ரெட்புல் பல்கலைக்கழக தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை

1339

ரெட்புல் பல்கலைக்கழக கிரிக்கெட் தொடர் இம்மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் காலி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது. பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் இத்தொடரில் பங்குபற்றுகின்றன.    

நடப்பு சம்பியனான இலங்கையின் வியாபார முகாமைத்துவக் கல்லூரி (BMS) இம்முறையும் கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் இவ்வருடத் தொடரில் தமது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இன்று கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொண்டது.  நிரோஷன் திக்வெல்ல, அமில அபொன்சோ மற்றும் வணிந்து ஹசரங்க ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வியாபார முகாமைத்துவ கல்லூரி (BMS) குழாமில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos : Sri Lanka Vs. Bangladesh – Red Bull Campus Cricket

கடந்த முறை போட்டித் தொடரில் இரண்டாம் இடத்தைப்பெற்ற பங்களாதேஷ் அணியின் லிபரல் ஆர்ட்ஸ் கல்லூரி சார்பாக இம்முறை பங்களாதேஷ் தேசிய ஒருநாள் அணியின் தலைவர் மஷ்ராபி மோர்டாசாவின் சகோதரரான முர்ஷளின் மோர்டசா பெயரிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கிய ஷெஹான் விமலதர்ம மற்றும் ஹஷான் துமிந்து ஆகியோரால் இணைப்பாட்டமாக 8 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. அதன் பின்னர் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களம் புகுந்த மனோஜ் சரத்சந்திர  உடன் இணைந்த துமிந்து இணைப்பாட்டமாக 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்று இக்கட்டான நிலையில் காணப்பட்டது.  எனினும் சாமிக கருணாரத்ன மற்றும் கே ஜெயவிக்கிரம ஆகியோர் இறுதி வரை விக்கெட் இழப்பின்றி அதிரடியாகப் பெற்ற 64 ஓட்ட இணைப்பாட்டம் மூலம் இலங்கை அணி 188 என்ற பலமான ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றர். பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில்  ஆரிபூர் ரகுமான் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

189 எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

சிறந்த இணைப்பாட்டம் மூலம் பங்களாதேஷ் அணியின் பக்கம் இருந்த போட்டியை அமில அபொன்சோ அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம்  இலங்கை அணியின் பக்கம் கொண்டுவந்தார். அமில 13 ஒட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாமிக கருணாரத்ன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆண்டர்சனின் அபார பந்து வீச்சினால் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இங்கிலாந்து

இறுதியில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. போட்டியின் ஆட்ட நாயகனாக ஜனித் லியனகே தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (BMS) – 188/7 (20) – ஜனித் லியனகே 40, சாமிக்க கருணாரத்ன 28*, கோஷான் ஜயவிக்ரம 18*, ஆரிபூர் ரகுமான் 2/18, அஞ்ஜும் அஹமத் 2/28

பங்களாதேஷ் – 141/7 (20) – ஜசீம் உத்தீன் 32, நஹிதுல் இஸ்லாம் 24, அன்ஜும் அஹமத் 23*  அமில அபோன்சோ 3/13, சாமிக்க கருணாரத்ன 2/26

முடிவு – இலங்கை (BMS) அணி 47 ஓட்டங்களால் வெற்றி

ரெட்புல் பலகலைக்கழக கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி தென்னாபிரிக்க அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பி. சரா மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இத்தொடரின் மற்றுமொரு போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பி. சரா மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களம் இறங்கிய இந்திய அணி 16.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 81 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் அணி சார்பாக 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹசன் மொஷின் போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

ரெட்புல் பலகலைக்கழக கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி ஜிம்பாப்வே மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கிடையில் கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் 35 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரோனாக் கண்டேவல் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவு செய்யப்பட்டார்.