அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமில் இரு புதுமுக வீரர்கள்

180

இந்தியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கான 14 பேர் கொண்ட அவுஸ்திரேலிய குழாமில் புதுமுக வீரர்களான கிறிஸ் ட்ரமெயின் மற்றும் மார்கஸ் ஹரிஸ் இணைக்கப்பட்டிருப்பதோடு பீட்டர் ஹான்ட்ஸ்கொம்ப் அணிக்கு திரும்பியுள்ளார்.

விக்டோரியாவைச் சேர்ந்த 26 வயதுடைய ஆரம்ப துப்பாட்ட வீரரான ஹரிஸ் மற்றும் தனது மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரமெயின் இருவரும் அடிலெயிட் (டிசம்பர் 6 ஆம் திகதி தொடக்கம்) மற்றும் பேர்த் (டிசம்பர் 14 ஆம் திகதி தொடக்கம்) டெஸ்ட் போட்டிகளுக்கான குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ள இலங்கை

சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ள இலங்கை

குழாமில் உள்ள எஞ்சிய வீரர்களில் எதிர்பார்க்கப்பட்டவர்களே உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் உஸ்மான் கவாஜா உபாதைக்கு பின்னர் அணிக்கு திரும்பியுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முழங்காலில் காயத்திற்கு உள்ளான கவாஜா முதல் டி20 போட்டியில் இடம்பெற்றார்.  

”உடல் தேர்ச்சி பெறும் காலத்தில் உஸ்மான் கவாஜாவின் செறப்பாடு சிறப்பாக இருந்ததோடு அடிலெயிட்டுக்கு திரும்ப உறுதியான அஸ்திவாரத்தை போட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறுவதை அனைத்து சமிக்ஞைகளும் காட்டுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் எவ்வளவு சிறப்பாக ஆடினார் என்பதை நாம் பார்த்தோம். இந்த கோடையிலும் அதனை அவர் செய்வார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று அவுஸ்திரேலிய அணி தெரிவாளர் ட்ரவர் ஹோன்ஸ் குப்பிட்டுள்ளார்.  

புதுமுக வீரர்களும் ஹோன்ஸின் பாராட்டுக்கு உள்ளாயினர்.  

”ஷபில் ஷீல்ட் தொடரில் விக்டோரியா அணிக்காக அபாரமாக ஆடியதன் மூலமே மார்கஸ் ஹரிஸ் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஷபில் ஷீல்ட் இறுதிப் போட்டி உட்பட அண்மைக் காலத்தில் அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளில் அவர் சிறப்பாக திறமையை காட்டியுள்ளார். அதிக ஓட்டங்களை பெற்றது மாத்திரமல்ல மனநிலையை ஒருமுகப்படுத்திய அவரது ஆட்டம் டெஸ்ட் போட்டிகளுக்கு தேவையானதாக உள்ளது” என ஹோன்ஸ் கூறினார்.

”கிறிஸ் ட்ரமெயின் விக்டோரியா அணிக்காக பந்துவீச்சில் தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ஷபில் ஷீல்ட் தொடரில் இந்த பருவத்தில் இரண்டாவது அதிகூடிய விக்கெட்டுகளை பெற்றவராகவும் அவர் உள்ளார். கடந்த இரண்டு பருவங்களிலும் தொடர்ச்சியாக விக்கெட் பெறுபவராக அவர் இருப்பதோடு குழாமில் இடம்பெறுவதற்கு தகுதி கொண்டவராக உள்ளார்” என்று அவர் கூறினார்.  

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு உள்ள சில தேர்வுகளில் ஹரிஸ் இடம்பிடித்துள்ளார். உஸ்மான் கவாஜா சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வருவதோடு ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரொன் பின்ச் தனது டெஸ்ட் வாழ்வை நன்றாக ஆரம்பித்தார். ஷோன் மார்ஷும் குழாமில் இடம்பெற்றிருப்பதோடு அவர் மத்திய வரிசையில் வலுச்சேர்ப்பார்.

டேவிட் வோர்னர், கெமரூன் பாங்க்ரொப்ட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாக அணியில் இல்லாத நிலையில் பீட்டர் ஹான்ட்ஸ்கொம்ப் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு பின்னரே அவுஸ்திரேலிய அணிக்கு திரும்புகிறார்.  

”JLT கிண்ணம் மற்றும் ஷபில் ஷீல்ட் தொடர்களில் விக்டோரியாவுக்காக துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக சோபிப்பவராக அவர் உள்ளார்” என்று கூறிய ஹோன்ஸ், ”ஹான்ட்ஸ்கொம்ப் உடைமாற்றும் அறையில் மதிக்கத்தக்க ஒருவராக இருப்பதோடு ஆடுகளத்தில் அமைதியானவராகவும் டெஸ்ட் தரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடக்கூடியவராகவும் உள்ளார்” என்று குறிப்பிட்டார்.

வரலாற்றில் இரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள்

வரலாற்றில் இரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஐந்து டெஸ்ட் போட்டிகள்

மிச்சல் ஸ்டார்க், பீட்டர் சிட்டில், பெட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹெஸில்வுட் என்ற வலுவான வேகப்பந்து வரிசையில் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரராக ட்ரமெயின் இடம்பெற்றுள்ளார். டிம் பெயின் தலைமையிலான குழாமில் ஒரே முன்னணி சுழற்பந்து வீச்சாளராக நெதன் லியோன் இடம்பெற்றுள்ளார்.

எனினும் ஐக்கிய அரபு இராச்சிய சுற்றுப்பயணத்தில் இடம்பெற்ற ஆஷ்டன் ஏகர், பிரென்டன் டொக்கெட், ஜோன் ஹொல்லான்ட், மார்னுஸ் லபுசன் மற்றும் மட் ரன்சோ ஆகிய வீரர்கள் இந்த குழாமில் இடம்பெறவில்லை.

அவுஸ்திரேலிய குழாம்

டிம் பெயின் (தலைவர் மற்றும் விக்கெட் காப்பாளர்), பெட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், பீட்டர் ஹான்ட்ஸ்கொம்ப், மார்கஸ் ஹரிஸ், ஜோஷ் ஹேஸல்வுட், ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நெதன் லியோன், மிச்சல் மார்ஷ், ஷோன் மார்ஷ், பீட்டர் சிட்டில், மிச்சல் ஸ்டார்க், கிறிஸ் ட்ரமெயின்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<