சுழல் பந்துவீச்சு மூலம் இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள இலங்கை

475

ஒருநாள் மற்றும் T20 தொடர்களின் தோல்விகளை விடுத்து, டெஸ்ட் தொடர் என்ற வகையில் பார்க்கும் போது, இரண்டு அணிகளும் சம பலமான அணிகளாக உள்ளன என இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அத்துடன் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சின் வலிமையை வைத்து பார்க்கும் போது, இங்கிலாந்து அணியை விட இலங்கை அணி முன்னேற்றமுடைய அணியாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொண்ணூறுகளின் இறுதி நாயகனுக்கு விடைகொடுக்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி

உலகின் அதிகூடிய டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இடதுகை சுழற்பந்து வீச்சாளரும்…

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து வெளியிட்ட தினேஷ் சந்திமால்,

“ஒருநாள் தொடரை நோக்கும் போது, இங்கிலாந்து அணி அதிகமான போட்டிகளில் விளையாடி, அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. அதன் மூலம் அவர்கள் ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தனர். எனினும் டெஸ்ட் தொடரை பொருத்தவரை இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

முக்கியமாக இலங்கை அணியின் அனுபவம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணிக்கு கடுமையான சவாலை கொடுப்பார்கள் என நம்புகிறேன். அதேநேரம் இங்கிலாந்து அணி பலம் குறைந்த அணியல்ல. அவர்களிடம் சிறந்த துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணி இருக்கிறது. அவர்களை குறைத்து மதிப்பிடவும் முடியாது. ஆகவே, எமக்கு கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை பயன்படுத்தி, எமது பலத்தை வெளிக்காட்ட வேண்டும்”

ரங்கன ஹேரத்தின் ஓய்வு குறித்து குறிப்பிட்ட சந்திமால்,

“ரங்கன ஹேரத் எமது நாட்டுக்காக புரிந்த சேவையை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். அப்படி ஒரு வீரர் ஓய்வு பெறுகிறார் என்பது எமக்கு மிகப்பெரிய இழப்பு. அவரது ஓய்வு எனக்கும், சக அணி வீரர்களுக்கும் வருத்தமளிக்கிறது.

ரங்கன ஹேரத் ஒரு மதிப்பிற்குறிய வீரர். நான் இலங்கை டெஸ்ட் அணியின் தலைமைத்துவத்தை ஏற்றிருந்த போது, அவரது பங்களிப்பு எனக்கு மிகப்பெரிய சக்தியாகவும், உதவியாகவும் இருந்தது. இப்போது அணியென்ற ரீதியில் நாம் எதிர்பார்க்கும் விடயம், எங்களது நூறு சதவீதத்தை வழங்கி, முதல் டெஸ்ட் மற்றும் தொடரை கைப்பற்றி, ரங்கன ஹேரத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான்”

அணி விபரம் குறித்து கருத்து வெளியிடுகையில்,

“சீரற்ற காலநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக ஆடுகளத்தின் தன்மையை எம்மால் ஆராய முடியவில்லை. நேற்று முன்தினம் மாத்திரமே ஆடுகளத்தை பார்வையிட்டிருந்தோம். அதனால் இதுவரை நாளைய போட்டிக்கான பதினொருவரை தீர்மானிக்கவில்லை. எனினும், காலி மைதானமானது அதிகமாக பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். எவ்வாறாயினும் நாளைய தினம் ஆடுகளத்தை ஆராய்ந்த பின்னரே பதினொருவரை தெரிவுசெய்வோம்” என்றார்.

இதேவேளை இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் கருத்து வெளியிடுகையில்,

“எமது அணி சிறந்த வீரர்களுடன் களமிறங்குகிறது. குறிப்பாக எந்தவித ஆடுகளங்களிலும் துடுப்பாடக்கூடிய திறமையினை வீரர்கள் வளர்த்துக் கொண்டுள்ளனர். அத்துடன், பென் ஸ்டோக்ஸின் சகலதுறை பிரகாசிப்பு அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சொத்து விபரங்களை வெளியிடுவதாக அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் தமது சொத்து விபரங்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கு…

அலெஸ்ரியா குக்கின் இழப்பு தொடர்பாக குறிப்பிட்ட ஜோ ரூட்?

“காலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியானது அலெஸ்ரியா குக் இல்லாமல் நான் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. அவர் அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு. அவரது அனுபவம் மற்றும் அணிக்கு வழங்கிய பங்களிப்பு என்பன அணியை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் சென்றது என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. தற்போது ஏனைய வீரர் ஒருவர் அவரின் இடத்தை பூர்த்திசெய்வதற்கு தயாராக வேண்டும்”

ரங்கன ஹேரத் தொடர்பில் ரூட்,

“ரங்கன ஹேரத் மதிக்கப்படக்கூடிய வீரர். சுமார் 19 வருடங்கள் இலங்கை அணிக்கு அற்புதமான பங்களிப்பை அவர் வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். அவர் மிகச்சிறந்த போட்டியாளர். அவர் எதிரணிக்கு சாவால் விடுக்கக்கூடிய பந்து வீச்சாளரும் கூட. அவருக்கு எமது வாழ்த்துகள்” என்றார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதாத்தில் நாளைய தினம் (06) ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<