தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் நான்காவது மகளிர் கிண்ண தொடரின் ஆரம்ப நாளாகிய நேற்றுமுன்தினம் (26ஆம் திகதி) இடம்பெற்ற இரு போட்டிகளில் மாலைத்தீவுகள் மற்றும் நேபால் அணிகள் இலங்கை மற்றும் பூட்டான் அணிகளை வீழ்த்தி தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

இலங்கை எதிர் மாலைத்தீவுகள்

இந்தியாவின் சிலிகுரியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இரண்டாவது பாதியில் மாலைத்தீவுகள் அணியின் வீராங்கனைகளின் ஆதிக்கம் நிலவியதால் இலங்கை மகளிர் அணி 5-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

போட்டியின் ஆரம்ப கோலாக 24ஆவது நிமிடத்தில் மாலைத்தீவுகள் அணி வீராங்கனை மரியம் ரிபா தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுக்க, அடுத்த மூன்று நிமிடங்களில் சக வீராங்கனை பதுவா அவ்வணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

எனினும் முதல் பாதியின் இறுதி நிமிடங்களில் இலங்கை அணியின் எரந்தி லியனகே தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார். அதன் பின்னர் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் மாலைத்தீவுகள் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை அணியின் மற்றொரு வீராங்கனையான மஹேசிகா குமுதினி தனது முதல் கோலைப் பெற்றுக்கொடுக்க கோல்களின் எண்ணிக்கை சமனிலையானது.

முதல் பாதி: இலங்கை 02 – 02 மாலைத்தீவுகள்

எனினும் இரண்டாவது பாதியில் இலங்கை அணிக்கு எதிரணியை முகம்கொடுப்பதில் பாரிய சவால்கள் இருந்தன. ஏற்கனவே, முதல் பாதியில் கோல் பெற்ற பதுவா, 64ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலைப் பெற அவ்வணி முன்னிலையடைந்தது.

அதன் பின்னர் 80ஆவது நிமிடத்திலும் அவர் மற்றொரு கோலைப் பெற, அது அவரது ஹெட்ரிக் கோலாக மாறியது. அதனைத் தொடர்ந்து 88ஆவது நிமிடத்தில் அமினாத் சாமிலா மாலைத்திவுகள் அணி சார்பாக ஐந்தாவது மற்றும் இறுதி கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும் இலங்கை மகளிர் அணியினரால் இரண்டாவது பாதியில் எந்தவொரு கோலையும் பெற முடியாமல் போனது.

ஏற்கனவே, ஒரு வருடத்திற்கு முன்னர் மாலைத்தீவுகள் அணியை இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டிருந்த நிலையிலேயே தற்பொழுது குறித்த போட்டியில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: இலங்கை 02 – 05 மாலைத்தீவுகள்

கோல்களைப் பெற்றவர்கள்

மாலைத்தீவுகள் – மரியம் ரிபா 24’, பதுவா ஸாஹிரா 27’, 64’, 80’, அமினாத் சாமிலா 88’

இலங்கை – எரந்தி லியனகே 43’, மஹேசிகா குமுதினி 45+2’


நேபால் எதிர் பூட்டான்

சிலிகுரி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நேபால் அணி சபித்ரா பன்தரியின் இரட்டை ஹெட்ரிக் கோல்களுடன் பூட்டான் அணியை 8-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி கொண்டது.

இந்தப் போட்டியின் 5ஆம், 9ஆம் மற்றும் 23ஆம் நிமிடங்களில் நேபால் அணியின் மத்திய முன்கள வீராங்கனை சபித்ரா பன்தரி தொடர்ந்து 3 கோல்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அதன் பின்னர், 25ஆவது நிமிடத்தில் அவ்வணியின் மற்றொரு வீராங்கனையான தாபா மற்றுமொரு கோலைப் பெற, மீண்டும் சபித்ரா தனது அதிரடி ஆட்டத்தின்மூலம் 35ஆவது நிமிடத்தில் அணிக்கான 5ஆவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.

முதல் பாதி: நேபால் 05 – 00 பூட்டான்

முதல் பாதியின் ஆபாரத்தைப் போன்றே இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய சபித்ரா 72ஆவது மற்றும் 77ஆவது நிமிடங்களிலும் அடுத்தடுத்து இரு கோல்களைப் பெற, அது அவரது இரண்டாவது ஹெட்ரிக் கோலாக மாறியது.

பின்னர் போட்டி நிறைவடையவிருந்த நேரத்தில் (90வது நிமிடம்) அவ்வணிக்கான 8ஆவது கோலை கிரிஷ்னா காத்ரி பெற்றுக்கொடுத்தார்.  பூட்டான் அணியினரால் ஒரு கோலையேனும் பெற முடியாமல் போனது.

முழு நேரம்: நேபால் 08 – 00 பூட்டான்

போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த நேபால் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் குமார் தாபா, ”எமது முன்கள வீராங்கனைகளின் சிறந்த செயற்பாட்டினால் பெறப்பட்ட இந்த கோல்களின் எண்ணிக்கை மற்றும் வெற்றி என்பன மகிழ்ச்சியளிக்கின்றது.

பூட்டான் அணி திறமையான ஒரு அணி. எனவே இந்தப் போட்டி எமது அடுத்த போட்டிகளுக்கான தயார் நிலைக்கு ஒரு சிறந்த உதவியாக இருந்தது. மேலும், இப்போட்டியின் மூலம் நாம் மைதானத்தின் தன்மையையும் அறிந்துகொண்டோம்” என்றார்.

இந்திய அணியை எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்று அவரிடம் கருத்துக் கேட்டமைக்கு, ”இப்பொழுது நாங்கள் குழு நிலையின் முதல் போட்டியை மாத்திரமே முடித்திருக்கின்றொம். அடுத்து மாலைத்தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுடன் மோத வேண்டும். அவற்றில் பிரகாசிப்பதைக் கொண்டே அடுத்த போட்டிகள் குறித்து சிந்திக்க வேண்டும்” என்றார்.

கோல்களைப் பெற்றவர்கள்

நேபால் – சபித்ரா பன்தரி 5’, 9’, 23’, 35’, 72’, 77’, சர்மிலா தபா 25’, கிரிஷ்னா காத்ரி 90’

GA