2018ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் போட்டி வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்

211

ஜிம்பாப்வே அணிக்கெதிராக புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (13) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி, இமாம் உல் ஹக்கின் சதத்துடன் 201 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு தொடரின் வெற்றிக் கிண்ணத்தை பாகிஸ்தான்  அணி வெற்றிகொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆரம்பித்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று புலவோயா மைதானத்தில் ஆரம்பமாகியது. T-20 போட்டிகளில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வரும் பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த ஒருநாள் தொடரில் தங்களின் மீள்வருகையை உறுதிப்படுத்த காத்திருந்தது.

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பாகிஸ்தான்

அத்துடன் கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடு காரணமாக ஜிம்பாப்வே அணியின் முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் தலைவராக முத்தரப்பு தொடரின் தலைவராக செயற்பட்ட ஹெமில்டன் மசகட்ஸா, பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் தலைமை பதவியையும் ஏற்றுக்கொண்டார்.

இதன் அடிப்படையில் இரண்டு அணித்தலைவர்களும் நாணய சுழற்சியில் ஈடுபட, ஜிம்பாப்வே அணியின் தலைவர் ஹெமில்டன் மசகட்ஸா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான இந்த போட்டியில், மூன்று அறிமுக வீரர்கள் களமிறக்கப்பட்டனர். பாகிஸ்தான் அணியில் அஷிப் அலியும், ஜிம்பாப்வே அணியில் எல்.என்.ரோச்சி, ஆர்.முர்ரே ஆகியோர் களமிறங்கினர். அத்துடன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் உபாதைக்குள்ளான பாபர் அசாம் மீண்டும் சர்வதேச போட்டிக்கு திரும்பினார்.

மாற்றங்களுக்கு மத்தியில் போட்டி ஆரம்பிக்க, பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் உல் ஹக் மற்றும் பக்ஹர் சமான் ஆகியோர் மிகவும் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்து, அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். முதல் விக்கெட்டுக்காக நூறு ஓட்ட இணைப்பாட்டத்தை இருவரும் பெற்றுக்கொடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 113 ஓட்டங்களுக்கு தங்களது முதல் விக்கெட்டை இழந்தது. பக்ஹர் சமான் 60 ஓட்டங்களை பெற்றிருந்த போது, அறிமுக வீரர் ரோச்சியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்து களமிறங்கிய பாபர் அசாமுடன் இணைந்து தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை இமாம் உல் ஹக் வெளிப்படுத்தினார். உபாதையிலிருந்த பாபர் அசாம், இமாம் உல் ஹக்குடன் இணைந்து ஓரளவு சிறப்பாக துடுப்பெடுத்தாடினாலும் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அடுத்துவந்த சொஹைப் மலிக்கும் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெளியேறினார். எவ்வாறாயினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய இமாம் உல் அக், அறிமுக வீரர் அஷிப் அலியுடன் இணைந்து துடுப்பெடுத்தாடி சதத்தை கடந்தார். தொடர்ந்து தனது விக்கெட்டை தக்கவைத்துக் கொள்ள தவறிய இவர் 134 பந்துகளில் 11 பௌண்டரிகள் அடங்கலாக 128 ஓட்டங்களை பெற்று, முஷரபானியின் பந்து வீச்சில் ஓய்வறை திரும்பினார்.

அடுத்துவந்த வீரர்களில் அறிமுக வீரர் அஷிப் அலி மாத்திரம் 46 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். வெறும் நான்கு ஓட்டங்களால் தனது அறிமுக போட்டியின் அரைச்சதத்தை தவறவிட்ட இவர், சடாராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  இவருக்கு அடுத்தப்படியாக அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஜிம்பாப்வே அணியின் சார்பில் சடாரா மற்றும் ட்ரைபனோ ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷேசாத் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணம்

309 என்ற சவாலான வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பத்திலிருந்து தடுமாற்றத்தை வெளிப்படுத்தியது.  ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப விக்கெட் 3 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. சாரி 2 ஓட்டங்களை பெற்றிருந்த போது, உஸ்மான் கானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அணியின் தலைவர் மசகட்ஷா 7 ஓட்டங்கள், முசகண்டா 21 ஓட்டங்கள், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிபாஹ்பாஹ் 20 ஓட்டங்கள் மற்றும் பீட்டர் மூர் 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து விக்கட்டுகளை பறிகொடுத்து ஓய்வறை திரும்ப ஜிம்பாப்வே அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

பாகிஸ்தான் அணிசார்பில் ஆரம்பத்திலிருந்து வேகத்தால் மிரட்டிய உஸ்மான் கான் மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும், ஹசன் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரும் சவால் முன்வைக்கப்பட்டது. விக்கெட்டுகளை தக்கவைத்துக் கொள்ள பின்வரிசை வீரர்கள் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டனர்.  எனினும் இதில் ஜிம்பாப்வே அணியின் அறிமுக வீரர் முர்ரே மாத்திரம் தாக்குபிடித்து ஓட்டங்களை பெற, ஏனைய வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முர்ரேவுக்கு அடுத்ததாக களமிறங்கிய ட்ரைபனோ 12 ஓட்டங்கள், ரோச்சி 4 ஓட்டங்கள், வெல்லிங்டன் மசகட்ஷா ஓட்டமின்றி ஆட்டமிழந்ததுடன், சடாரா 5 ஓட்டங்களுடனும், முஷரபானி ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க, ஜிம்பாப்வே அணி 35 ஓவர்கள் நிறைவில் 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, 201 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது

ஜிம்பாப்வே அணியின் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய அறிமுக வீரர் முர்ரே ஒரு பௌண்டரியுடன் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்த, மிகுதி விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் அமீர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகன் விருதை இமாம் உல் ஹக் வென்றார்.

இந்த வெற்றியானது பாகிஸ்தான் அணி, இவ்வருடத்தில் பெற்ற முதல் ஒருநாள் வெற்றியாக பதிவாகியுள்ளது. 2017/18ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், பாகிஸ்தான் அணி வைட்-வொஷ் தோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத பாகிஸ்தான் அணி இவ்வருடத்தின் முதல் ஒருநாள் வெற்றியை இன்று பதிவுசெய்துள்ளது.

குல்தீப் சுழல், ரோஹித்தின் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு முதல் வெற்றி

ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புலவாயோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 308/7 (50) – இமாம் உல் ஹக் 128, அஷிப் அலி 46, சடாரா 2/49, ட்ரைபனோ 2/66

ஜிம்பாப்வே – 107 (35) – முர்ரே 32*, சதாப் கான் 4/32, பஹீம் அஷ்ரப் 2/14, உஸ்மான் கான் 2/21

முடிவு – பாகிஸ்தான் அணி 201 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<