ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை

66

ஐரோப்பிய கால்பந்து நிதி ஒழுங்குமுறைகளை மீறிய மன்செஸ்டர் சிட்டி அணிக்கு ஐரோப்பிய கழகப் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி அணிக்கு 30 மில்லியன் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி

ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றன. அந்தப்…

ஐரோப்பிய கால்பந்தின் நிர்வாக அமைப்பான UEFA இன் சுயாதீன நிதிக் கட்டுப்பாட்டுக் குழுவினால் நேற்று (14) இந்த முடிவு வெளியிடப்பட்டது. 

கழகத்தின் அனுமதிப்பத்திரம் மற்றும் கழகங்களின் நிதிக் கட்டுப்பாடுகளில் அந்த அணி பல விதிமுறை மீறல்களை செய்திருப்பதாக குற்றங்காணப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த கழகம் மீது குற்றம்சாட்டப்பட்டது.   

இந்தத் தடை மூலம் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு இந்த ஆண்டின் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரை இதுவரை வெற்றி பெறாத மன்செஸ்டர் சிட்டி அணி எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி 16 அணிகள் சுற்றின் முதல் கட்டப் போட்டியில் ரியல் மெட்ரிட்டை எதிர்கொள்ளவிருந்தது. 

ப்ரிமியர் லீக்கின் இந்தப் பருவத்தில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி தடைக்கு எதிராக மேன்முறையிடு செய்தால் அடுத்த பருவம் வரை தம் மீதான தடையை ஒத்திவைக்க முடியுமாக இருக்கும்.  

இந்தத் தடை விதிக்கப்பட்ட விரைவில் மன்செஸ்டர் சிட்டி வெளியிட்ட அறிவிப்பில் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்வதாக அந்த அணி குறிப்பிட்டுள்ளது. 

UEFA நிர்வாகம் மூலம் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு மன்செஸ்டர் சிட்டிக்கு ஏமாற்றத்தை தந்தபோதும் அது அதிர்ச்சி அளிக்கவில்லை என்று அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது. 

உரிமையாளர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் அதிகபடியான அனுசரணை உடன்படிக்கைகள் மூலம் கழகங்கள் வரம்பற்ற பணத்தை ஈட்டுவதை தடுக்கும் வகையிலேயே UEFA இன் நிதி ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.  

இதன் மூலம் ஐரோப்பிய லீக்குகளில் அதிகரித்து வரும் செல்வந்தக் கழகங்கள் மற்றும் வறிய கழகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை மட்டுப்படுத்துவதற்கும் அதிகரித்து வரும் கடன் பிரச்சினையை சமாளிப்பதற்கும் UEFA முயன்று வருகிறது. 

மன்செஸ்டர் சிட்டி அணியின் அபுதாபி உரிமையாளர்கள் ஐரோப்பிய கால்பந்து நிர்வாகக் குழுவை தவறாக வழிநடத்தி அனுசரணையாளர் ஒப்பந்தத்தின் மதிப்பை உயர்த்தியதாக 2018 ஆம் ஆண்டு ஜெர்மனிய பத்திரிகை ஒன்று ஆவணங்களை கசியவிட்டதை அடுத்து UEFA இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது. 

சுமார் 77 பங்குகளுடன் மன்செஸ்டர் சிட்டி கால்பந்து குழுமத்தின் பிரதான உரிமையாளராக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளரின் சகோதரரான மன்சூர் பின் சயித் அல் நஹ்யான் உள்ளார். அவர் கடந்த இரு தசாப்தங்களில் மன்செஸ்டர் சிட்டி கழகத்தின் வீரர்கள், பயிற்சியாளர், வசதிகள் மற்றும் அணியின் செயற்பாடுகளுக்கு பலநூறு மில்லியன்களை முதலீடு செய்துள்ளார். 

இதன் மூலம் 2002 ஆம் ஆண்டு இரண்டாம் நிலைப் போட்டிகளில் ஆடிவந்த மன்செஸ்டர் சிட்டி அணி ஐரோப்பாவின் ஐந்தாவது பெரும் செல்வந்த கழகமாகவும் வெற்றிகரமான கழகமாகவும் மாறியது. 

இந்நிலையில் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் பங்கேற்பது மன்செஸ்டர் சிட்டி அணிக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதி கொண்டதாக அமையும். அந்தத் தொடரை கழகம் இழக்கும் பட்சத்தில் அணியில் இருக்கும் சில நட்சத்திர வீரர்கள் தமது எதிர்காலம் பற்றி புதிய முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பயிற்சியாளர் பெப் கார்டியோலாவும் இதே நிலைக்கு தள்ளப்படக்கூடும்.  அதேபோன்று அணியின் புதிய வீரர் ஒப்பந்தங்களிலும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.   

இந்த ஒழுங்குமுறையை மீறியதற்காக அந்த அணி மீது முன்னதாக 2014 ஆம் ஆண்டு 49 மில்லியன் பௌண்ட் அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

>>Embed the link with this caption – மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<