சமநிலையில் முடிந்த 107ஆவது பொன் அணிகளின் சமர்

350

வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசிரியார் கல்லூரி அணிகள் இடையிலான 107ஆவது பொன் அணிகளின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலை அடைந்திருக்கின்றது.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று (01) நிறைவுக்கு வரும் வந்த போது யாழ்ப்பாண கல்லூரியின் முதல் இன்னிங்ஸை (189) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்.பத்திரிசியார் கல்லூரி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது.

>>வட்டுக்கோட்டை யாழ்ப்பாண அணிக்காக அசத்திய ரொபின்சன் உதயகுமார்

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடர்ந்த புனித பத்திரிசியார் அணியானது 60.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் P. மதுசன் 39 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்தார்.

இதேவேளை யாழ்ப்பாண கல்லூரியின் பந்துவீச்சில் சுழல்வீரரான விஷ்னுபோகன் 49 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்க்க, S. மதுசன் 02 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் 43 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த யாழ்ப்பாண கல்லூரி அணி 93 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தி போட்டியின் வெற்றி இலக்காக 137 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.

யாழ்ப்பாண கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே பந்துவீச்சில் அசத்திய விஷ்னுபோகன் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது காணப்பட்டிருந்தார். இதேநேரம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியின் பந்துவீச்சில் K. சாருஷன் 5 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய யாழ்ப்பாண புனித பத்திரிசியார் அணி 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டநேரம் நிறைவடைய போட்டி சமநிலை அடைந்தது.

இம்முறை யாழ்ப்பாண கல்லூரியின் பந்துவீச்சிற்காக மீண்டும் விஷ்னுபோகன் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம் 

யாழ்ப்பாண கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)-  189(80.2)ரொபின்சன் உதயகுமார் 63, அபிலாஷ் 30/3, செஹான் 30/3 

யாழ். பத்திரிசியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 146 (60.2) P. மதுசன் 39, விஷ்னுபோகன் 49/6

யாழ்ப்பாண கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 93/7d (41) விஷ்னுபோன் 30*, K. சாருஷன் 30/5 

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 24/5 (13) விஷ்னுபோகன் 8/3

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<