உள்ளூர் ஒருநாள் தொடரின் சம்பியனாகிய NCC

126
NCC vs Ragama CC

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இலங்கையின் உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்திய பிரதான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் NCC அணியினர், றாகம விளையாட்டுக் கழகத்தினை 145 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரின் சம்பியன் பட்டத்தினையும் வென்றிருக்கின்றனர்.

>> அபார சதம் விளாசிய உபுல் தரங்க

நேற்று (11) கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற NCC அணியினர் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தனர். 

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய NCC அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

NCC அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் விளாசியிருந்த இளம் துடுப்பாட்ட வீரரான கமில் மிஷார 113 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் அரைச்சதங்களை பூர்த்தி செய்த கவீன் பண்டார 65 ஓட்டங்களையும் தேசிய அணி வீரர் அஞ்செலோ பெரேரா 61 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். 

மறுமுனையில், றாகம அணியின் பந்துவீச்சு சார்பில் பினுர பெர்னாண்டோ 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 288 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய றாகம கிரிக்கெட் கழகம் 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியடைந்தது. 

>> Video – இலங்கை அணியின் திட்டம் என்ன? | Cricket Galatta Epi 52

றாகம கிரிக்கெட் கழகத்தின் துடுப்பாட்டம் சார்பில் ஜனித் லியனகே 42 ஓட்டங்கள் பெற்று வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களை பதிவு செய்திருக்க, NCC அணியின் வெற்றியினை தேசிய அணியின் பந்துவீச்சாளர்களான சாமிக்க கருணாரட்ன 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும், லஹிரு குமார 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியும் உறுதி செய்திருந்தனர். 

போட்டியின் சுருக்கம்

NCC – 286/7 (50) காமில் மிஷார 113, கவீன் பண்டார 65, அஞ்சலோ பெரேரா 61, இஷான் ஜயரட்ன 3/52, பினுர பெர்னாந்து 3/55

றாகம கிரிக்கெட் கழகம் – 141 (30.3) ஜனித் லியனகே 42, சாமிக்க கருணாரட்ன 4/37, லஹிரு குமார 3/30

முடிவு – NCC அணி 145 ஓட்டங்களால் வெற்றி 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<