LPL தொடரின் கொழும்பு அணிக்கு புது உரிமையாளர்கள்

1016

கொழும்பு மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற வியாபார நிறுவனங்களில் ஒன்றான SKKY குழுமம், லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரில் கொழும்பு அணிக்கு புதிய உரிமையாளர்களாக மாறியிருப்பதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது.

சமரி, ஓசதியின் பிரகாசிப்புகளுடன் இலங்கைக்கு இலகு வெற்றி

அந்தவகையில் திரு. சாகர் கண்ணா தலைமையிலான SKKY குழுமம் கொழும்பு அணியின் புதிய உரிமையாளர்களாக மாறியுள்ள நிலையில், கொழும்பு அணி இந்தப் பருவகாலத்திற்கான LPL T20 தொடரில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த பருவத்திற்கான LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய கொழும்பு அணியினுடைய புதிய உரிமையாளராக மாறிய விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட திரு. சாகர் அண்ணா, தமது நிறுவனம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து பணிபுரிவதில் அதிக மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டதோடு, LPL தொடரினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு கரம் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை LPL தொடரினை நடாத்தும் உரிமத்தினை தம்மிடையே வைத்திருக்கும் IPG குழுமத்தின் தலைவர் அனில் மோகனும் புதிய உரிமையாளர்களை வரவேற்பதாக தெரிவித்திருப்பதோடு, LPL தொடரின் ஏற்பாட்டுக் குழுவின் இயக்குனரான சமன்த தொடன்வெலவும் புதிய உரிமையாளர் மூலம் LPL தொடரில் புதிய அபிவிருத்திகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நான்காவது பருவத்திற்கான LPL தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை நடாத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<