உள்ளூர் மகளிர் கிரிக்கெட்டில் பிரகாசித்த கவீஷா, ஹன்சிமா, சமரி

Women’s Inter-Club Division I 50-over Cricket Tournament 2022

119

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் இன்று (23) ஆரம்பித்துள்ள மகளிருக்கான டிவிஷன் 1 உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் கவீஷா டில்ஹாரி ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களை விளாசியது மாத்திரமின்றி பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியும் அசத்தியுள்ளார்.

தொடர் ஆரம்பித்த இன்றைய நாளில் 4 போட்டிகள் நடைபெற்றன. இதில் கடற்படை விளையாட்டு கழகம், விமானப்படை அணி, சீனிகம கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டு கழகங்கள் வெற்றிகளை பதிவுசெய்தன.

சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு இரண்டாவது தோல்வி

சீனிகம கிரிக்கெட் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – ஆர். பிரேமதாஸ மைதானம்

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சீனிகம அணிக்கு 6 ஆவது விக்கெட்டுக்காக கவீஷா டில்ஹாரி மற்றும் பியூமி வத்ஸலா ஆகியோர் 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொடுக்க, சீனிகம அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சீனிகம அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் கவீஷா டில்ஹாரி ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களையும், பியூமி ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, உதிரியாக மேரியன்ஸ் அணி 30 ஓட்டங்களை வழங்கியது.

பாரிய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு கவீஷா டில்ஹாரி மற்றும் சச்சினி நிசன்சலா ஆகியோர் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி நெருக்கடி கொடுக்க சிலாபம் அணி 28.2 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், சமரி அதபத்து 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, கவீஷா மற்றும் சச்சினி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சுருக்கம்

சீனிகம கிரிக்கெட் கழகம் – 240/5 (50) – கவீஷா டில்ஹாரி 91*, பியூமி வத்ஸலா 50*, மல்ஷா மதுஷானி 1/13

சிலாபம் மேரியன்ஸ் – 147 (28.2) – சமரி அதபத்து 66, கவீஷா டில்ஹாரி 4/39, சச்சினி நிசன்சலா 4/41

சீனிகம அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

கடற்படை விளையாட்டு கழகம் எதிர் விமானப்படை கழகம் (B) – வெலிசர

கடற்படை அணியின் துடுப்பாட்ட வீராங்கனை ஹன்சிமா கருணாரத்ன 125 பந்துகளுக்கு 104 ஓட்டங்களை விளாசியதுடன், விமானப்படை அணிக்கு எதிரான போட்டியில் கடற்படை அணி 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய கடற்படை அணி 50 ஓவர்கள் நிறைவில் 251 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஹன்சிமா கருணாரத்ன 104 ஓட்டங்களை விளாசினார். தொடர்ந்து களமிறங்கிய விமானப்படை அணி (B) அணி 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.

சுருக்கம்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 251/5 (50) – ஹன்சிமா கருணாரத்ன 104*, ஹர்சிதா சமரவிக்ரம 58, உஷானி ருவாந்திகா 3/26

விமானப்படை விளையாட்டுக் கழகம் (B) – 73 (25.4) – சுரங்கிகா பெரேரா 23, உதேஷிகா பிரபோதனி 3/12, சசிகலா சிறிவர்தன 3/13

கடற்படை அணி 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

விமானப்படை விளையாட்டு கழகம் A எதிர் இராணுவப்படை கழகம் B – கட்டுநாயக்க

சமரி பொல்கம்பொல மற்றும் ஓஷதி ரணசிங்க ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் 272 ஓட்டங்களை குவித்துக்கொண்ட விமானப்படை அணி 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

விமானப்படை அணி 272 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதற்கு உதவியாக இருந்த சமரி 82 ஓட்டங்களையும், ஓஷதி 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணி 81 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க, சமரி 3 விக்கெட்டுகளையும், ஓஷதி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சுருக்கம்

விமானப்படை அணி (A) – 272/7(50) – சமரி பொல்கம்பொல 82, ஓஷதி ரணசிங்க 71, சச்சினி டி சில்வா 2/28

இராணுவப்படை அணி (B) – 81 (44.2) – ஆயிஷா சந்திரசிறி 15, சமரி பொல்கம்பொல 3/8, ஓஷதி ரணசிங்க 2/7

விமானப்படை அணி 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவப்படை கழகம் (A) – பனாகொட

இன்றைய நாளில் மிகவும் விரைவாக நிறைவுபெற்ற போட்டியாக இந்தப்போட்டி அமைந்திருந்தது. கோல்ட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 32.4 ஓவர்களில் வெறும் 45 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணி 13.5 ஓவர்கள் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது.

கோல்ட்ஸ் அணி சார்பாக ஜனகதிமல 10 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற, கனீஷா சமரி 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இராணுவப்படை அணி சார்பாக அனுஷ்கா சஞ்சீவினி ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களை பெற்றார்.

சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 45 (32.4) – ஜனகதிமல 10, கனீஷா சமரி 6/7, அச்சினி குலசூரிய 2/19

இராணுவப்படை விளையாட்டு கழகம் – 45/1 (13.5) – அனுஷ்கா சஞ்சீவினி 16*, ரோஷினி பெரேரா 12, நிமேஷா மதுஷானி 1/21

இராணுவப்படை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<