“உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதி பெறுவதே எமது இலக்கு” – பிரமோதய

Sri Lanka tour of England 2021

111

இலங்கை கிரிக்கெட் அணி 2023ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதிபெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணி, குறித்த இலக்கை அடைவதற்கான வழியை உருவாக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ICCயின் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரையில் பிரவீன் ஜயவிக்ரம

தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தரிடம் ஒரு திட்டம் உள்ளது. இதில், நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறுவதற்கும், உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்குமான ஒரு அணியை உருவாக்க வேண்டும். எமது அணிக்கு இன்னும் 18 போட்டிகள் உள்ளன. இதில் 11 போட்டிகளில் வெற்றிபெற்றால், நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெற முடியும். இதில், சில போட்டிகள் எமது நாட்டில் நடைபெறவுள்ளன. எனவே, இந்த இலக்கை எட்டுவதற்கு முயற்சிப்போம்என பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேநேரம், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணி, இளம் அணியாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், அனுபவ வீரர்களும் அணியில் உள்ளனர் என பிரமோதய விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

தற்போதுள்ள எமது ஒருநாள் அணியில் அனுபவம் உள்ளது. பங்களாதேஷ் தொடருக்கான குழாத்தில் அஷேன் பண்டார மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகிய இளம் வீரர்கள் மாத்திரமே இருந்தனர். ஏனைய வீரர்கள் 2015ம் ஆண்டிலிருந்து விளையாடி வருகின்றனர். எனவே, அணியில் அனுபவம் உள்ளது. இப்போது வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இன்னும், மூன்று ஆண்டுகளில் பலர் சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்வர்

அதேநேரம், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்தமைக்கு நாணய சுழற்சியும் ஒரு காரணம் என பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், நாணய சுழற்சி சாதகமாகியிருந்தால் எம்மால் தொடரை வென்றிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை பார்க்கும் போது, நாணய சுழற்சியில் வெற்றிபெற்றிருந்தால், எம்மால் தொடரை வென்றிருக்க முடியும். பங்களாதேஷ் அணி அனுபவ அணியாக இருந்த போதும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200 ஓட்டங்களை கடக்கவில்லை. நாம் நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எமது அணி முன்னேறி வருகின்றது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னர் அணி வீரர்களுடன் கலந்துரையாடிய போது, நாணய சுழற்சியில் வென்றால் தொடரை வெற்றிக்கொள்ள முடியும் என கூறினர். நாம் வீரர்களிடம் எதனை எதிர்பார்க்கிறோம் என்பதை புரிந்துவைத்துள்ளனர். சரியான நேரம் வரும்போது, பலமான அணியாக எமது அணி உருவாகும்

அதுமாத்திரமின்றி, இங்கிலாந்து தொடரையடுத்து, இலங்கை அணியின் தலைவர் தொடர்பில் ஆராயப்படும் எனவும் பிரமோதய விக்ரமசிங்க  தெரிவித்தார்.

நாம் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களுக்கு, குசல் பெரேராவை தலைவராக நியமித்துள்ளோம். குறித்த இந்த தொடர்கள் நிறைவடைந்தவுடன், தலைமைத்துவம் தொடர்பில் ஆராய்வோம். குசல் பெரேராவின் தலைமைத்துவத்தில் முன்னேற்றங்கள் வேண்டும். குறித்த விடயங்களை இங்கிலாந்து தொடரில் அவதானித்து, தீர்மானத்தை எடுப்போம் என்றார்.

இதேவேளை, இங்கிலாந்து தொடருக்கான குழாத்தில் இளம் வீரர் பிரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டமை தொடர்பிலும், பிரமோதய விக்ரமசிங்க கருத்து தெரிவித்தார்.

 “பிரவீன் ஜயவிக்ரம உள்ளூரில் நடைபெற்ற T20 போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளார். எனவே, அவரை உடனடியாக டெஸ்ட் பந்துவீச்சாளர் என முத்திரையிட முடியாது. எம்மால் 24 வீரர்களை இங்கிலாந்து தொடருக்காக தெரிவுசெய்ய முடியும். எனவே, பிரவீன் ஜயவிக்ரமை தெரிவுசெய்து, அவருக்கான அனுபவத்தை கொடுக்க முடியும்.

அவர் அணியில் விளையாடாவிட்டாலும், இங்கிலாந்து காலநிலையில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என அவர் கற்றுக்கொள்வார். அவருக்கு, இந்த வாய்ப்பை நாம் கொடுக்கிறோம். தேவை ஏற்படின் அவர் விளைாடலாம். ஆனால், இது அவருக்கான கற்றல் தருணம் என பிரமோதய விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…