ஐசிசியின் ஒருநாள் அணியில் இடம்பிடித்த சமீர, ஹஸரங்க!

ICC

2006

சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் போட்டிகளுக்கான பதினொருவரில் இலங்கை அணியின் துஷ்மந்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கடந்த ஆண்டு சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கி, சிறந்த பதினொருவர் கொண்ட அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இன்று (20) அறிவித்துள்ளது.

>>ஐசிசி இன் ஆடவர் T20 அணியில் இடம்பிடித்தார் வனிந்து

வனிந்து ஹஸரங்க இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரராக வளர்ந்துவரும் நிலையில், கடந்த வருடம் மூன்று அரைச்சதங்கள் அடங்கலாக 356 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 4.56 என்ற ஓட்ட கட்டுப்பாட்டுடன் 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள நிலையில், இந்த பதினொருவரில் இடம்பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக வேகப்பந்துவீச்சில் பாரிய முன்னேற்றத்தை காட்டிவரும் துஷ்மந்த சமீர, கடந்த வருடம் 14 போட்டிகளில் விளையாடி ஒரு ஐந்து விக்கெட் குவிப்புடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிசார்பாக இரண்டாவது வீரராக இந்த பதினொருவரில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், கடந்த வருடம் ஆறு ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும் 2 சதங்கள் அடங்கலாக 405 ஓட்டங்களை குவித்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அஷாம் பதினொருவரில் இடம்பிடித்துள்ளதுடன், அணித்தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார். இவருடன் 6 போட்டிகளில் 365 ஓட்டங்களை குவித்துள்ள மற்றுமொரு பாகிஸ்தான் வீரர் பக்ஹர் ஷமானும், இந்த பதினொருவரில் இடம்பெற்றுள்ளார்.

இவர்களுடன் பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் இந்த பதினொருவரில் இடம்பிடித்துள்ளனர். விக்கெட் காப்பாளரான முஷ்பிகூர் ரஹீம், சகலதுறை வீரரான சகிப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்துவீச்சாளரான முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் கடந்த வருடம் வெளிப்படுத்திய சிறந்த பிரகாசிப்புக்களின் ஊடாக இந்த பதினொவரில் இடம்பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

குறித்த இந்த பதினொருவரில் அயர்லாந்து அணியைச் சேர்ந்த இருவர் இம்முறை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான போல் ஸ்ரேலிங் 14 போட்டிகளில் 705 ஓட்டங்களை குவித்து, 2021ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார். இவருடன், சுழல் பந்துவீச்சாளர் ஷிமி சிங் 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் தன்னுடைய பெயரை இணைத்துக்கொண்டார்.

மேற்குறித்த 9 வீரர்களுடன் தென்னாபிரிக்க அணியைச்சேர்ந்த 2 துடுப்பாட்ட வீரர்கள் 2021ம் ஆண்டுக்கான பதினொருவரில் இடம்பிடித்துள்ளனர். மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான ரஸ்ஸி வென் டர் டஸன் மற்றும் ஜெனமன் மலன் ஆகியோரே இவ்வாறு இந்த பதினொருவரில் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த பதினொருவரில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளிலிருந்து எந்த வீரர்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் 2021ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் அணி

போல் ஸ்ரேலிங், ஜெனமன் மலன், பாபர் அஷாம், பக்ஹர் ஷமான், ரஸ்ஸி வென் டர் டஸன், முஷ்பிகூர் ரஹீம், சகிப் அல் ஹஸன், வனிந்து ஹஸரங்க, முஷ்தபிசூர் ரஹ்மான், ஷிமி சிங், துஷ்மந்த சமீர

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<