பகலிரவு டெஸ்ட் போட்டியில் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை

1180

சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ள முதல் போட்டி நாளை (24) பிரிஸ்பேனில் உள்ள த கெப்பா (The Gabba) கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள்

அடுத்து நடைபெறவுள்ள இரு டெஸ்ட் தொடர்களின் பின்னர்..

இந்த முதல் போட்டியை பொருத்தவரை இரண்டு அணிகளுக்கும் வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக அமையவுள்ளது. இரு அணிகளும் இதற்கு முன்னர் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன. பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இவ்விரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் மோதல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

எனினும், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் அண்மைய போட்டி முடிவுகள் சொல்லும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. இலங்கை அணியை பொருத்தவரை இறுதியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடர் மாத்திமே மோசமான தோல்வியாக அமைந்திருந்தது. இதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1-0 என இழந்திருந்த போதும், குறித்த தொடரில் இலங்கை அணியின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தன.

ஆனால், அவுஸ்திரேலிய அணியானது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருகின்றது. இறுதியாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இழந்திருந்தது. அதேநேரம், கேப்டவுன் (பந்தை சேதப்படுத்திய) விவகாரத்துக்கு பின்னர், ஆஸி. அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 தோல்விகளை சந்தித்துள்ளதுடன், ஒரு வெற்றியை மாத்திரமே பெற்றிருக்கிறது.

அவுஸ்திரேலிய அணியுடன் ஒப்பிடும் போது, இலங்கை அணி கடந்த வருடம் சற்று சிறப்பான ஆட்டங்களை டெஸ்ட் போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளது.  2018ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 4 வெற்றிகளை பெற்றிருக்கிறது. அத்துடன், இறுதியாக டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள தென்னாபிரிக்க அணியை 2-0 என வீழ்த்தியதுடன், மேற்கிந்திய தீவுகளில் 1-1 என தொடரை சமப்படுத்தியிருக்கிறது.

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

இலங்கை கிரிக்கெட் அணியுடனான பயிற்சிப்..

இவ்வாறான நிலையில், இரு அணிகளும் தங்களுடைய பின்னடைவுகளை சரிசெய்து, மீண்டும் எழுச்சிப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை, இரண்டு அணிகளும் தங்களுடைய பதிவுகளை பலமாக கொண்டுள்ளன. இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய அணியும், 2 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியும் இதுவரை தோல்விகளை சந்திக்கவில்லை. இதனால் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த மோதல் விறுவிறுப்பாக இருக்கும் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு அணிகளினதும் கடந்த கால மோதல்கள்

இரண்டு அணிகளதும் கடந்த கால முடிவுகளை பார்க்கும் போது, அவுஸ்திரேலிய அணி அதிகமான ஆதிக்கத்தை கொண்டிருக்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை 12 இருதரப்பு டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளதுடன், இதில் 10 தொடர்களை அவுஸ்திரேலிய அணி கைவசப்படுத்தியுள்ளதுடன், இலங்கை அணி 2 தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. அதிலும், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 6 தொடர்களையும் மொத்தமாக அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டியுள்ளது.

Photo Album : Sri Lanka training session ahead of ‘Gabba’ Day & Night Test match

அதேபோன்று இரு அணிகளும் 29 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளதுடன்,  இலங்கை அணி 4 வெற்றிகளையும், அவுஸ்திரேலிய அணி 17 வெற்றிகளையும் பெற்றுள்ளன. முக்கியமாக இலங்கை அணி அவுஸ்திரேலியாவில் விளையாடிய 13 போட்டிகளில், எந்தவொரு வெற்றியையும் பெறவில்லை என்பது முக்கிய அம்சமாகும். அத்துடன், முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள த கெப்பா மைதானத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியை சமநிலைப்படுத்தியுள்ளதுடன், ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்

இடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக..

உத்தேச பதினொருவர்

இலங்கை

திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா, தினேஷ் சந்திமால் (தலைவர்), ரொஷேன் சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு குமார, துஷ்மந்த சமீர

அவுஸ்திரேலியா

ஜோ பர்ன்ஸ், மார்கஸ் ஹெரிஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட், குர்டிஸ் பெட்டர்சன், டிம் பெய்ன் (தலைவர்), நெதன் லையோன், மெர்னஸ் லெபுச்செங், பீட்டர் சிட்ல், மிச்சல் ஸ்டார்க், ஜெய் ரிச்சட்சன்

எதிர்பார்ப்பு வீரர்கள்

  • குசல் மெண்டிஸ்

இந்த டெஸ்ட் தொடரை பொருத்தவரை இலங்கை அணியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக குசல் மெண்டிஸ் மாறியுள்ளார். உபாதை காரணமாக பயிற்சிப் போட்டியில் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடவில்லை என்றாலும், இத்தருணத்தில் அவரது துடுப்பாட்டம் அணிக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இலங்கை அணியின் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மெதிவ்ஸுடன் இணைந்து மெண்டிஸ் பலப்படுத்தி வந்தார். குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடராகட்டும், இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடராகட்டும் இரண்டிலும் மெண்டிஸ் ஓட்டங்களை குவித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கிய இலங்கை அணியை மெதிவ்ஸுடன் இணைந்து இரண்டாவது இன்னிங்ஸில் காப்பாற்றியதுடன், ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

அதேவேளை, கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியுடன் இணைந்து, டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இதனால், இந்த தொடரில் மெண்டிஸின் துடுப்பாட்டம் இலங்கை அணியின் பெறுபேற்றில் பாரிய செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • உஸ்மான் கவாஜா

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் சோதனைகளுக்கு முகங்கொடுத்து வரும் அவுஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்ட வீரராக மாறியிருப்பவர் உஸ்மான் கவாஜா. வோர்னர் மற்றும் ஸ்மித் ஆகியோரின் வெளியேற்றத்துக்கு பின்னர், துடுப்பாட்டத்தை கட்டியெழுப்ப அவுஸ்திரேலிய அணி, போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் சில முக்கியமான ஆட்டங்களை கவாஜா வெளிப்படுத்தியுள்ளார்.

பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை சோதித்த ஆஸி.

இலங்கை மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலிய பதினொருவர்..

முக்கியமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கிய அவுஸ்திரேலிய அணியை தனது அற்புதமான சதத்தின் மூலம் காப்பாற்றியிருந்தார். அதேநேரம், கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்றுள்ள இவர், 19 இன்னிங்சுகளில் 592 ஓட்டங்களை குவித்துள்ளார்.

ஆடுகள நிலைமை

பிரிஸ்பேன் த கெப்பா ஆடுகளத்தை பொருத்தவரை, துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. ஆடுகளம் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான நிலைமைகளை கொடுக்க வாய்ப்பிருந்தாலும், பின்னர் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. அத்துடன், சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் அதிகமான பௌன்ஸ்களை (Bounce) வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை போட்டி நடக்கும் தினங்களில் மேகங்கள் சூழ்ந்த மந்தமான நிலை காணப்பட்டாலும், மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு 25 சதவீதத்திலும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க