SAG கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு வெண்கலம்! தங்கம் வென்றது இந்தியா!

86

நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. அதேநேரம், ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளின் தங்கப் பதக்கங்களை இந்தியா சுவீகரித்துக்கொண்டது. 

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட இலங்கை ஆண்கள் அணி என்ற 3-1 என்ற செட்கள் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளது.

SAG மெய்வல்லுனர் போட்டிகளின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வெளியீடு

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கோலாகலமாக …….

இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி 23-25 என இழந்த போதும், அடுத்த மூன்று செட்களையும் தொடர்ச்சியாக வெற்றிக்கொண்டது. இதன்படி, 23-25, 25-20, 25-16 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை தக்கவைத்தது. 

இம்முறை நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கரப்பந்தாட்ட தொடரில் B குழுவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. 

தங்களுடைய முதல் லீக் போட்டியில் மாலைத் தீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 3-0 என்ற நேர் செட்கள் கணக்கில் வெற்றியீட்டியது. முதல் செட்டை 25-18 என கைப்பற்றிய இலங்கை அணி, அடுத்த இரண்டு செட்களையும் 25-23 மற்றும் 25-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டது.

எனினும், இதற்கு அடுத்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்தது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் செட்டை 30-28 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. எனினும், அடுத்த மூன்று செட்களிலும் ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் அணி 25-18, 25-20 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.

இளையோர் ஆசிய சம்பியன்ஷிப் கரப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 7ஆவது இடம்

மியன்மாரில் முடிவுற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய ………

எவ்வாறாயினும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை, இந்திய அணியை எதிர்கொண்டது. குறித்தப் போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 27-25, 25-19 என இந்திய அணி கைப்பற்ற, மூன்றாவது செட்டை இலங்கை அணி 25-21 என கைப்பற்றியது. அடுத்த செட்டை இந்திய அணி 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்ற, இலங்கை அணி 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

இதேவேளை, மகளிருக்கான கரப்பந்தாட்ட போட்டிகளில், இலங்கை மகளிர் அணி தங்களுடைய முதல் போட்டியில் மாலைத் தீவுகள் அணியை 3-0 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தியிருந்த போதும், அரையிறுதிப் போட்டியில் நேபாளத்திடம் 3-0 என தோல்வியடைந்திருந்தது.

>>Photos: Sri Lanka vs Bangladesh | 3rd Place | Men’s Volleyball | South Asian Games 2019<<

எவ்வாறாயினும், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மாலைத் தீவுகள் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி 25-13, 25-18, 25-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியது.

அதேநேரம், இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவின் கரப்பந்தாட்ட போட்டிகளின் இறுதி முடிவின் படி, இந்திய ஆண்கள் அணி, பாகிஸ்தான் அணியை 3-1 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றதுடன்,  இந்திய மகளிர் அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் நேபாளம் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<