18ஆவது வீரர்களின் போரில் கிண்ணம் யாருக்கு?

556

வடக்கின் வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகிய அணிகள் மோதும் பெரும் சமரான (Big Match) 18ஆவது வீரர்களின் போர் எதிர்வரும் 23ஆம், 24ஆம்   திகதிகளில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  

மீண்டும் சூடுபிடித்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமர்

இலங்கை மக்களின் மகிழ்ச்சிக்கு காலங்காலமாக பிரதான…..

வீரர்களின் போர் மீதான ஒரு பார்வை

பல பெரும் சமர் கிரிக்கெட் தொடர்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற யாழ் மாவட்டத்தில் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்ட போட்டியாக யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வடக்கின் பெரும் சமர் இருந்து வருகின்றது.

அதனைத் தொடர்ந்து அதிகமானவர்கள் பேசும் வகையில் இருக்கும் குறிப்பிட்ட ஓரிரு பெரும் சமர்களில் இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையிலான வீரர்களின் போரைக் குறிப்பிடலாம்.

இந்த பெரும் சமரானது கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் தமது பாடசாலைச் செல்வங்களுக்கும், வடக்கின் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகின்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் இதுவரையில் 17 பெரும் சமர் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், மகாஜனா கல்லூரி 5 போட்டிகளிலும், ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேவேளை 8 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

கடந்த வருடம் இடம்பெற்ற மோதல் சமநிலையில் முடிவடைந்தது. எனினும், இறுதியாக முடிவுகள் காணப்பட்ட கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் மகாஜனாக் கல்லூரி அணியினர் வெற்றியைத் தமதாக்கி இறுதியாக வெற்றி பெற்றவர்கள் என்ற பதிவை தன்னகத்தே கொண்டுள்ளனர்.

மகாஜனா கல்லூரி அணி

இந்த பருவகாலத்தில் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 3 இல் ஆடிவரும் மகாஜனா கல்லூரி அணி, தமது முதலாவது சுற்றப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யூனியன் கல்லூரி அணிகளை இன்னிங்ஸால் வெற்றிகொண்டுள்ளது.

ஒருநாள் தரவரிசையில் கோஹ்லி, ரஷீத் கான் புதிய மைல்கல்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட், ஒருநாள்….

அதேபோன்று பெரும் சமரில் மோதும் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியுடனான போட்டியினை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன், மானிப்பாய் இந்துக் கால்லூரியுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்துள்ளது. இவ்வாறான முடிவுகளுடன் மகாஜனா கல்லூரி அணி தமது குழுவில் இரண்டாவது இடத்தினை பிடித்து அடுத்த சுற்றிற்கு தகுதிபெற்றுள்ளது.

இவர்கள், நட்பு ரீதியிலான போட்டிகளில் யாழ்ப்பாண கல்லூரி அணியினை இன்னிங்ஸால் வெற்றிகொண்ட அதே வேளை, சென். ஜோன்ஸ் கல்லூரியுடன் இன்னிங்ஸ் தோல்வியை பெற்றுள்ளனர். கொக்குவில் இந்து மற்றும் யாழ் மத்திய கல்லூரி அணிகளுடனான ஒரு நாள் போட்டியில் முறையே, கொக்குவில் இந்துவுடன் வெற்றி பெற்றுள்ள அதேவேளை, மத்தியுடன் தோல்வியடைந்துள்ளனர்.

அவதானத்திற்குரிய வீரர்கள்

இம்முறை மகாஜனா கல்லாரி அணியானது அனுபவ வீரர்கள் பலரை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. அணியினை நான்காம் வருட அனுபவ வீரரான தங்கராசா தாயூஸ்ரன் தலைமை தாங்குகின்றார். மூன்றாவது வருட வீரர்களாக அணியின் துணைத்தலைவர் சுஜீபன், விக்கெட் காப்பாளர் சர்மிலன் மற்றும் பகீரதன் ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களுடன் ஐந்தாம் வருட வீரராக கடந்த வருட அணித் தலைவர் தினேஷும் அணியில் உள்ளமை அணிக்கு மேலதிக பலம் சேர்க்கின்றது.

அணியின் துடுப்பாட்ட வரிசை இந்த பருவகாலத்தில் மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது. புதுமுக வீரர்களான ஜாம்ஷன், தனிஸ்ரன் ஆகியோர் யாழ் இந்துக் கல்லூரிக்கு எதிராக சதம் கடந்துள்ளனர். கிருஷன்   யூனியன் கல்லூரிக்கு எதிராக 187 ஓட்டங்களை விளாசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் போட்டியின் போக்கினை மாற்றி 17ஆவது வீரர்களின் போரில் ஆட்டநாயகன் விருதினை தனதாக்கிய ஜனுஷன் இம்முறையும் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் வீரராக உள்ளார். அதேவேளை, பின்வரிசையில் சாருயன் மற்றும் அதிரடி சகலதுறை வீரரான தினேஷ் ஆகியோர் களம் காண்கின்றனர்.

Photos: Mahajana College Cricket Team 2018 Preview

Photos of the Mahajana College Cricket Team 2018 Preview…..

பந்து வீச்சுத்துறையினை வலது கை சுழற்பந்து வீச்சாளரான அணித்தலைவர் தாயூஸ்ரன் வழிநடாத்த, அனுபவம் மிக்க வீரர்களான ஜனுஷன், தினேஷ் ஆகியோர் அணிக்கு மேலும் வலுச் சேர்க்கும் வீரர்களாக உள்ளனர்.

இவர்களுக்கு மேலதிகமாக கடந்த வருடம் 15 வயதிற்குட்பட்ட யாழ் மாவட்ட அணியில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் சதுர்ஜனும் இம்முறை மகாஜனா அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இவர் பலம் மிக்க சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை சாய்த்திருந்தமை சிறப்பம்சமாகும்.

பயிற்றுவிப்பாளர்

கடந்த காலங்களில் துணைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட குகதாஸ் ரசிகரன் அவர்கள் இவ்வருடம் மகாஜனா கல்லூரி அணிக்கு முதல் முறையாக பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார்.

அணியின் வீரர்களுடன் கடந்த காலங்களில் தொடர்ந்து செயற்பட்ட அனுபவம் இவருக்கு அணியைப் பற்றி அதிகம் அறிந்து வைத்திருப்பதற்கான வாய்ப்பை கொடுத்திருக்கும். எனவே, அணியின் பலவீனங்களை நன்கு கண்டறிந்துள்ள இவருக்கு இம்முறை தொடரின் வெற்றியாளர்களாக தமது தரப்பினரை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத் தேவையும் உள்ளது.

ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி

இந்த பருவகாலத்தினை ஸ்கந்தவரோதயா கல்லூரி அணி சற்று மோசமாக ஆரம்பித்திருந்தாலும், அண்மைய போட்டிகளில் மிகவும் சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்தியுள்ளது.

2017/18 பருவகாலத்தில் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் போட்டித்தொடரில் பிரிவு 3 இல் பங்கெடுத்துவரும் ஸ்கந்தவரோதயா அணி, யூனியன் கல்லூரி அணியினை இன்னிங்ஸாலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிக்கெதிராக வெற்றியினையும் பதிவு செய்துள்ளது. பெரும் சமரில் மோதும் தமது வழமையான போட்டியாளர்களான மகாஜன கல்லூரி அணியுடனான போட்டியினை சமநிலையில் நிறைவு செய்துள்ளதுடன் மானிப்பாய் இந்துக் கால்லூரியுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்துள்ளது.

Photos: Skandavarodaya College Cricket Team 2018 Preview

Photos of the Skandavarodaya College Cricket Team 2018 Preview………

போட்டித்தொடரில் சற்று மந்தமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தபோதும் தொடர்ந்து இடம்பெற்ற நட்பு ரீதியிலான போட்டிகளில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியினை வெற்றி கொண்டுள்ளது. புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண கல்லூரி அணிகளுடனான போட்டிகளை சமநிலையில் முடித்துள்ளது.

யாழ் மத்திய கல்லூரியுடனான போட்டி முடிவேதுமின்றி நிறைவடைந்திருந்த அதேவேளை, சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்திருந்தனர்.

இம்முறை ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியானது அதிகளவிலான புதுமுக வீரர்களினை உள்ளடக்கிய அணியாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வருடம் 17 வயதிற்குட்பட்ட அணிகளிற்கிடையிலான பிரிவு 3 சுற்றுப்போட்டியின் அரையிறுதிவரை முன்னேறியிருந்த ஸ்கந்தவரோதயா கல்லூரி அணியின் அத்தனை வீரர்களும் இவ்வணியில் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அவதானத்திற்குரிய வீரர்கள்

மூன்றாவது முறையாக வீரர்களின் போரில் களம் காணும் சகலதுறை வீரரான அஜிந்தன் இவ்வருடம் அணியினை வழிநடாத்துகின்றார்.

துடுப்பாடத்தினை அவதானிக்கையில் முன் வரிசையில் கலிஸ்ரன், டிலக்சன் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கலிஸ்ரன் யூனியன் கல்லூரிக்கு எதிராக 155 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அணியின் துணைத்தலைவர் தனுசன் தொடர்ச்சியாக சிறப்பான பெறுதிகளை வெளிப்படுத்துகின்றார். இவர் மத்திய கல்லூரிக்கு எதிராக ஆட்டமிழக்காது 132 ஓட்டங்களைப் பெற்றமை இந்த பருவகால சிறப்பு பெறுதியாகும். அணித் தலைவர் அஜிந்தன், பிரசன் மற்றும் டான்சன் ஆகியோரும் மத்திய வரிசையில் நம்பிக்கை தரக்கூடிய துடுப்பாட்ட வீரர்களாவர்.

முடிவொன்றை எதிர்பார்த்து நிற்கும் சகோதரர்களின் சமர்

இலங்கையிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கிடையில் ……

பந்து வீச்சுத்துறையில் வலது கை வேகப்பந்து வீச்சாளர்களான கடந்த வருடம் சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை தனதாக்கிய சோபிகன் மற்றும் இந்தப் பருவகாலத்தில் சிறப்பான பெறுதியினை வெளிப்படுத்திவரும் தனுஷன் ஆகியோர் பிரதான இடம் வகிக்கின்றனர். மற்றைய பிரதான பந்து வீச்சாளர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான டான்சன், அஜிந்தன் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களாக தனுஷ்ராஜ், டிலக்சன் இணையும் செயற்படுவர்.

பயிற்றுவிப்பாளர்

அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்ற ஜசிதரன், முதல் மூன்று வீரர்களின் போரில் ஸ்கந்தாவினை பிரதிநிதித்துவம் செய்திருந்தவர். அதன் பின்னர் சில காலங்கள் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதன் பின்னர் தற்போது மீண்டும் இரண்டாவது ஆண்டாக தொடர்ச்சியாக ஸ்கந்தாவின் பயிற்றுவிப்பாளராக செயற்படுகின்றார்.

சிறந்த பயிற்சியின் மூலமும், வீரர்களுக்கு மனதளவில் தைரியத்தையும் பலத்தையும் கொடுக்கும் பட்சத்தில் ஜசிதரனுக்கு இளம் வீரர்களை இந்த பெரும் சமரில் பலம்மிக்க படையணியாக மாற்றலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இறுதியாக,

அனுபவ வீரர்களையும் புதுமுக வீரர்களையும் உள்ளடக்கிய மகாஜனா கல்லூரி அணியானது, இம்முறை தமது குழாமிலுள்ள அதிக எண்ணிக்கையிலான நம்பிக்கை தரக்கூடிய சகலதுறை வீரர்களை முதுகெலும்பாக கொண்டு களமிறங்குகின்றது. இம்முறை வெற்றி ஒன்றுடன் தம்வசமுள்ள கிண்ணத்தினை தக்க வைப்பதே மகாஜனா கல்லூரி அணியின் ஒரே நோக்கமாக உள்ளது.

முற்றிலுமாக இளைய வீரர்களை கொண்டிருக்கக்கூடிய ஸ்கந்தவரோதயா கல்லூரியின் முன் வரிசை துடுப்பாட்டம் சற்று பலவீனமாக இருக்கின்றபோதும், பலமான மத்திய வரிசையினை கொண்டுள்ள அவ்வணி அதனை சாதகமாக பயன்படுத்தி தமது தேர்ச்சி பெற்ற வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக கைக்கொண்டு தமது வெற்றியோட்டத்தை இவ்வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றனர்.

18ஆவது வீரர்களின் போர் போட்டியின் புகைப்படங்கள் மற்றும் போட்டி விபரங்களினை உடன் அறிந்துகொள்வதற்கு Thepapare.com உடன் இணைந்திருங்கள்.