ஐந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கை அணியில் சேர்க்கப்பட்ட சுழல் பந்துவீச்சாளர்

1680

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டித் தொடருக்காக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்காக விளையாடிவரும் அகில தனஞ்சய ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

பாணதுறை மஹாநாம கல்லூரியைச் சேர்ந்த 24 வயதாகும் அகில தனஞ்சய, இளம் வயதிலேயே இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரான ருவன் கல்பகேயின் தலைமையிலான இளையோர் அணிக்கு இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டித் தொடருக்கு தயாராகி வந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் அப்போதைய உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளரான சயீத் அஜ்மல் போன்ற சுழல் பந்து வீச்சாளர் ஒருவரை இலங்கை அணி களமிறக்க வேண்டிய தேவை இருந்தது. அந்த வகையில், வலை பயிற்சிகளின் போது சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த அகில தனஞ்சய ஓப் பிரேக், லெக் பிரேக், கூக்லீஸ், ”கரம்“ பந்துகள் மட்டுமல்லாது தூஸ்ரா போன்ற பலவிதமான பந்துகளை வீசிக்கொண்டிருந்த போது அப்போதைய இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன மற்றும் அண்மையில் இலங்கை அணியை விட்டு வெளியேறிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிராம் போர்ட் ஆகியோரினால் ஈர்க்கப்பட்ட நிலையில் நேரடியாக இலங்கை தேசிய அணிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இதன் முதல் கட்டமாக 2012 இலங்கை பிரிமியர் லீக் (SLPL) தொடரில் மஹேல ஜயவர்தன தலைமையிலான வயம்ப யுனைடட் அணிக்காக தெரிவுசெய்யப்பட்டார்.

மாலிங்கவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைத் தீர்ப்பு வெளியாகியது

தொடர்ந்தும் அணித் தலைவர் மஹேலவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க 2012ஆம் ஆண்டு, டி20 உலகக் கிண்ண போட்டிக்கான 30 பேர் கொண்ட ஆரம்பக் கட்ட அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து 15 பேர் கொண்ட இலங்கை குழாமிற்கு உள்ளவாங்கப்பட்டார். அதனையடுத்து நேரடியாக இலங்கை மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இடம் பிடித்த தனஞ்சய குறித்த போட்டித் தொடரில் மொத்தமாக  இலங்கை பங்குபற்றிய 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் களமிறங்கி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

அகில தனஞ்சய சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனை விட வெவ்வேறு விதமான பந்துகளை வீசக்கூடிய திறமையை பெற்றிருந்தார் என்றால் அது மிகையாகாது. எனினும் அதே ஆண்டில் அவுஸ்திரேலிய மண்ணில்  நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படவில்லை.

Akila Dhananjayaஅதனை தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் அறிமுகமான போதிலும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டமையால் தனஞ்சயவுக்கு அப்போட்டியில் பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் சச்சித்ர சேனநாயக்க போன்ற ஏனைய புதிய பந்து வீச்சாளர்களின் வரவுகளால் அகில தனஞ்சய இலங்கை கிரிக்கெட் தெரிவாளர் குழுவின் கண்களுக்கு தென்படவில்லை.

எனினும், அதனை தொடர்ந்து நடைபெற்ற கழக மட்ட போட்டிகளில் களமிறங்கினார். 23 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் போட்டித் தொடர்களில் பங்குபற்றிய அகில தனஞ்சய தனது திறமைகளை வெளிப்படுத்தி பந்து வீச்சில் பிரகாசித்தார்.  

Stats

அண்மையில் அகிலவினால் வெளிப்படுத்தப்பட்ட திறமைகள்

இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில் நடைபெற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளின் போது காலி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்கினார். அவ்வணியில் இடம்பெற்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரான சீக்குகே பிரசன்னவுடன் பந்து வீசும் வாய்ப்பை பெற்றார். 6 போட்டிகளில் பங்குபற்றிய அவர், 4.90 என்ற சராசரியில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தார்.

இதுவரை அவர் பங்குபற்றிய முதல் தர போட்டிகளில் 98 விக்கெட்டுகளையும் லிஸ்ட் ஏ (List A) போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாது, 2016/17ஆம் ஆண்டுக்கான ஏ பிரிவு பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடிய அவர் 40.75 என்ற துடுப்பாட்ட சராசரியில் மொத்தமாக 326 ஓட்டங்களைக் குவித்திருந்தார். பங்களாதேஷ் அணி இலங்கை வந்திருந்த போது அவ்வணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் 61 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அத்துடன் அண்மையில் நிறைவுற்ற சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான 30 வீரர்க்ளைக் கொண்ட உத்தேச அணியிலும் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இளம் வீரரான தனஞ்சய இம்முறை முதல் தர போட்டிகளின் ஊடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களினுடாக மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், போட்டிகளில் பிரகசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம் இலங்கை அணி கடந்த காலங்களில் இடைப்பட்ட ஓவர்களை பலப்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர்கள் இல்லாமல் தடுமாறிய நிலையில், இவரது மீள்வருகை ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகின்றது.

அதேநேரம், புதிய அணிக்கான தெரிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், கருத்து தெரிவித்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ், ”அகில தனஞ்சய பல்வேறு விதமாக பந்து வீசக்கூடிய திறமைகளைப் பெற்றுள்ளார். அந்தவகையில் ஜிம்பாப்வே அணியுடனான போட்டிகளில் தனஞ்சயவை களமிறக்க எதிர்பார்த்துள்ளோம். கடந்த சில நாட்களாகவே இலங்கை அணிக்கான கதவை தட்டிக்கொண்டிருந்தார். தனஞ்சயவுக்கு வாய்ப்பளித்தமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் போன்ற சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்த தனஞ்சயவுக்கு ThePapare.com சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.