ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 17 வருடங்களின் பின்னர் இருதரப்பு  தொடரொன்றில் விளையாடுவதற்காக இலங்கை வந்திருக்கின்றது.  இந்நிலையில், வித்தியாசமான ஒரு குழாத்தைக் கொண்டுள்ள இலங்கை வீரர்கள் எவ்வாறு விருந்தாளிகளை எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இலங்கை அணி இறுதியாக, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜிம்பாப்வேயின் சொந்த மண்ணில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் அவ்வணியை சந்தித்திருந்தது. குறித்த தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்த இலங்கை, 6 விக்கெட்டுக்களால் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரின் சம்பியனாகவும் மாறியிருந்தது.

கிரஹாம் போர்ட் மற்றும் சங்கக்கார எவ்வாறு இலங்கை கிரிக்கெட் சபையினால் இழிவுபடுத்தப்பட்டனர்?

ஒரு கிரிக்கெட் வீரராக ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மற்றும் உலகக் கிண்ணத்தை..

அந்த முக்கோண ஒரு நாள் தொடரினை அடுத்து, 8 மாதங்களின் பின்னர் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரில்,  நாளை (30) ஜிம்பாப்வே அணியினை இலங்கை எதிர்கொள்கின்றது.

இலங்கை – ஜிம்பாப்வே ஒரு நாள் போட்டிகள் வரலாறு

நடைபெறப்போகும் போட்டியானது, இரண்டு அணிகளும் மோதும் 51 ஆவது ஒரு நாள் போட்டியாக அமையவிருக்கின்றது. முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் 41 போட்டிகளினை இலங்கை கைப்பற்றியதோடு, 7 போட்டிகளில் மாத்திரமே கத்துக்குட்டி அணியான ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருக்கின்றது. 2 போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றுள்ளன.SlvZIm stats

இதுவரை தமது சொந்த மண்ணில், ஜிம்பாப்வே அணியுடன் விளையாடியிருந்த எந்த போட்டியிலும் தோல்வியினை சந்திக்காத இலங்கை அணியானது இறுதியாக, 2011ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில்  ஜிம்பாப்வே அணியினை 139 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

அணிகளது அண்மைய ஆட்டங்களின் கள நிலவரங்கள்

இலங்கை அணி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பினை கோட்டை விட்டிருந்ததாலும், அத்தொடரில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய துறைகளில் திறமைகளை வெளிக்காட்டத் தவறியிருக்கவில்லை என்றே கூற முடியும்.

முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும், இலங்கை அணி சவால் மிக்க இந்திய அணியின் பந்து வீச்சினை சமாளித்து, சாதனை இலக்கு ஒன்றினை விரட்டி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது. அதேபோன்று அரையிறுதி வாய்ப்பினை தீர்மானிக்க முக்கிய ஆட்டமாக காணப்பட்ட, பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் இறுதி வரை அவ்வணிக்கு பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்த இலங்கை அணி களத்தடுப்பில் விட்டிருந்த சில தவறுகள் காணரமாகவே, அப்போட்டியில் துரதிஷ்டவசமான தோல்வியினை சந்தித்திருந்தது.  

எனவே, இந்த தவறுகளை சரிப்படுத்த இலங்கை அணி முயற்சி செய்யும் எனில், பலம் குறைந்த ஜிம்பாப்வே அணியினை இலகுவாக வீழ்த்தும்.

2016ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இலங்கை அணியானது அவற்றில் 9 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் தரவரிசையில் 11 ஆவது  இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே அணியானது அண்மையில் பலம்மிக்க அணிகளை ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்திய பதிவுகள் ஏதும் இல்லை.  

எனினும், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்றிருந்த முக்கோண ஒரு நாள் தொடரில், ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினரை 5 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது. அதோடு, அதே தொடரில் அவ்வணியுடனான ஏனைய போட்டியை சமநிலை செய்திருந்தது.

ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள பல மாற்றங்களுடனான இலங்கைக் குழாம்

ஜிம்பாப்வே அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்குமான…

எனினும்,  கத்துக்குட்டி அணிகளில் ஒன்றான பங்களாதேஷ் ஆனது இலங்கையில் அண்மையில் நடைபெற்றிருந்த ஒரு நாள் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது. அதனை வைத்து பார்க்கும்போது, ஜிம்பாப்வே அணியினையும் குறைவாக மதிப்பிட்டு விட முடியாது.

2016ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, இதுவரை 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜிம்பாப்வே அணியானது அதில் 6 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

இலங்கை அணியினைப் பொறுத்தவரை, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியதிலிருந்து அணியில் பல மாற்றங்கள் நடந்துள்ளன. வீரர்கள் அனைவரும் உடற்தகுதி பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிற விளையாட்டு அமைச்சரின் நிபந்தனையில், அனைத்து வீரர்களும் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்படுகின்றனர். அதோடு, 2019ஆம் ஆண்டு உலக கிண்ணம் வரை இலங்கையைப் பயிற்றுவிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர், கிரஹம் போர்ட் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

Kusal mendisஇவை ஒரு புறம் இருக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையில் இத்தொடரிற்காக களமிறங்கும் இலங்கை அணியில், இறுதியாக இலங்கை- ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற முக்கோண ஒரு நாள் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருந்த துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் குசல் மெண்டிஸ், ஜிம்பாப்வே அணிக்கெதிராக 55.66 என்னும் சிறந்த ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கின்றார். அதோடு, குறித்த தொடரில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களினை (179) குவித்த நிரோஷன் திக்வெல்ல உம் அணியில் இருப்பது இலங்கை அணியினை பலப்படுத்தும் விடயமாக காணப்படுகின்றது.

NIroshanஇவர்களோடு சேர்த்து அணித் தலைவர் மெத்திவ்ஸ், உபுல் தரங்க, அறிமுக வீரர் வனிது ஹஸரங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் அணிக்கு துடுப்பாட்டத்தில் மேலும் பலம் சேர்க்க எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா (காயம்), சாமர கபுகெதர மற்றும் சீக்குகே பிரசன்ன (காயம்) ஆகியோர் இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிற்குமான குழாத்தில் இணைக்கப்படவில்லை.

பந்து வீச்சினைப் பொறுத்தமட்டில், 17 வருடங்களின் பின்னர் ஒரு நாள் போட்டியொன்று நடக்கப்போகும் காலி மைதானத்தின் நிலைமைகளினை கருதி அகில தனன்ஞய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீண்ட காலத்தின் பி்ன்னர் அணியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.  

அதோடு, லசித் மாலிங்க அணியில இருப்பது இலங்கை அணியின் பந்து வீச்சிற்கு கிடைத்த வரப்பிரசாதங்களில் ஒன்றாகும். மாலிங்க, ஜிம்பாப்வே அணிக்கெதிராக இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மாத்திரமே விளையாடி இருப்பினும், அவரது அனுபவம் அணிக்கு எப்போதும் கைக்கொடுக்கும் விடயமாக இருக்கின்றது.

ஐந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து..

மேலும், இறுதியாக ஜிம்பாப்வேயில் இடம்பெற்ற முக்கோணத் தொடரில் இலங்கை சார்பாக அதிக விக்கெட்டுகளை (8) சாய்த்த வீரர்களில் ஒருவரான அசேல குணரத்னவும் சம்பியன்ஸ் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட நுவான் பிரதீப்பும் அணியில் உள்ளமை இலங்கையின் பந்து வீச்சு இத்தொடரில் சிறப்பாக அமையும் என்பதனை உறுதி செய்கின்றது.

எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி

தனுஷ்க குணத்திலக்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், வனிது ஹஸரங்க, உபுல் தரங்க,  அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), அசேல குணரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு மதுசங்க, லசித் மாலிங்க, நுவான் பிரதீப்

ஜிம்பாப்வே அணி

சுழல் வீரர் கிரேம் கிறீமர் தலைமையில் களமிறங்கும் ஜிம்பாப்வே அணியானது புதிய வீரர்கள் பலருடன் சவால் மிக்க இலங்கை அணியினை எதிர்கொள்கின்றது.

அவ்வணியின் துடுப்பாட்டத்துறையின் பங்களிப்பு இளம் வீரர்களோடு சேர்த்து, அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான ஹமில்டன் மசகட்சாவிடம் தங்கியிருக்கின்றது. இலங்கை அணிக்கெதிராக இரண்டு அரைச் சதங்களை பெற்றிருக்கும் வலது கை துடுப்பாட்ட வீரரான அவர் ஜிம்பாப்வே தரப்பின் துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கினை இத்தொடரில் வகிப்பார் என நம்பப்படுகின்றது.

@AFP
@AFP

அதே போன்று, அணியின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை சகல துறை வீரரான சிக்கந்தர் ரஷா முன்னெடுக்கவுள்ளார். பாகிஸ்தான் வம்சாவளியினை சேர்ந்த வீரர்களில் ஒருவரான ரஷா, இறுதியாக விளையாடிய ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட்டுக்களுடன் சேர்த்து 58 ஓட்டங்களினையும் விளாசி அணிக்கு வெற்றியினை பெற பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

@AFP
@AFP

மேலும், கிரைக் இர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் ஆகியோரும் அணியின் துடுப்பாட்டத்தினை முன்னெடுக்கக் கூடிய சிறந்த வீரர்களாக காணப்படுகின்றனர்.

அணியின் பந்து வீச்சினைப் பொறுத்தவரையில், கிரேம் கிறீமருடன் சேர்த்து சகல துறை வீரர்களான சீன் வில்லியம்ஸ், மால்கோம் வால்லர் மற்றும் சிக்கந்தர் ரஷா ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கக் கூடியவர்களாக காணப்படுகின்றனர்.  

மேலும், தரிசாய் முசகண்கடா மற்றும் கிரிஸ் பொபு ஆகிய வீரர்கள் வேகப்பந்து வீச்சு துறையினை முன்னெடுத்து அணிக்கு சிறப்பாக செயற்பட எதிர்பார்க்கப்பட்டுள்ளனர்.

எதிர்பார்க்கப்படும் ஜிம்பாப்வே அணி

கிரேம் கிறீமர் (அணித் தலைவர்), ஹமில்டன் மசகட்சா, கிரேக் இர்வின், சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ரஷா, பீட்டர் மூர், மால்கோம் வால்லர், கிரிஸ் பொபு, றிச்சர்ட் கராவா,  தரிசாய் முசகண்கடா, தென்டாய் சட்டாரா

இறுதியாக

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காணப்படும் ஒரு நாள் தரவரிசைப் பட்டியலானது, அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதியான அணிகளை நேரடியாகத் தெரிவு செய்வதற்குரிய இறுதிப் பட்டியலாக இருக்கும். குறித்த நாளில் ஒரு நாள் தரவரிசையில் இங்கிலாந்து அணியுடன் சேர்த்து முதல் 7 இடங்களைப் பெற்றிருக்கும் அணிகளே (மொத்தம் 8 அணிகள்) அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தெரிவாகும்.

இந்நிலையில் தற்பொழுது ஒரு நாள் தரவரிசையில், 8ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருக்கும் இலங்கை அணிக்கு தரவரிசையில் முன்னிலை அடைவதற்கு இத்தொடர் ஒரு வாய்ப்பாக அமைகின்றது.

எனவே, இலங்கை அணி தரவரிசையில் மேலும் பின்தள்ளப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, அண்மைக் காலங்களில் அணியில் விடப்பட்ட தவறுகளை சரி செய்து, வீரர்கள் முழு முயற்சியுடன் ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்.