பிரீமியர் லீக் பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) கால்பந்து தொடரில் மாவனல்லை செரண்டிப் கால்பந்துக் கழகம் மற்றும் பேருவளை ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான மிகவும் விறுவிறுப்பான போட்டி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.  

Highlights – Red Star v Serandib FC (2017 Premier League Division I)

Uploaded by ThePapare.com on 2017-09-16.

ஏற்கனவே இடம்பெற்ற தமது முதல் போட்டியில் ரெட் ஸ்டார் அணி, SLTB அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியிருந்தது. செரண்டிப் அணி1-0 என்ற கோல் கணக்கில் சிவில் காதுகாப்பு அணியை வெற்றி கொண்டிருந்தது.

அதேபோன்று, இவ்விரு அணிகளும் இறுதியாக கடந்த பருவகால பிரிவு ஒன்றுக்கான காலிறுதிப் போட்டியில் மோதியிருந்தன. குறித்த போட்டியில் ரெட் ஸ்டார் அணி பெனால்டி முறையில் வெற்றி பெற்றிருந்தது.  

பதுளையில் திஹாரிய யூத் அணி வீரர்கள் மீது தாக்குதல்

இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 ( பிரிவு 1) கால்பந்து சுற்றுப்போட்டியில், கெலிஓய…

இந்நிலையில், பிரிவு ஒன்றில் உள்ள பலம் கொண்ட இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி களுத்தறை வெர்ணன் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் இடம்பெற்றது.  

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் ரெட் ஸ்டார் அணிக்கு முதல் ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது மொஹமட் ரஹுமான் உதைந்த பந்து செரண்டிப் அணியின் பின்கள வீரர்களைத் தாண்டிச் செல்லும்போது, இடோவோ ஹமீட் பந்தைப் பெற்று கோலுக்கு உதைந்தார். எனினும், இதன்போது கோல் காப்பாளரின் உடம்பில் பட்டு பந்தின் வேகம் குறைய, செரண்டிப் பின்கள வீரரால் அது வெளியேற்றப்பட்டது.

15ஆவது நிமிடத்தில் செரண்டிப் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது வந்த பந்தை ஹேமன்த பண்டாரகொட கோலை நோக்கி ஹெடர் செய்தார். எனினும், பந்தை ரெட் ஸ்டார் கோல் காப்பாளர் தடுத்தார்.

மீண்டும் செரண்டிப் வீரர் ஆசிர் உள்ளனுப்பிய பந்தை அணித் தலைவர் ஷெரோன் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தும்போது, அதனை ரெட் ஸ்டார் கோல் காப்பாளர் தட்டி வெளியேற்றினார்.  

25 நிமிடங்கள் கடந்த நிலையில் செரண்டிப் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஷெரோன் பெற்றார். அவர் கோல் திசையை நோக்கி உதைந்த பந்து ரெட் ஸ்டார் அணியின் பின்கள வீரரால் திசை திருப்பப்பட்டது.

பின்னர் ரெட் ஸ்டார் அணியின் முன்னணி வீரர் மொஹமட் ரஹுமான் கோலை நோக்கி உதைந்த பந்தை செரண்டிப் கொல் காப்பாளர் நஜான் தட்டி விட்டார்.

மீண்டும் ஒரு முறை தமக்கு கிடைத்த ப்ரீ கிக்கை ரஹுமான் பெற்றார். அதன்போதும் அவர் சிறந்த முறையில் உதைந்த பந்தை நஜான் தடுத்தார்.

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் செரண்டிப் முன்கள வீரர் ஆசிர் ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை சிமொன் ஹெடர் மூலம் அணித் தலைவர் ஷெரோனுக்கு வழங்க, அவர் அதனை கோலக்கினார்

முதல் பாதி நிறைவடையும்போது ஷெரோனால் பெற்ற கோலுடன் செரண்டிப் அணி முன்னிலை பெற்றது.  

முதல் பாதி: செரண்டிப் கால்பந்துக் கழகம் 1 – 0 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களில் செரண்டிப் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது ஆசிர் மூலம் ஒரு கோல் பெறப்பட்டது. எனினும், செரண்டிப் வீரர் ஒருவரின் கையில் பந்து பட்டமைக்காக நடுவர் அந்த கோலை நிராகரித்தார்.

மீண்டும் ரெட் ஸ்டாரின் முயற்சி நஜான் மூலம் தடுக்கப்பட்டது.  

போட்டியின் 63ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து நீண்ட தூரம் வழங்கப்பட்ட பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற ஷெரோன் வேகமாக அதனை எதிரணியின் கோல் நோக்கி கொண்டு சென்றார்.

இதன்போது ரெட் ஸ்டார் கோல் காப்பாளர் அதனைத் தடுக்க வர, அவரையும் தாண்டி செல்லும்போது, மற்றொரு வீரர் பந்தைத் தடுக்க வந்தார். அனைத்துத் தடைகளையும் தாண்டிய ஷெரோன் செரண்டிப் அணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

எனினும், அவர் முறையற்ற விதத்தில் கோல் மகிழ்ச்சியைக் கொண்டாடியமைக்காக நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் மற்றொரு மஞ்சள் அட்டை பெற்றிருந்தமையினால், சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நீண்ட கால அனுபவம் மிக்க சிரேஷ்ட வீரர் ஷெரோனின் வெளியேற்றத்தின் பின்னர் போட்டி முழுமையாக ரெட் ஸ்டார் அணியின் பக்கம் திரும்பியது.

சில நிமிடங்களில் ரெட் ஸ்டார் அணியின் பின்கள வீரர்கள் விட்ட தவறைப் பயன்படுத்திய சிமொன் கோல் நோக்கி வேகமான பந்தை உதைந்தார். எனினும், பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

ஆட்டத்தின் 66 நிமிடங்கள் கடந்த நிலையில் ரெட் ஸ்டார் அணிக்கு கிடைத்த ப்ரீ கிக்கின்போது இடோவோ ஹமீட் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அதன் பின்னர் முழுமையாக உட்சாகமடைந்த ரெட் ஸ்டார் வீரர்கள் ஆட்டத்தை சமநிலைப்படுத்துவதற்கான கோலைப் பெற முயற்சித்தனர்.

மீண்டும் இடோவோ ஹமீட் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமல் போனது. சிறிது நேரத்தின் பின்னர் ரெட் ஸ்டார் அணியின் அலி ஹசன் உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.

மறுமுனையில், செரண்டிப் அணி அனைத்து வீரர்களையும் தம் எல்லைக்குள் வைத்து தடுப்பாட்டம் ஒன்றையே காண்பித்தது. எனினும் முன்களத்தில் சில வாய்ப்புகள் பெறப்பட்டும் செரண்டிப் வீரர்களால் அவற்றை சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியாமல் போனது.

தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது யாழ் சென் மேரிஸ்

இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் 1 (பிரிவு 1) கால்பந்து சுற்றுத் தொடரின் யாழ்ப்பாணம், ..

ஆட்டத்தின் மேலதிக நேரமான 93ஆவது நிமிடத்தில் கோணர் உதையின் போது உள்ளனுப்பப்பட்ட பந்து பல வீரர்களின் கால்களில் பட்டு தன்னிடம் வர, மொஹமட் ரஹுமான் கோலுக்குள் செலுத்தி, ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.

இறுதி முயற்சியாக, செரண்டிப் வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது அவர்களால் பயன்பெற முடியாமல் போக, விறுவிறுப்பான ஆட்டம் 2-2 என நிறைவடைந்தது.

முழு நேரம்: செரண்டிப் கால்பந்துக் கழகம் 2 – 2 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்  

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் ரஹுமான் (ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்
செரண்டிப் கால்பந்துக் கழகம் – ராஜ் ஷெரோன் 42’ & 63’
ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – இடோவோ ஹமீட் 67’, மொஹமட் ரஹுமான் 90+3’

மஞ்சள் அட்டை
செரண்டிப் கால்பந்துக் கழகம் – ராஜ் ஷெரோன் 18’ & 64’, மதுசங்க லியனகே 35’, ரியாஸ் மொஹமட் 69’
ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம் – பத்ரன் இலாஹி 47’, மொஹமட் ரஹுமான் 90+3’

சிவப்பு அட்டை
செரண்டிப் கால்பந்துக் கழகம் – ராஜ் ஷெரோன் 64’