ஆட்ட நிர்ணய சந்தேகத்தில் ஐந்து இந்தியர் மைதானத்தை விட்டு வெளியேற்றம்

335

கட்டுநாயக்க, சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியை பார்வையிட்டுக்கொண்டிருந்த இந்திய நாட்டவர்கள் ஐவரை இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஊழல் எதிர்ப்பு பிரிவு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது.  

‘SLC ஊழல் எதிர்ப்பு பிரிவு, பொலிஸாரின் உதவியோடே குறித்த ஐவரையும் அரங்கில் இருந்து வெளியேற்றினர். இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்துகொண்டனர் (அளவுக்கு அதிகமாக கைபேசிகளை பயன்படுத்தியது)’ என்று இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இரு இந்தியர்கள் இலங்கையின் உள்ளூர் டி-20 தொடரின் போட்டி ஒன்றின்போது தமது கைபேசியில் தொடர்ச்சியாக அழைப்புகளை பெற்று சந்தேகத்திற்கு இடமான நடத்தையை வெளிப்படுத்தியது அதிகாரிகளால் கண்டறியப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் தொடக்கம் இலங்கை கிரிக்கெட் சபை அதிக ஊழல் – எதிர்ப்பு அதிகாரிகளை போட்டி இடங்களில் நிலைநிறுத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் அம்பலமான அல் ஜெஸீரா ஆவணப்படத்தை அடுத்து ஆட்ட நிர்ணய விவகாரத்தை கையாள்வதற்கு விளையாட்டு ஊழலுக்கு எதிராக கடும் சட்டங்களை கொண்டுவருவது மற்றும் பொலிஸ் பிரிவொன்றை ஏற்படுத்தும் திட்டத்தை இலங்கை அறிவித்துள்ளது. குறித்த ஆவணப்படத்தில் மூன்று இலங்கை அதிகாரிகள் போட்டியின் முடிவுகளை மாற்ற ஒப்புக்கொள்வது பதிவாகியிருந்தமையானது பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   

இதே நேரம், இந்த சம்பவம் குறித்து SLC ஊழல் எதிர்ப்பு பிரிவு சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலை அறிவுறுத்தியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.