ஒருநாள் தரவரிசையில் கோஹ்லி, ரஷீத் கான் புதிய மைல்கல்

569

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தரவரிசைகள் ஒவ்வொரு போட்டித் தொடர்களின் முடிவிலும் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த இலங்கை – பங்களாதேஷ், இந்தியா – தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர்களை அடுத்து ஐ.சி.சி  நேற்று (20) வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ஆப்கானிஸ்தானின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் ஆகியோர் புதிய மைல்கல்லை எட்டியிருந்தனர்.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய இலங்கை அணியின் வீரர்கள் எவரும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது இலங்கை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை முறியடித்து வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஒரே நேரத்தில் 900 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன், ஒருநாள் தரவரிசையில் விராட் கோஹ்லி 909 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 912 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 3 சதங்கள் உட்பட 558 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் வரலாற்று உச்சத்தை பெற்றுள்ளார்.

ஷெஹான் மதுஷங்க சுதந்திர கிண்ணத்தில் விளையாடுவது சந்தேகம்

ஐ.சி.சி நேற்று ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் விராட் கோஹ்லி 909 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 900 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் அரங்கில் உச்சக்கட்ட புள்ளிகள் எடுத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், ஒரே நேரத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 2 ஆவது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஏபி டி வில்லியர்ஸ் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதேநேரம், ஒருநாள் போட்டிக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1985 ஆம் ஆண்டில் 935 புள்ளிகள் பெற்றிருந்தார். இதுதான் உச்சக்கட்ட புள்ளியாகும், அதன்பின் பாகிஸ்தானின் சகீர் அப்பாஸ் 1983 ஆம் ஆண்டு 931 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். தொடர்ந்து இங்கிலாந்தின் கிரேக் சேப்கல் 1981 ஆம் ஆண்டு 921 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எனினும், விவியன் ரிச்சர்டஸ் வைத்திருக்கும் ஒரே சாதனையையும் கோஹ்லி முறியடிக்க தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது விராட் கோஹ்லி இன்னும் 130 ஓட்டங்களை எடுத்தால் ஒரே தொடரில் ஒட்டு மொத்தமாக 1,000 ஓட்ட மைல்கல்லை எட்டும் வாய்ப்பை நெருங்கியுள்ளார். இந்தச் சாதனையை கோஹ்லி நிகழ்த்தினார் என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் இதனை நிகழ்த்தும் 2 ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொள்வார்.

டெஸ்ட் தொடரில் 286 ஓட்டங்களையும் ஒருநாள் தொடரில் 558 ஓட்டங்களையும் எடுத்துள்ள கோஹ்லி இதுவரை 870 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் 1045 ஓட்டங்களை இங்கிலாந்துக்கு எதிரான ஒரே தொடரில் 1976 ஆம் ஆண்டில் எடுத்து சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் எஞ்சியுள்ள 2 டி-20 போட்டிகளில் கோஹ்லி இந்த மைல்கல்லை எட்ட வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆப்கானின் 19 வயதான ரஷித் கானுக்கு முதலிடம்

ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சமீபகாலமாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்ற ரஷீத் கான் அண்மையில் நிறைவுக்கு வந்த ஜிம்பாப்வே உடனான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்தார். இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என தொடரை வெற்றி பெற்றதுடன், பந்துவீச்சில் அதிரடியைக் காண்பித்த ரஷீத் கான் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி தொடரின் நாயகனாகவும் தெரிவானார்.

இதேபோல் தென்னாபிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். இதனால் இருவரும் ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சு தரவரிசையில் 787 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

குறிப்பாக ரஷீத் கான் 19 வயது 153 நாட்களில் முதலிடத்தைப் பிடித்து மிக இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய உலகின் முதலாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 729 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் ஜொஸ் ஹசில்வுட் 4 ஆவது இடத்தையும், பாகிஸ்தானின் ஹசன் அலி 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேநேரம், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் 6 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம்

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை வீரர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வீரர்களின் திறமைக்குதான் வெற்றி கிடைத்தது என்கிறார் ஹத்துருசிங்க

குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, சனத் ஜயசூரிய போன்ற முன்னணி இலங்கை அணி வீரர்கள் பலர், ஒரு நாள் தரவரிசையில் முதல் 10 இடங்களை தக்கவைத்துக் கொண்ட போதிலும், அதன் வழியில் வந்த தற்போதைய வீரர்கள் ஐ.சி.சி தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் எந்தப் போட்டியிலும் இடம் பிடிக்காதது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் தொடர்ச்சியாக பல போட்டிகளில் படுதோல்விகளை தழுவி வந்த இலங்கை அணி, இறுதியாக புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் தலைமையில், பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடர், டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது. ஆனால் இதில் இலங்கை அணி வீரர்களான தினேஷ் சந்திமால், ரங்கன ஹேரத் மாத்திரமே ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் 12 மற்றும் 8ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

எனினும், ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 27 ஆவது இடத்தையும், உபுல் தரங்க (39), நிரோஷன் திக்வெல்ல (40) மற்றும் குசல் மெண்டிஸ் (44) ஆகியோர் முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம், பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் சுரங்க லக்மால் 21 ஆவது இடத்தையும், அகில தனஞ்சய 42 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஒரு நாள் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 123 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென்னாபிரிக்கா 117 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்திலும், இங்கிலாந்து 116 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது. தொடர்ந்து 4 ஆவது இடத்தில் நியூசிலாந்து (115), 5 ஆவது இடத்தில் அவுஸ்திரேலியா (112), பாகிஸ்தான் 96 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 90 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்திலும், இலங்கை 84 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்திலும் உள்ளன.

இதில் ஜிம்பாப்வே அணியை கீழே தள்ளி ஆப்கானிஸ்தான் அணி 55 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்துக்கு தரவரிசையில் முன்னேறியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகள் பெற்று இந்த முன்னேற்றத்தையும், ஜிம்பாப்வே 3 புள்ளிகளை இழந்து 11 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.