ஆஸியை வீழ்த்த இந்தியாவின் யுக்திகளைக் கையாளவுள்ள இலங்கை அணி

881

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது போல தங்களாலும் அதை செய்ய முடியும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சுப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

அவுஸ்திரேலியாவை சுமார் 71 வருடங்களுக்குப் பிறகு அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய நாடு என்ற சாதனையை இந்திய அணி அண்மையில் நிகழ்த்தியது. எனவே, அவுஸ்திரேலிய மண்ணில் இதுவரை எந்தவொரு டெஸ்ட் வெற்றியையும் பெற்றுக்கொள்ளாத இலங்கைக்கு அந்த அரிய வாய்ப்பு தற்போது கிட்டியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கபாவில் இளஞ்சிவப்பு பந்தைக் கொண்ட பகலிரவுப் போட்டியாக நாளை (24) ஆரம்பமாகவுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணியின் ஆயத்தம் குறித்து நேற்று (22) கபா மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ருமேஷ் ரத்னாயக்க கருத்து வெளியிடுகையில்,

அவுஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியின் பந்துவீச்சு உத்திகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தெந்த இடங்களில் இந்தியர்கள் பந்து வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதாவது இந்திய அணி பந்தவீச்சாளர்கள் என்ன செய்தார்களோ, மற்ற அணியினர் என்ன செய்தார்களோ அதை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படுத்த நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

பகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு …

துடுப்பாட்டம், பந்துவீச்சு, ஏன் களத்தடுப்பிலும் கூட இந்திய அணி தம்மை நிரூபித்துள்ளது. அதை இந்திய அணி வீரர்கள் எங்கு சென்றாலும் நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இந்தியா செய்ததை நாங்களும் இங்கு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதுமாத்திரமின்றி, இங்கு முதல்தடவையாக டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளோம். நாங்கள் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். தற்போது இங்கு வந்துள்ளோம். இந்த தொடருக்குப் பிறகு தென்னாபிரிக்கா செல்கிறோம். ஆகவே அவுஸ்திரேலியாவில் வெல்ல வேண்டும் என்பதுதான் எமது இலக்காகும்.

இந்த முறை அவுஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னடைவு மற்றும் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியாவை வீழ்த்துவது மிகவும் கடினம். அதேபோன்று, அவுஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது என ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலியாவுடனான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

நுவன் பிரதீப்புக்கு பதில் மாற்று வீரராக இடதுகை மித வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாண்டோ அணியில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும், அவருக்கு இதுவரை வீஸா கிடைக்காத காரணத்தால் அதுதொடர்பில் உறுதியான தகல்கள் வெளியாகவில்லை.

எனினும், இலங்கை அணியில் சுரங்க லக்மால், லஹிரு குமார, துஷ்மன்த சமீர மற்றும் கசுன் ராஜித்த என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் இளம் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, அபார திறமையை வெளிப்படுத்துவார் என தான் எதிர்பார்ப்பதாகவும் ருமேஷ் ரத்னாயக்க இதன்போது குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணியின் வேகப்பந்து …

லஹிரு குமார மிகவும் புத்திசாலித்தனமான இளம் வீரர். இலங்கையைப் பொறுத்தமட்டில் அவருடைய வேகம் முன்னிலையில் இருந்தாலும், அவுஸ்திரேலியாவில் அது குறைவாக இருக்கலாம். ஏனென்றால் அவர் சில நேரங்களில் மணிக்கு 148 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசுவார். ஆனால் அவர் தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி வருகின்றார்.  உண்மையில் அவர் ஒரு இளம் வீரர். எனவே அவருக்கு கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மேற்கிந்திய தீவுகளில அவரது அபார பந்துவீச்சுதான் நான் கண்ட அதிசிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது என ருமேஷ் ரத்னாயக்க தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ருமேஷ் ரத்னாயக்க, 1989ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஹோபார்ட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். இது இலங்கை வீரரொருவர் அவுஸ்திரேலிய மண்ணில் பெற்றுக்கொண்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் பதிவாகியது.

எனவே, இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், லசித் மாலிங்க, ரங்கன ஹேரத் ஆகிய வீரர்களினால் பெற்றுக்கொள்ள முடியாதுபோன அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுமதியை அவுஸ்திரேலிய மண்ணில் பதிவுசெய்துள்ள தற்போதைய வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளரான ருமேஷ் ரத்னாயக்கவின் வழிகாட்டலில் இலங்கை வேகப்பந்துவீச்சாளர்கள் நாளை (24) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்துவார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<