ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

188

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 ஆவது ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இன்று (8) நடைபெற்ற சுவட்டு, மைதான நிகழ்ச்சிகளில் இலங்கை அணி ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 5 பதக்கங்களை வென்றது.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான T42, 63 பிரிவு 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர்கள் மூவரும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர். போட்டியை 26.01 செக்கன்களில் நிறைவுசெய்த அமில பிரசன்ன தங்கப் பதக்கத்தை வென்று இங்கைக்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.

ஆசிய பரா விளையாட்டு விழாவில் 35 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

மூன்றாவது ஆசிய பரா விளையாட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ளது…

 

குறித்த போட்டியில் சக இலங்கை வீரர்களான இந்திக சூலதாச (26.08 செக்.) வெள்ளிப் பதக்கத்தினையும், நிர்மல புத்திக (26.59 செக்.) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இதே நேரம், F 44 பிரிவு ஈட்டி எறிதலில் பங்குகொண்ட இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த சமிந்த சம்பத் ஹெட்டியாரச்சி, 59.32 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் குறித்த போட்டிப் பிரிவில் 62.11 மீற்றர் தூரத்தை எறிந்து உலக சாதனையையும் அவர் முறியடித்திருந்தார். எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவருடைய சாதனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, குறித்த போட்டியில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 60.01 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தையும், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒமிடி அலி 58.97 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இது இவ்வாறிருக்க. பெண்களுக்கான T 45,46,47 பிரிவு நீளம் பாய்தலில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர மாற்றுத்திறனாளி வீராங்கனைகளில் ஒருவரான அமரா இந்துமதி, வெள்ளிப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 4.51 மீற்றர் தூரத்திற்குப் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தினார்.

2014 ஆம் ஆண்டு தென்கொரியாவின் இன்சியோனில் நடைபெற்ற ஆசிய பரா விளையாட்டு விழாவில் 2 வெள்ளிப் பதக்கங்களை அமரா இந்துமதி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டியில் கஸகஸ்தானைச் சேர்ந்த அப்துல்லெவா 4.71 மீற்றர் தூரத்தை பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், ஈரானின் சஹரா பொரனாகி 4.51 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.

இந்த நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட சமித துலான் (46.57 மீற்றர்), பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட குமுது பிரியங்கா (4.41 மீற்றர்) ஆகியோர் நான்காவது இடங்களைப் பெற்று ஆறுதல் அடைந்தனர்.

3 ஆவது ஆசிய பரா விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை (6) இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள பங் கர்னோ விளையாட்டரங்கில் வண்ணமயமான ஆரம்ப விழாவுடன் ஆரம்பமாகியது.

கொழும்பு மரதனை ஆக்கிரமித்த கென்ய வீரர்கள்

உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற 18ஆவது கொழும்பு சர்வதேச மரதன் (LSR Marathion) ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கென்யாவின்…

 

43 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீர, வீராங்கனைகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இதில் 18 விளையாட்டு நிகழ்ச்சிகளுக்காக 568 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஆசிய பரா விளையாட்டு விழாவுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 35 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களுடன் இலங்கை அணி பதக்கப்பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளது.

 >>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<