சாதனை வெற்றியுடன் ஆசியக் கிண்ணத்தில் முன்னேறும் பாகிஸ்தான்

122

மொஹமட் ரிஸ்வான் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தோடு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 மோதலில் இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

துபாயில் நேற்று (04) ஆரம்பமாகிய இந்த மோதலில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்தியாவிற்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 சர்வதேசப் போட்டிகளில்  தன்னுடைய 32ஆவது அரைச்சதத்தினைப் பதிவு செய்த விராட் கோலி 44 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் ரோஹிட் சர்மா 16 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 28 ஓட்டங்களை எடுத்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு சார்பில் சதாப் கான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவுப் மற்றும் மொஹமட் ஹஸ்னைன் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் நிறைந்த 182 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் அதன் தலைவர் பாபர் அசாம் (14) மற்றும் பகார் சமான் (15) ஆகியோரின் விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறிய போதும், மொஹமட் நவாஸ் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் அதிரடியான முறையில் மூன்றாம் விக்கெட் இணைப்பாட்டமாக 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்தின் உதவியோடும் அசிப் அலியின் பின்வரிசை அதிரடியோடும் போட்டியின் வெற்றி இலக்கினை பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களுடன் அடைந்தது. அத்துடன் இப்போட்டி வெற்றி இலக்கின் மூலம் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிராக T20I போட்டி ஒன்றில் விரட்டிய அதிகூடிய வெற்றி இலக்குடன் சாதனையும் படைத்திருந்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் மொஹமட் ரிஸ்வான் தன்னுடைய 15ஆவது T20I அரைச்சதத்துடன் 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்கள் எடுத்திருக்க, மொஹமட் நவாஸ் 20 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் உடன் 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அதேநேரம் ஆசிப் அலி 8 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் உடன் 16 ஓட்டங்களை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

தீஷன் விதுசனின் 10 விக்கெட்; முவர்ஸ் கழகத்துக்கு ஹெட்ரிக் வெற்றி

இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவ்னேஸ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

இப்போட்டியில் தோல்வியினை தழுவிய இந்திய அணி நாளை (06) சுபர் 4 சுற்றின் தமது அடுத்த போட்டியில் இலங்கையினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பாகிஸ்தானின் அடுத்த சுபர் 4 போட்டி புதன்கிழமை (07) ஆப்கானிஸ்தான் அணியுடன் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 181/7 (20) விராட் கோலி 60(44), ரோஹிட் சர்மா 28(16), சதாப் கான் 31/2(4)

பாகிஸ்தான் – 182/5 (19.5) மொஹமட் ரிஸ்வான் 71(51), மொஹமட் நவாஸ் 42(20), ரவி பிஸ்னோய் 26/1(4)

முடிவு – பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<