தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 நாடுகளைச் சேர்ந்த 200 வீரர்கள் பங்கேற்பு

410

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை, இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வீர வீரங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இம்முறை போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 84 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதுடன், இந்தியாவிலிருந்து 59 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான போட்டியாகவே தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது.

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் வடக்கு, கிழக்கு, மலையக வீரர்கள்

எனினும், இம்முறை போட்டித் தொடரில் 10 தங்கப் பதக்கங்களை இலங்கையால் வெல்ல முடியும் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று(02) இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை போட்டிகளில் இலங்கை கனிஷ்ட அணியின் தலைவரான மாத்தளை மாவட்டம், அகுரம்பொட வீரகெப்பெட்டிப்பொல தேசிய பாடசாலையைச் சேர்ந்த அருண தர்ஷன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆண்கள் அணியின் தலைவராக நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மாணவன் ஷானுக்க சந்தீப்பவும், பெண்கள் அணியின் தலைவியாக கண்டி ஸ்வர்ணமாலி மகளிர் கல்லூரி மாணவி அமாஷா டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அருண தர்ஷன, அண்மைக்காலமாக 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெற்றிகளையும் பதிவுசெய்து வருகின்றார்.

இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தகுதிச் சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தொடர்ந்து புதிய சாதனைகளை முறியடித்த அவர், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் உறுதி செய்து கொண்டார்.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 46.59 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை படைத்த அவர், குறித்த வயதுப் பிரிவில் சிறந்த வீரராகவும் தெரிவானார். எனவே, இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கைக்கு தங்கப் பதக்கமொன்றை வென்று கொடுக்கின்ற முக்கிய வீரராகவும் அருண விளங்குகின்றார்.

ஷானுக்க, அமாஷா, அருண தர்ஷன

அத்துடன், ஆண்கள் அணியின் தலைவர் ஷானுக்க சந்தீப்ப 100 மீற்றரிலும், பெண்கள் அணியின் தலைவி அமாஷா டி சில்வா 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது. அதனையடுத்து இறுதியாக 2013ஆம் ஆண்டு இந்தியாவின் ரஞ்சியில் நடைபெற்ற தொடருக்கு இலங்கையிலிருந்து சுமார் 40 வீரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விரண்டு போட்டித் தொடர்களிலும் இலங்கை அணி முறையே 8 தங்கப் பதக்கங்களையும், 10 தங்கப் பதக்கங்களையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெரும்பாலான வீரர்கள் எதிர்பார்த்த அடைவுமட்டத்தினை விட சிறப்பாக பிரகாசித்திருந்த காரணத்தால் இம்முறை நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் 10 விட அதிகமான தங்கப் பதக்கங்களை இலங்கை அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சவாலைக் கொடுத்து வருகின்ற இந்தியாவிடம் இருந்து இம்முறையும் பலத்த போட்டி காணப்படும். ஆனால், இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை மற்றும் இந்திய வீரர்களின் சுவட்டுப் போட்டிகளுக்கான நேரப் பதிவுகள் மற்றும் மைதான நிகழ்ச்சிகளுக்கான தூரம் மற்றும் உயரப் பெறுதிகளை ஒப்பிடும் போது இலங்கை வீரர்களுக்கு சாதகமான பெறுபேறுகள் கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது.

முதல் நாளில் 16 இறுதிப் போட்டிகள்

3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

இதன்படி, இம்முறை போட்டித் தொடர் 5ஆம் திகதி (சனிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது போட்டிகளில் பங்குபற்றவுள்ள வீர, வீராங்கனைகள், மத்தியஸ்தர்களுக்கான சத்தியப் பிரமாணங்கள் இடம்பெறவுள்ளது. அதன்பிறகு, பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை போட்டிகள் நடைபெறும்.

இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்று போட்டிகள் நடைபெறும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, இரண்டு நாட்களும் தலா 14 தனிநபர் போட்டிகளும், இரண்டு அஞ்சல் ஓட்டப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

20 வருடங்களுக்குப் பிறகு தேசிய சாதனையை முறியடித்த சுரன்ஜய

இதேவேளை, தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரின் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கான விசேட கூட்டம் சுகததாஸ விளையாட்டரங்கில் நாளையும், தெற்காசிய நாடுகளின் சம்மேளனப் பிரதிநிதிகளின் கூட்டம் நாளை மறுதினம்(05) ஒலிம்பிக் இல்லத்திலும் நடைபெறவுள்ளது.

இலங்கை அணியில் 4 தமிழ் பேசும் வீரர்கள்

போட்டிகளை நடாத்தும் நாடு என்ற அடிப்படையில் ஒட்டுமொத்தமாக நடைபெறவுள்ள 38 போட்டிகளுக்கும் தலா 3 வீரர்களை இலங்கை களமிறக்கவுள்ளது. இதன்படி, இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு சர்வதேச போட்டித் தொடரொன்றுக்காக 4 தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த வாரம் நிறைவுக்கு வந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் திறமைகளைப் வெளிப்படுத்தியிருந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும், யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ் ஆண்களுக்கான தட்டெறிதலிலும், பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் சந்திரகுமார் அரவிந்தன் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

மாலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட்

இலங்கை அணியின்…

இதேநேரம், பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய மாணவி நாகேந்திரம் உதயவானியும் இம்முறை தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்காக தெரிவாகியுள்ளார்.

இந்தியாவிலிருந்து அதிகளவான வீரர்கள்

2ஆவது தடவையாகவும் இலங்கையில் நடைபெறவுள்ள இத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இலங்கைக்கு அடுத்தபடியாக இந்தியாவிலிருந்து அதிகளவிளான வீரர்கள் (59 வீரர்கள்) பங்குபற்றவுள்ளனர். எனினும், ஏனைய தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான் (12 வீரர்கள்), மாலைதீவுகள் (8 வீரர்கள்), பங்களாதேஷ் (11 வீரர்கள்), நேபாளம் (07 வீரர்கள்), பூட்டான் (03 வீரர்கள்) ஆகியவற்றிலிருந்து மொத்தமாகவே சுமார் 50 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனினும், பிராந்திய கூட்டுறவுக்கான தெற்காசிய அமைப்பிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகியுள்ளதால், அந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு வீரரும் இத்தொடரில் பங்குபற்றமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெய்வல்லுனர் சங்கத்தின் விசேட வேண்டுகோள்

இலங்கை மெய்வல்லுனர் அரங்கில் எதிர்கால நட்சத்திரங்களை இனங்காணும் வகையில் நீண்ட இடைவெளியின் பிறகு நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை நேரடியாக மைதானத்திற்கு வருகை தந்து பார்வையிடுமாறு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”இப்போட்டித் தொடருக்கான அனுசரணையை விளையாட்டுத்துறை அமைச்சு வழங்கவுள்ளது. ஆனாலும், முடியுமான அளவு ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்து எமது இளம் வீரர்களை உற்காசப்படுத்தி, அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கான அத்திரவாரத்தை இடுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். இதற்கான பிரச்சாரத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் முன்னெடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை, இந்த தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நேரலை ஒளிபரப்பு

எதிர்வரும் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை My tv தொலைக்காட்சி வாயிலாகவும், Dialog Chennal 01 வாயிலாகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

அத்துடன், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com வாயிலாக போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், விஷேட கட்டுரைகள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் போட்டி நிகழ்வை நேரடியாகப் பார்வையிட