ஹொங்கொங்கில் அதிரடி காட்டிய சமரி அதபத்து

FairBreak Invitational Tournament 2023

443

ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் மகளிருக்கான பெயார்பிரேக் இன்விடேஷனல் T20 லீக் தொடரில் இலங்கை அணியின் தலைவி சமரி அதபத்து அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பல்கோன்ஸ் மகளிர் அணிக்காக விளையாடி வரும் சமரி அதபத்து சப்பாயர்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 44 பந்துகளில் 75 ஓட்டங்களை விளாசியதுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றுள்ளார்.

பூரான், ஸ்டொய்னிஸ் அதிரடியில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வெற்றி

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சப்பாயர்ஸ் மகளிர் அணியை 131 ஓட்டங்களுக்கு  பல்கோன்ஸ் மகளிர் அணி கட்டுப்படுத்தியது. இதன்போது பந்துவீச்சிலும் பிரகாசித்திருந்த சமரி அதபத்து 3 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் களமிறங்கிய பல்கோன்ஸ் மகளிர் அணிக்காக இரண்டாமிலக்க வீராங்கனையாக சமரி அதபத்து களமிறங்கியிருந்தார்.

சுஷி பீட்ஷுடன் ஜோடி சேர்ந்த இவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். அதன்படி 6 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்து அணியை வெற்றிக்கும் அழைத்துச்சென்றார்.

சமரி அதபத்துவுடன் துடுப்பெடுத்தாடிய சுஷி பீட்ஷ் மறுமுனையில் 30 பந்துகளுக்கு 42 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, வெறும் 13.3 ஓவர்களில் பல்கோன்ஸ் மகளிர் அணி வெற்றியிலக்கை அடைந்தது.

இதேவேளை இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பல்கோன்ஸ் மகளிர் அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளதுடன், தங்களுடைய அடுத்தப்போட்டியில் ஸ்பிரிட் மகளிர் அணியை நாளை புதன்கிழமை (12) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<