • தனியொருவர் பெற்ற அதிக ஓட்டம் – நேதன் எஸ்டல் (145* அமெரிக்கா அணிக்கு எதிராக)அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர் – கயில் மில்ஸ் (28 விக்கட்டுகள்)
  • சிறந்த பந்துவீச்சுப் பிரதி – பர்பீஸ் பஹ்ரூப் (14/6 மேற்கிந்திய அணிக்கு எதிராக)
  • அதிக வெற்றிகளை பெற்ற அணி – இந்தியா (15 வெற்றிகள்)
  • அதிக தோல்விகளை பெற்ற அணி – பாகிஸ்தான் (11 வெற்றிகள்)

இலங்கை அணி 23 போட்டிகளில் விளையாடி 13 வெற்றிகளையும், 9 தோல்விகளையும் பெற்றுள்ளது. இலங்கை அணியின் வெற்றி சதவீதம் 59.09% ஆகும்.