கடைசி நேரத்தில் வெற்றியை நழுவவிட்ட ரியல் மெட்ரிட்: டொட்டன்ஹாம், ஆர்சனல் வெற்றி

88

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

 ரியல் மெட்ரிட் எதிர் செல்டா வீகோ

லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட் தனது சொந்த மைதானத்தில் நடந்த செல்டா வீகோ அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் சமநிலை செய்தது.

லிவர்பூல் தொடர்ந்து வெற்றி: மெட்ரிட்டுடன் புள்ளிகளை சமன் செய்த பார்சிலோனா

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக்…

ரியல் மெட்ரிட் போட்டியின் கடைசி பத்து நிமிடங்களில் முன்னிலை பெற்றிருந்தபோதும் சன்டி மினாவின் கோல் அந்த அணியின் வெற்றியை பறித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பார்சிலோனாவை விடவும் ஒரு புள்ளி வித்தியாசத்திலேயே ரியல் மெட்ரிட் அணியால் முன்னிலை பெறமுடிந்தது.

ரஷ்ய முன்கள வீரர் பெடோர் ஸ்மொலோவ் (Fyodor Simolov) 7 ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தி செல்டா அணியை முன்னிலை பெறச் செய்த நிலையில் ரியல் மெட்ரிட் பதில் கோல் திருப்ப போராடியது. இதனால் முதல்பாதியில் தனது சொந்த ரசிகர்கள் முன் ரியல் மெட்ரிட் பின்னடைவை சந்தித்தது.

எனினும் இரண்டாவது பாதியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல் மெட்ரிட் சார்பில் செர்ஜியோ ராமோஸ் கோல் ஒன்றை பெற்ற நிலையில் அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து 52 ஆவது நிமிடத்தில் டோனி க்ரூஸ் பதில் கோல் திருப்பினார்.

இந்நிலையில் கணுக்கால் காயத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களின் பின் களம் திரும்பிய ஈடன் ஹசார்ட், செல்டா கோல்காப்பாளர் ரூபன் ப்ளன்கோவினால் கீழே வீழ்த்தப்பட்டதால் கிடைத்த ஸ்பொட் கிக்கை 65 ஆவது நிமிடத்தில் ராமோஸ் கோலாக திருப்பினார்.

ரியல் மெட்ரிட் வெற்றியை நெருங்கிய நிலையில் 85 ஆவது நிமிடத்தில் மினா (Santi Mina) கோல் பெற்று போட்டியை சமநிலை செய்தார்.

ஆர்சனல் எதிர் நியூகாசில் யுனைடட்

நயூகாசில் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியின் இரண்டாவது பாதியில் நான்கு கோல்களை பெற்று ஆர்சனல் அணி இலகு வெற்றி ஒன்றை பெற்றது. ஆர்சனல் இந்தப் பருவத்தில் பெறும் ஏழாவது ப்ரீமியர் லீக் வெற்றி இதுவாகும்.

முதல் பாதியில் அதிக நேரம் பந்தை தக்கவைத்து எதிரணி பக்கத்தை ஆக்கிரமித்தபோதும் நியூகாசில் அணியின் தற்காப்பு அரணை தாண்டி ஆர்சனலால் ஒரு கோலைக் கூட பெற முடியவில்லை.

எனினும் இரண்டாவது பாதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருக்கவில்லை. 54 ஆவது நிமிடத்தில் பிர்ரே எமரிக் அவுபமயங் (Pierre-Emerick Aubameyang) இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்து நிகொலஸ் பெபேவின் சிறப்பான பரிமாற்றத்தை கோலாக மாற்றினார்.

3 நிமிடங்களின் பின் இடது பக்கமாக 18 வயதுடைய புகாயோ சகா எதிரணி வீரர்களை முறியடித்து கடத்தி வந்த பந்தை பெபே கோலாக மாற்றினார். 75 ஆவது நிமிடத்தில் அலன் செயின்ட் மக்சிமின் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியபோது நியூகாசில் அணியின் பொன்னான வாய்ப்பு ஒன்று தவறியது.

எனினும் மெசுட் ஒசில் 90 ஆவது நிமிடத்தில் ஆர்சனல் சார்பில் மூன்றாவது கோலை புகுத்தினார். ப்ரீமியர் லீக்கில் கடந்த ஏப்ரலுக்கு பின்னர் அவர் பெறும் முதல் கோல் இதுவாகும். தொடர்ந்து ஆர்சனல் சார்பில் மேலதிக நேரத்தில் அலெக்சான்ட்ரே லகசெட் நான்காவது கோலை பெற்றார்.

இந்த வெற்றியுடன் ஆர்சனல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திற்கு முன்னேறியது.

ஸ்டன் வில்லா எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர்

சொன் ஹியுங் மின் மேலதிக நேரத்தில் பெற்ற கோல் மூலம் ஆஸ்டன் வில்லா அணிக்கு எதிரான போட்டியை டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புர் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

போட்டியின் 9ஆவது நிமிடத்தில் அன்வர் எல் காசி உதைத்த பந்தை டொப்பி அல்டவயர்ட் (Toby Alderweireld) தடுக்க முயன்றபோது அது கோலாக மாறியதன் மூலம் ஆஸ்டன் வில்லா முன்னிலை பெற்றது.

10 நமிடங்களின் பின் டக்லஸ் லுவிஸ் கோலை நோக்கி பந்தை செலுத்திய நிலையில் பென் டேவிஸ் அதனைத் தடுத்ததால் ஆஸ்டன் வில்லாவின் இரண்டாவது கோல் வாய்ப்பு முறியடிக்கப்பட்டது.

ஆஸ்டன் வில்லா தனது சொந்த மைதானத்தில் கடும் நெருக்கடி தந்தபோதும் 27 ஆவது நிமிடத்தில் டொட்டன்ஹாம் அணிக்கு பதில் கோல் திருப்ப முடிந்தது. அல்டன்வயர்ட் மின்னல் வேகத்தில் உதைத்த பந்தே கோலாக மாறியது.

முதல் பாதியின் மேலதிக நேரத்தில் ஆஸ்டன் வில்லா பெனால்டி பெட்டிக்குள் டொட்டன்ஹாம் வீரர் ஸ்டீவ் பெர்க்விஜ் வீழ்த்தப்பட்டதால் கிடைத்த பெனால்டியை சொன் உதைத்த நிலையில் அது தடுக்கப்பட்டது. எனினும் திரும்பி வந்த பந்தை அவர் கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் ஆஸ்டன் வில்லா சார்பில் பிஜோர்ன் எங்லஸ் கோல் பெற்றபோது போட்டி சமநிலைக்கு வந்தது. எனினும் ஆட்டம் முடியும் நேரத்தில் சொன் பெற்ற கோல் மூலம் டொட்டன்ஹாம் அணியால் வெற்றிபெற முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் டொட்டன்ஹாம் ப்ரீமியர் லீக்கில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற முடிந்தது. அந்த அணி நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் ஒரு புள்ளியே பின்தங்கியுள்ளது.

ஜுவான்டஸ் எதிர் பிரசியா

காயத்தால் அவதிப்பட்டு வந்த ஜுவான்டஸ் அணித்தலைவர் ஜோர்ஜியோ சிலினி ஆறு மாதங்களுக்குப் பின் அணிக்குத் திரும்பிய நிலையில் பிரசியா அணிக்கு எதிரான போட்டியை அந்த அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டியது.

ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஐரோப்பிய கால்பந்து நிதி ஒழுங்குமுறைகளை மீறிய மன்செஸ்டர்…

பின்கள வீரரான 35 வயதுடைய சிலினி 78 ஆவது நிமிடத்தில் பதில் வீரராக களம் திரும்பினார்.

இதில் பிரசியா அணி சிறப்பாக ஆடியபோதும் பிளோரியன் அயி (Florian Ayé) 37 ஆவது நிமிடத்தில் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்று வெளியேறியதால் 10 வீரர்களுடன் ஆட வேண்டி ஏற்பட்டது.

இதற்கு ஒரு நிமிடத்தின் பின் போல் டிபாலா ப்ரீ கிக் மூலம் ஜுவான்டஸ் அணிக்காக முதல் கோலை பெற்றதோடு தொடர்ந்து 75 ஆவது நிமிடத்தில் பிளைஸ் மடுயிடி வழங்கிய பந்தை ஜுவான் குவார்டாடோ வலைக்குள் புகுத்தினார்.

இந்தப் போட்டியில் ஜுவான்டஸ் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஒய்வு அளிக்கப்பட்ட நிலையிலும் அந்த அணி இந்த வெற்றியுடன் சீரி A தொடரில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க