டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள இலங்கை வீரர்கள்!

International League T20 2022

706

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இண்டெர்நெசனல் லீக் T20 (ILT20) தொடரின், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்காக இலங்கையைச் சேர்ந்த 5 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ILT20 தொடரில் விளையாடவுள்ள அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை அறிவித்து வருகின்றன. இந்தநிலையில், டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி தங்களுடைய குழாத்துக்கான 14 வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

ஷானக, சமீரவுடன் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் பானுக!

இதில் ஏற்கனவே இலங்கை அணியைச் சேர்ந்த பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக மற்றும் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியோர் இணைக்கப்பட்டிருந்த செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் இலங்கை அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஓய்வுபெற்ற வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி மொத்தமாக 5 இலங்கை வீரர்கள் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட இலங்கை வீரர்களுடன் மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரர் ரோவ்மன் பவல், பெபியன் எலன் ஆகியோருடன் ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ஹஷரதுல்லாஹ் ஷசாய் ஆகியோரையும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அதேநேரம், ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த சிக்கண்டர் ரஷா மற்றும் பிளெசிங் முஷரபாணியுடன், ஸ்கொட்லாந்தின் ஜோர்ஜ் மன்சே மற்றும் நெதர்லாந்தின் பிரெட் கிளாசன் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ILT20 தொடரை பொருத்தவரை ஒவ்வொரு அணிகளும் தலா 14 வெளிநாட்டு வீரர்களை அணிகளில் இணைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், கல்ப் ஜயண்ட்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் டுபாய் கெப்பிட்டல்ஸ் அணிகள் தங்களுடைய வெளிநாட்டு வீரர்களை அறிவித்துள்ளன.

இதேவேளை ILT20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபு தாபி மற்றும் ஷார்ஜாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டுபாய் கெப்பிட்டல்ஸ் அணியின் வெளிநாட்டு வீரர்கள்

ரோவ்மன் பவல், துஷ்மந்த சமீர, ஹஷரதுல்லாஹ் ஷசாய், பெபியன் அலன், முஜீப் உர் ரஹ்மான், சிக்கண்டர் ரஷா, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, டேனியல் லோவ்ரன்ஸ், பிளெசிங் முஷரபாணி, இசுரு உதான, ஜோர்ஜ் மன்சே, பிரெட் கிளாசன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<