யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி

242

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற்பகுதியாட்டம் மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் பயிற்றுவிப்பாளர்களின் சாதுரியம், திட்டமிடல் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க உதவும் வகையிலும் மிகவும் விறுவிறுப்பான முறையில் போட்டிகள் நடை பெற்றது.

ஆசிய விளையாட்டு விழா இன்று ஜகார்த்தாவில் கோலாகலமாக ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி றிபேக் கல்லூரிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் சாவகச்சேரி றிபேக் கல்லூரி வருகைதராத காரணத்தால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி நேரடியாக அரையிறுதிக்குள் நுழைந்தது. புனித பத்திரிசியார் கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதல் பகுதி 12 – 07, இரண்டாம் பகுதி 19 – 07, மூன்றாம் பகுதி 13 – 08, நான்காம்  பகுதி 10 – 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் போட்டி நிறைவடைந்தது. முதல் மூன்று பகுதிகளில் பத்திரிசியார் தொடர்ந்து முன்னிலை வகித்தது. இறுதிப் பகுதியாட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி பத்திரிசியார் கல்லுரியை விட அதிகமாக மூன்று புள்ளிகளைப் பெற்ற நிலையிலும் ஆரம்பத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று தன் வசம் வெற்றியைக் கொண்டிருந்த புனித பத்திரிசியார் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரியை விட 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான காலிறுதிப் போட்டியில் மிகவும் சிறப்பான முறையில் தம் பக்கம் புள்ளிகளை பெற்று, எதிரணியினருக்கு புள்ளிகளை விட்டுக்கொடுக்காத வண்ணமும் பாதுகாத்து முதல் பகுதியில் 17 புள்ளிகளைப் யாழ் மத்திய கல்லூரி அணி பெற்றிருந்தது. இரண்டாம் கால் பகுதியில் புனித பரியோவான் கல்லூரி அணியும் தம்பக்கம் புள்ளிகளை பெற ஆரம்பித்தன. இரண்டாம் கால் பகுதியில் 07 – 09 என்று புள்ளிகள் அமைந்தன. மூன்றாம் கால் பகுதியில் 09 – 11 என்ற புள்ளிகள் கணக்கிலும், இறுதிக் கால் பகுதி 04 – 10 என்றும் புள்ளிகள் அமைந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரை திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி யாழ் மத்திய கல்லூரி அணி அரையிறுத்திக்கு தகுதி பெற்றது.

சென். மைக்கல்ஸ் மற்றும் மல்லாவி மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டியில் முதல் கால் பகுதியில் சென். மைக்கல்ஸ் அணி 28 புள்ளிகளைப் பெற்ற நிலையில் எதிரணி எந்தப் புள்ளிகளும் பெறாதவகையிலும் சிறப்பாக விளையாடியிருந்தது. இரண்டாம் கால் பகுதி 12 – 01 என புள்ளிகள் அமைந்தது. மூன்றாம் கால் பகுதி 01 – 07 என்ற புள்ளிகள் கணக்கில் முடிவடைய இறுதிக் கால் பகுதி 12 – 06 என்ற புள்ளிகள் கணக்கில் முடிவிற்கு வந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்.மைக்கல்ஸ் கல்லூரி அணி வீரர்கள் 53 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தனர்.

நான்கு காலிறுதிப் போட்டிகளிலும் வெற்றி  பெற்ற நான்கு அணிகளும் அரையிறுதியில் மோதிக் கொண்டன. இதன்படி முதலாவது அரையிறுதியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி யாழ் மத்திய கல்லூரி அணியுடன் மோதிக்கொண்டது. 13 – 09, 11 – 07, 13 – 09, 11 – 11 என்ற புள்ளிகள் கணக்கில் ஒவ்வொரு பகுதியும் முடிவிற்கு வந்தது. அதிக புள்ளிகளை தன்வசப்படுத்திய யாழ் மத்திய கல்லூரி அணி புனித பத்திரிசியார் அணியை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

ஆசிய விளையாட்டு விழாவுக்கு இடையே இந்தோனேசியாவில் உயர்தர பரீட்சை எழுதும் அகலங்க

சென். மைக்கல்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ் இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தபோதும் ஆரம்பம் முதல் சென்.மைக்கல்ஸ் கல்லூரி புள்ளிகள் மூலம் ஆதிக்க செலுத்த தொடங்கியது. முதல்  பாதி முடிவின் போது யாழ் இந்துக் கல்லூரி அணியை விட 10 புள்ளிகள் அதிகமாகப் பெற்று முன்னிலையிலிருந்தது. யாழ் இந்துக் கல்லூரி அணி 24 புள்ளிகளையும் சென். மைக்கல்ஸ் அணி 34 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது. சென்.மைக்கல்ஸ் அணி 10 புள்ளிகளை அதிகமாக பெற்றிருந்த நிலையில், யாழ் இந்துக் கல்லூரி அணி எந்தவொரு சளைப்புத்தன்மையும் இல்லாது இரண்டாவது பாதியில் மிகவும் விறு விறுப்புடன் மோதிக் கொண்டது. சென்.மைக்கல்ஸ் அணி 64 புள்ளிகளையும் யாழ் இந்துக் கல்லூரி அணி 47 புள்ளிகளையும் பெற்ற நிலையில் போட்டி முடிவிற்கு வந்தது. இதனால் சென்.மைக்கல்ஸ் கல்லூரி 17 புள்ளிகள் வித்தியாசத்தில் யாழ் இந்துக் கல்லூரியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

13.08.2018 மாலை மூன்று மணியளவில் நடைபெற்ற மூன்றாமிடத்திற்கான போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் இந்துக் கல்லூரி அணி மோதிக்கொண்டது. இதில் இரு அணிகளும் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறப்பாக விளையாடியிருந்தது. எனினும் தமக்குரிய சாதகத்தன்மையைப் பயன்படுத்தி சாதுரியமாக விளையாடி மூன்றாமிடத்திற்கான இடத்தை யாழ் இந்துக் கல்லூரி அணி பிடித்துக்கொண்டது.

சென் மைக்கல்ஸ் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் யாழ். மத்திய கல்லூரி அதிக புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் காணப்பட்டது. முதல் கால் பகுதியானது யாழ்.மத்திய கல்லூரி அணி 12 புள்ளிகளையும் சென்.மைக்கல்ஸ் அணி 09 புள்ளிகளையும் பெற்ற நிலையில் முடிவடைந்தது. இரண்டாம் கால் பகுதியில் புள்ளிகளால் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தத் தொடங்கிய சென்.மைக்கல்ஸ் அணி அந்த பகுதியில் எதிரணியை இரு புள்ளிகள் மாத்திரம் பெறுவதற்கு இடமளித்து அதே வேளை தாம் 20 புள்ளிகளை பெற்று அதிக புள்ளிகளுடன் ஆட்டத்தை தம் பக்கம் மாற்றிக்கொண்டனர். மூன்றாம் நான்காம் கால்ப் பகுதியிலும் 20 – 16, 19 – 08 எனப் புள்ளிகள் பெறப்பட்டிருந்தன. போட்டி முடிவில் சென்.மைக்கல்ஸ் கல்லூரி அணி 66 புள்ளிகளையும் யாழ். மத்திய கல்லூரி அணி 38 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டது.

இரு அணிகளும் இறுதியாட்டத்தில் சிறப்பாக மோதியிருந்தபோதும் சென்.மைக்கல்ஸ் அணியின் சிறப்பான ஆட்டம் அவர்களது வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது. அனைத்து அணிகளுடனும் அதிக வித்தியாசத்தில் புள்ளிகளைப் பெற்று இந்தப் போட்டியில் வெற்றியை பெற்ற தன்மையானது ஆரம்ப காலங்களில் சென்.மைக்கல்ஸ் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி நாட்டில் தனெக்கென ஒரு இடத்தை கூடைப்பந்தாட்ட அரங்கில் பிடித்துக்கொண்ட நிலையை ரசிகர்கள் மத்தியில் மீட்டிப் பார்க்க வைக்கின்றது. மீண்டும் தமக்கான பதிவுகளை ஏற்படுத்தும் வகையில் வளர்ந்து வரும் நிலையைக் இந்த அணியிடம் பார்க்க முடிந்தது. எந்தவெரு வீரரிலும் தங்கி நிற்காத தன்மையுடன் அனைத்து வீரர்களும் சமனிலையில் விளையாடும் நிலை பார்ப்பவர்களை   ரசிக்க வைத்தது.

எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்

அத்துடன் பெண்களிற்கான போட்டியில் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அனைத்து அணிகளுடனும் திறமையாக விளையாடி புள்ளிகள் அடிப்படையில் சம்பியன் பட்டத்தைப்  பெற்றுக்கொண்டது. கொக்குவில் இந்துக் கல்லூரியுடன் விளையாடி 60 புள்ளிகளைப் பெற்று அந்த அணியை 2 புள்ளிகள் பெற அனுமதித்தது. யாழ் மெதடிஸ்ட் கல்லூரியுடன் விளையாடி 60 புள்ளிகளைப் பெற்ற அதே வேளை அந்த அணியை 2 புள்ளிகள் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருந்தது. யாழ் உடுவில் மகளிர் கல்லூரியுடன் மோதி 39 புள்ளிகளைப் பெற்றிருந்தது. நான்கு அணிகள் பங்குபற்றிய இந்த ஆட்டத்தில் வேம்படி மகளிர் அணி சம்பியனானது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<