கலைக்கப்படவுள்ள இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு?

409

பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கலைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையில் தேர்வு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தை வென்று வெறும் நான்கு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், தேர்வுக்குழுவானது கலைக்கப்படவிருக்கிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

>> UAE அணியுடன் T20I தொடரில் ஆடவுள்ள ஆப்கானிஸ்தான்

கடந்த 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் பொறுப்பேற்ற பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான தேர்வுக்குழு திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸ் போன்ற சிரேஷ்ட வீரர்களை இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிக்குழாத்தில் இருந்து நீக்கியதுடன் இளம்வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பளித்திருந்தது.

அத்துடன் பிரமோத்ய விக்கிரமசிங்க தலைமையிலான தேர்வுக்குழுவில் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் மற்றும் கிறிஸ் சில்வர்வூட் போன்றோர் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு அவர்களது ஆளுமையில் இலங்கை கிரிக்கெட் அணியும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது முன்னேற்றகரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

இதற்கு கடந்த ஆண்டு ஆசியக் கிண்ணத் தொடர் வெற்றியுடன் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இலங்கை சொந்த மண்ணில் பதிவு செய்த தொடர் வெற்றிகளை உதாரணமாக கூறமுடியும்.

இவ்வாறான நிலையில் தேசிய விளையாட்டு தெரிவுக் குழு (NSSC) இன்று (30) நடைபெறுகின்ற கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு அமைய இலங்கை

கிரிக்கெட் தேர்வுக்குழு தங்களது பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் சன்டே டைம்ஸ் (Sunday Times) செய்திச் சேவைக்கு வழங்கியிருந்த பேட்டியில் பிரமோத்ய விக்கிரமசிங்க தனது தலைமையிலான தேர்வுக்குழு, தாம் தேர்வு செய்த இலங்கை அணி பல நல்ல அடைவுமட்டங்களை காட்டியிருப்பதாக குறிப்பிட்டிருந்ததோடு, தாம் இலங்கை அணியின் முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யவில்லையா என கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

>> ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள அணிக்கு முதல் வெற்றி

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை புதிய தேர்வாளர்களுக்கான பரிந்துரையில் பிரமோத் விக்கிரமசிங்கவினையும் இணைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்ற போதும் அவரின் பெயர், தேர்வாளர்களை தெரிவு செய்யும் அதிகாரம் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக் குழு மூலம் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எது எவ்வாறாயினும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்வாளர்கள் தொடர்பிலான இறுதி முடிவு இன்று நடைபெறும் கூட்டத்திற்குப் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தி மூலம்: ESPNCricinfo

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<