2 மணித்தியாலயங்களுக்குள் மரதன் ஓடி சாதனை படைத்த எலியுட் கிப்சோஜ்

141
eliud kipchoge twitter

உலக மரதன் ஓட்டத்தில் பல சாதனைகளை முறியடித்த நடப்பு ஒலிம்பிக் சம்பியனான கென்யாவைச் சேர்ந்த எலியுட் கிப்சோஜ் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்களுக்குள் ஓடி முடித்து உலக சாதனை படைத்துள்ளார். 

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் நேற்று (12) நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், 42 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலயம் 59 நிமிடங்கள் 40 செக்கன்களில் ஓடி முடித்தார்

இதன்மூலம் அவர் 2 மணித்தியாலங்களுக்குள் மரதன் ஓட்டப் போட்டியொன்றை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார்

ஒலிம்பிக் சம்பியனான 34 வயதுடைய எலியுட் கிப்சோஜ், 2018ஆம் ஆண்டு ஜேர்மனியின் பேர்ளின் நகரில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள் ஒரு நிமிடம் 39 செக்கன்களில் ஓடி முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

கத்தாரில் மரதன் ஓட்டத்தை இடைநடுவில் நிறுத்திய ஹிருனி

உலக மெய்வல்லுனர் போட்டிகளில்….

அந்த சாதனையை சுமார் ஒரு வருடத்துக்குப் பிறகு அவரே முறியடித்திருந்ததுடன், 2 மணித்தியாலங்களுக்குள் மரதன் ஓட்டப் போட்டியொன்றை நிறைவு செய்த உலகின் முதல் மனிதர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்

இந்த நிலையில் மரதன் ஓட்டத்தில் உலக சாதனை படைத்தது குறித்து போட்டியின் பிறகு கருத்து வெளியிட்ட எலியுட், ”இன்று நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். மனித ஆற்றல் என்பது எல்லையற்றது. எனவே எனது இந்த சாதனை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அதேபோல, எதிர்காலத்தில் எனது சாதனையை பலர் முறியடிப்பார்கள்” என குறிப்பிட்டார்

இதுஇவ்வாறிருக்க, குறித்த மரதன் ஓட்டப் போட்டியானது ஆஸ்திரியாவில் உள்ள ஒரு பூங்காவை அண்மித்த பகுதியொன்றில் அமைக்கப்பட்ட விசேட பாதையில் இடம்பெற்றுள்ளது

எனினும், குறித்த போட்டியானது சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விதிமுறைகளுக்கு புறம்பாக இடம்பெற்றதால் எலியுட் கிப்சோஜின் சாதனையை ஏற்றுக்கொள்ள முடியுமா என சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் ஆராய்ந்து வருகிறது. இதனால் அவருடைய இந்த தூரப் பெறுமதி இதுவரை உலக சாதனையாக அறிவிக்கப்படவில்லை

இதேவேளை, எலியுட்டுக்கு உதவியாக அவருக்குப் பின்னால் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியின் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான மெதிவ் சென்ட்ரோவிடிஸ் மற்றும் அதே போட்டியில் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான பெர்னார்ட் லகாட், ஒலிம்பிக்கில் 5,000 மீற்றரில் வெள்ளி வென்றவரான போல் செலிமோ உள்ளிட்டோர் ஓடியிருந்தனர்.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<