விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?

1094
Why sudden deaths

விளையாட்டுகள் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்திருப்பதற்கான காரணம் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமல்லாமல் இவ்வாறான விளையாட்டுக்கள் மூலம் அவ்வீரர் மட்டுமன்றி அவர் சார்ந்த தரப்பினரும், நாடும் பல்வேறு வகையில் வருமானத்தினையும் பெருமையையும் ஈட்டுவதனாலாகும்.

விளையாட்டுக்கள் நடைபெறுகின்றபோது மைதானங்களில் பார்வையாளர்கள் நிரம்பியிருப்பதுடன் அவ்வீரர்களினுடைய அல்லது அந்நாட்டினுடைய ரசிகர்கள் ஆதரவினை வழங்கிக்கொண்டிருப்பார்கள். அது விளையாட்டுமீதான ஆர்வத்தையும், ஈர்ப்பையுமே வெளிப்படுத்துகின்றது.

விளையாட்டு மருத்துவம் ஏன் முக்கியத்துவமாகின்றது?

விஞ்ஞானம் உலகுக்கு தந்த கொடைகளில் ஒன்றே…

இவ்வாறான வீரர்கள் போட்டிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் பார்வையாளர்கள் முன்னிலையில்  மைதானங்களில் திடீர் இறப்புகளை சந்திப்பதனை ஊடகங்கள் வாயிலாக நாளாந்தம் அறியக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறான உயிரிழப்புகள் பாரிய சோகத்தினை சகவீரர்களிற்கு மட்டுமல்லாமல் அவரின் ரசிகர்கள், நாட்டு மக்கள் மற்றும் அவருடன் சார்ந்தவர்களிற்கும் ஏற்படுத்துகின்றது.

Source – pt.euronews.com

இவ்வாறாக ஏற்படுகின்ற திடீர் உயிரிழப்புகளை விளையாட்டு மருத்துவமானது பின்வருமாறு வரையறுக்கின்றது.

“ஆரோக்கியமான விளையாட்டு வீரரில் உபாதைகளற்ற விதத்தில் திடீரென அல்லது மயக்கமடைந்து ஆறு மணித்தியாலங்களினுள் ஏற்படுகின்ற உயிரிழப்புகளாக கருதப்படுகின்றது.”  

இவ்வாறான திடீர் உயிரிழப்பினை ஏற்படுத்துகின்ற காரணிகளில் 75% வீதமானவை அவ்விளையாட்டு வீரரின் இதயத்துடன் சார்ந்த பிரச்சினைகளினால் ஏற்படுகின்றன. அவ்வாறான, இதயத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகள் பிறப்புடன் சார்ந்த இதயத்தின் கட்டமைப்பில், தொழிற்பாட்டில் ஏற்படுகின்ற மாற்றங்களாக இருக்கின்றன.

இவ்வாறான திடீர் இறப்பினை ஏற்படுத்துகின்ற இதயத்துடனான காரணிகள் வயதடிப்படையில் மாறுபடுகின்றது. 35 வயதுக்குக் குறைந்த விளையாட்டு வீரர்களில் Hypertrophic Cardiomyopathy எனும் பரம்பரையால் கடத்தப்படுகின்ற இதயத்தின் இடது இதயவரையின் சுவர் அசாதாரன முரையில் தடிப்படைந்த நிலைமை திடீர் இறப்பிற்கான முதன்மை காரணியாகவும், 35 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு இதயத்தின் முடியுருனாடியில் ஏற்படுகின்ற அடைப்புக்களின் மூலமாகவும் திடீர் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.

இவற்றைத்தவிர இதயத்தின் தொழிற்பாட்டில் அதன் (சோடியம்,பொட்டாசியம்,கல்சியம்) அயன்களின் பரிமாற்றம் நடைபெறுகின்ற பாதையில் ஏற்படுகின்ற மாற்றம் அல்லது பிரச்சினைகள் (Ion Channelopathy) மூலமாகவும் இது நிகழலாம். (உதாரணம் –  Long QT Syndrome, Brugada Syndrome)

சில வேளைகளில் சாதாரணமாக காய்ச்சல் உண்டாக்குகின்ற வைரஸ் கிருமிகள் (Coxackie, Influenza Virus) உடலில் தங்கி இதயத்திற்கு தொற்றினை ஏற்படுத்தி இதயத்தின் தசைப் பகுதியில் பாதிப்பினை உண்டாக்கியிருக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பத்தில் இதயத் தொழிற்பாடு அதிகமாக நடைபெறுகின்றவாறு விளையாட்டுக்களில் ஈடுபடுகின்ற போது இதயம் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படுகின்றது.

சிலவேளைகளில் விளையாட்டுக்களின் போது ஆஸ்துமா வியாதி அதிகரிக்கும்போதும்கூட உயிரிழப்புக்கள் சாத்தியமாகின்றன.

இந்த ஆண்டையும் வெகுவிமர்சையாக அலங்கரிக்கும் ஐ.பி.எல். தொடர்

இந்தியாவோடு சேர்த்து உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட்..

விளையாட்டு வீரர்களிற்கு மைதானங்களில் பொதுவாக பந்துகளினால் (Football, Baseball, Lacrosse, Cricket) அல்லது விளையாட்டிற்கு பாவிக்கப்படுகின்ற துடுப்பு மட்டையினால் (Cricket Bat) அல்லது குச்சிகளினால் (Hockey Stick) இதயம் காணப்படுகின்ற இடது நெஞ்சறைப்பகுதியில் திடீரென அடிபடுவதன்மூலம் இதயமானது அதிர்வுக்குள்ளாகின்றது. ஆனால் இதயத்தின் கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. இதன்போது இதயத் தொழிற்பாடு திடீரென நின்று போவதற்குரிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு ஏற்படுமிடத்து முதலுதவி சிகிச்சை (CPR) வழங்கப்படாதவிடத்து மைதானத்தில் திடீர் உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இது Commotion cordis என விளையாட்டு மருத்துவத்துறையில் அழைக்கப்படுகின்றது.

Source – Lifeinthefastlane.com

சூழற்காரணிகள் சில வேளைகளில் இவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. 1998ஆம் ஆண்டு மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள கொங்கோ நாட்டில் நடைபெற்ற கழகங்களிற்கிடையிலான போட்டியொன்றில் மின்னல் தாக்கி ஒரு கழகத்தின் 11 வீரர்களும் உயிரிழந்தனர்.

சூழல் வெப்பநிலை, ஈரப்பதன் அதிகமாக காணப்படும் காலநிலையில் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது  உடலில் உருவாகும் வெப்பமானது உடலிலிருந்து இழக்கப்படுதலில் பாதிப்பு உண்டாகின்றது. இவ்வாறு உடல் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டு செல்லும்போது உடல் வெப்பநிலை சீராக்கற் பொறிமுறை (Thermo Regulatory Mechanism) பாதிப்படைவதனால் தசை, உடற்கலங்கள் மற்றும் மூளை என்பன பாதிப்படைவதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறான நிலைமை Heat Stroke என அழைக்கப்படுகின்றது. இது  விளையாட்டு வீரர்களிற்கு உயிரிழப்பினை ஏற்படுத்துகின்ற காரணிகளில் முக்கியத்துவம் பெருகின்றது.

விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்பினை தடுக்கின்ற வழிமுறைகள்.

இதயத்துடன் சார்ந்த திடீர் உயரிழப்புகள் பொதுவாக தொடர்ச்சியாக ஓட்சிசன் பாவித்து சக்தி (Aerobic Mechanism) உருவாக்கத்தின் மூலம் விளையாடப்படுகின்ற விளையாட்டுக்களில் (Endurance Sports) நிகழ்கின்றன. இவ்வாறான விளையாட்டுக்களின் போது சக்தி உருவாக்கத்திற்கான ஒட்சிசன் உடலிலுள்ள அனைத்து செயற்படக்கூடிய வன்கூட்டுத் தசைகளிற்கும் குருதியின் மூலமாக கொண்டு செல்லப்படவேண்டி இருப்பதனால் இதயம் பன்மடங்கு இயங்க வேண்டியுள்ளதனால் இதயத்தில் பாதிப்பு இருக்குமிடத்து இதயத் தொழிற்பாடு திடீரென நிண்றுவிடுகின்றது. இதனால் உயிரழப்பு நிகழ்கின்றது.

அவ்வாறான விளையாட்டுக்களாக மரதனோட்டம், சைக்கிளோட்டம், நீச்சல், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் போன்ற முன்னணி விளையாட்டுக்களை குறிப்பிட்டுக் கூறமுடியும்.

காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின்..

எனவே, இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுகின்ற விளையாட்டு வீரர்கள் விளையாட்டுக்கு முன்னரான உடற்தகுதி மருத்துவப் பரிசோதனையின் (Pre-Participation Physical Examination) பின்னர் அதற்கான சான்றிதழ் பெற்றுக்கொள்வது கட்டாயமாகின்றது. இவ்வாறான மருத்துவப் பரிசோதனை மூலமே பெரும்பாலான இதயத்துடன் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாமல் இதர காரணிகளும் கண்டறியப்படுகின்றது. அத்துடன் திடீர் இறப்புக்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

Source – health.usnews.com

வைரஸ் காய்ச்சல்கள் ஏற்படுமிடத்து காய்ச்சலிற்கான சிகிச்சையின் பிற்பாடு குறைந்தது 2 கிழமைகள் ஓய்விற்குப் பின்னர் மீண்டும் விளையாட்டிற்கு திரும்புதல் வேண்டும்.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் காலநிலை கட்டாயம் கருத்திற்கொள்ளப்படல் வேண்டும். சர்வதேச போட்டிகளில் WBGT (Wet Bulb Globe Temperature) கருவி மூலம் சூழல் வெப்பநிலை, சூரிய கதிர்வீச்சு, ஈரப்பதனினை அடிப்படையாகக் கொண்டு போட்டி நடத்தும் இடம், காலங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

இவ்வாறான திடீர் மரணத்திற்கான காரணிகள் மற்றும் இதற்கான காப்பு வழிமுறைகளை அறிந்து வைத்திருக்குமிடத்து வீரர்களும், விளையாட்டு சார்ந்த பிரிவினரும் தம்மையும் தமக்கு நெருக்கமானவர்களையும் இவ்வாறான இறப்புக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.  

இது போன்றே, விளையாட்டுக்களில் ஈடுபடும் அனைவரும், தமது உடல் உள ஆரோக்கியம் குறித்தும் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமாக உள்ளது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<