சச்சித்ர சேனநாயக்கவின் சகலதுறை ஆட்டத்தால் அரையிறுதிக்கு தெரிவாகிய SSC

7

இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு SSC, கொழும்பு கிரிக்கெட் கழகம், சோனகர் மற்றும் சரசென்ஸ் விளையாட்டுக் கழகங்கள் தகுதிபெற்றன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நடாத்தும் 2018/2019 பருவகாலத்துக்கான பிரதான உள்ளூர் கழகங்கள் மோதும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்கு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (15) நடைபெற்றன.

SSC, NCC மற்றும் இராணுவப்படை அணிகள் தொடர்ந்து வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் கிரிக்கெட்…..

SSC கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் ராகம கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக SSC கழகம் சகலதுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் SSC கழகம் போட்டியை 5 விக்கெட்டுகளால் இலகுவாக வென்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற தம்மிக பிரசாத் தலைமையிலான SSC கழகம் அமில அபொன்சோ தலைமையிலான சிலாபம் ராகம கிரிக்கெட் கழகத்தை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் 49.5 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மத்திய வரிசையில் வந்த சன்ஜய சதுரங்க 98 பந்துகளுக்கு முகம்கொடுத்து பெற்ற 58 ஓட்டங்களே ராகம கிரிக்கெட் கழகத்தின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

Photos: SSC vs Ragama CC | Major Limited Overs Tournament 2018/19 – Quarter-Final

SSC கழகம் சார்பில் 7 வீரர்கள் பந்துவீசியிருந்ததோடு, வேகபந்துவீச்சாளர்களான நுவன் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், தம்மிக பிரசாத் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்ற, சச்சித்ர சேனநாயக்க 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய SSC கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி நிதானமாக துடுப்பாடி எந்த நெருக்கடியும் இன்றி வேகமாக ஓட்டங்களை சேர்த்தார்.

மறுமுனையில் தனுஷ்க குணதிலக்க (0) மற்றும் திமுத் கருணாரத்ன (15) சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் சந்துன் வீரக்கொடி மற்றும் சச்சித்ர சேனநாயக்க ஜோடி SSC கழகத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

இதன் மூலம் SSC கழகம் 39.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. அந்த கழகத்துக்காக அபாரமாக துடுப்பாடிய சச்சித்ர சேனாநாயக்க 103 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும், சந்துன் வீரக்கொடி அரைச்சதம் கடந்து 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் – 204 (49.5) – சன்ஜய சதுரங்க 58, இஷான் ஜயரத்ன 42, சமீர டி சொய்ஸா 31, நுவன் பிரதீப் 4/30, தம்மிக பிரசாத் 3/35, சச்சித்ர சேனநாயக்க 2/38

SSC – 205/5 (39.2) – சச்சித்ர சேனாநாயக்க 96, சந்துன் வீரக்கொடி 64, ஆகாஷ சேனாரத்ன 21, நிஷான் பீரிஸ் 2/63, அமில அபொன்சோ 2/33

முடிவு – SSC கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிக்காட்டும் சந்திமால்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் உள்ளூர் கிரிக்கெட்….


NCC எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

இலங்கை அணியில் உள்ள முன்னணி வீரர்கள் மோதிக்கொண்ட இப்போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் NCC கழகத்தை காலிறுதிப் போட்டியில் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் இப்போட்டியில் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்ட கொழும்பு கிரிக்கெட் கழகம், அனுபவ வீரர்களாள மினோத் பானுக்க (66), மாதவ வர்ணபுர (56) மற்றும் வனிந்து ஹசரங்க (51) ஆகியோரது அரைச்சதத்தின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 297 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

NCC கழகம் சார்பாக பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்த நிலையில், 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய NCC கழகம், 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களைப் மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய லஹிரு உதார 96 ஓட்டங்களைப் பெற்று 4 ஓட்டங்களால் சதத்தை தவறவிட, இளம் வீரர் ஹசித போயகொட அரைச்சதமொன்றைப் பெற்றுக்கொண்டார்.

இதன்போது பந்துவீச்சில் லஹிரு கமகே 3 விக்கெட்டுகளையும் மாலிந்த புஷ்பகுமார மற்றும் டில்ஷான் முனவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 297 (48.3) – மினோத் பானுக்க 66, மாதவ வர்ணபுர 56, வனிந்து ஹசரங்க 51, டில்ஷான் முனவீர 31, சாமிக்க கருணாரத்ன 4/36, டிலேஷ் குணரத்ன 2/46

NCC – 251 (46.4) – லஹிரு உதார 96, மஹேல உடவத்த 43, ஹசித போயகொட 50, நிமேஷ குணசிங்க 25, லஹிரு கமகே 3/53, மாலிந்த புஷ்பகுமார 2/32, டில்ஷான் முனவீர 2/39

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 46 ஓட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20I குழாம் அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20I…..


சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான மிலிந்த சிறிவர்தன ஆட்டமிழக்காது பெற்ற அரைச்சதத்தின் உதவியுடன் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

NCC கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட பாணந்துறை விளையாட்டுக் கழகம், 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணிக்காக அசந்த பஸ்நாயக்க மாத்திரம் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து 75 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சாலிய சமன் 3 விக்கெட்டுக்களையும், அண்டி சொலமன்ஸ் மற்றும் ரனித லியனாரச்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சரசென்ஸ் விளையாட்டுக் கழகம், 42.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த கழகத்துக்காக அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மிலிந்த சிறிவர்தன 56 பந்துகளில் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை விளாசினார்.   

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 245 (49.2) – அசந்த பஸ்நாயக்க 75, விஷ்வ சதுரங்க 42, மிஷேன் சில்வா 35, சாலிய சமன் 3/48, அண்டி சொலமன்ஸ் 2/61, ரனித லியனாரச்சி 2/31

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 249/3 (42.4) – மிலிந்த சிறிவர்தன 69*, கமிந்து அமரசிங்க 56, அண்டி சொலமன்ஸ் 51, ரனித லியனாரச்சி 44, ஷெஹான் வீரசிங்க 2/31

முடிவு – சரசென்ஸ் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி


இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் இராணுவ விளையாட்டுக் கழகத்துக்கு எதிராக துடுப்பாட்டத்தில் அசத்திய சோனகர் விளையாட்டுக் கழகம் 5 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணி, டில்ஷான் டி சொய்ஸாவின் அரைச்சதத்தின் உதவியுடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் டில்ஷான் டி சொய்ஸா அரைச்சதம் கடந்த 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, பந்துவீச்சில் சோனகர் விளையாட்டுக் கழகத்தின் ஷிரான் பெர்னாண்டோ 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சோனகர் விளையாட்டுக் கழகம், 39.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அந்த அணிக்காக அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய சாமர சில்வா 77 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.   

போட்டியின் சுருக்கம்

இராணுவ விளையாட்டுக் கழகம் – 209 (49.4) – டில்ஷான் டி சொய்ஸா 57, சீக்குகே பிரசன்ன 39, ஜனித் சில்வா 35, துஷான் விமுக்தி 22, சன்ஜித ரித்ம 22, ஷிரான் பெர்னாண்டோ 4/25, நிமன்த சுபசிங்க 2/52, ரமேஷ் மெண்டிஸ் 2/38

சோனகர் வினையாட்டுக் கழகம் – 210/5 (39.3) – சாமர சில்வா 77, ரமேஷ் மெண்டிஸ் 53, இரோஷ் சமரசூரிய 21, சீக்குகே பிரசன்ன 3/48

முடிவு – சோனகர் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி

இதன்படி, எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள முதற்தர உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் SSC மற்றும் சரசென்ஸ் கழகமும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் மற்றும் சோனகர் விளையாட்டுக் கழகமும் போட்டியிடவுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<