பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானார் மிக்கி ஆர்தர்

189
Mickey Arthur

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட வக்கார் யூனிஸ் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதன் பின் புதிய பயிற்சியாளராக வெளிநாட்டினரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கட் சபை முடிவு செய்திருந்தது.  இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிர்வாகக் குழுவில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த ஆலோசனை முடிவில் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர்  தெரிவு செய்யப்பட்டார். இந்தத் தகவலை பாகிஸ்தான் கிரிக்கட் சபை  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் 20 ஓவர் போட்டித் தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் செயற்பட்டார்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த, இன்னும் 10 நாட்களில் தனது 48ஆவது வயதை எட்டும்  மிக்கி ஆர்தர், 110 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2005 முதல் 2010ஆம் ஆண்டு வரை தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் செயற்பட்டபோது, அந்த அணி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் முதல் இடத்தை எட்டிப்பிடித்தது. தென் ஆபிரிக்க அணிக்குப் பிறகு, மிக்கி ஆர்தர் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக 2011 முதல் 2013 வரை செயற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்