இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய கெமுனு கண்காணிப்பு படையணி அணியினர் இந்த வருடத்திற்கான இலங்கை இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுப்போட்டியின் சம்பியன்களாகத் தெரிவாகியுள்ளனர்.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதியில், இலங்கை இராணுவ கவசப் படைப்பிரிவு (SLAC) அணிக்கு எதிரான மோதலில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு (SLAC)  வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மற்றைய அரையிறுதியில், தேசிய அணியில் விளையாடிய அனுபவம் மிக்க வீரர்களை உள்ளடக்கிய இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) அணியினரை 3-0 என வீழ்த்தி கெமுனு கண்காணிப்பு படையணி (GW) இறுதி மோதலுக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடாத்தவுள்ள GW மற்றும் SLASC அணிகள்

இராணுவ புலனாய்வுப் பிரிவு (MIC) அணியை வீழ்த்திய கெமுனு கண்காணிப்பு படையணியும் (GW), …

இந்நிலையில், கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் மின்னொளியின் கீழ் இடம்பெற்ற இந்த மாபெரும் இறுதிப் போட்டியைப் பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரங்கு முழுவதிலும் நிறைந்திருந்தனர்.

போட்டியின் ஆரம்ப வாய்ப்பாக கெமுனு அணியினருக்கு எதிர் தரப்பினரின் எல்லையில் வைத்து கிடைத்த ப்ரீ கிக் உதையை அவ்வணி வீரர் லக்ஷித ஜயதுங்க பெற்றார். எனினும் அவர் உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு தொலைவால் வெளியே சென்றது.

பின்னர் இராணுவ சேவை படைப்பிரிவினருக்கு கிடைத்த கோணர் உதையை மதுஷான் டி சில்வா உள்ளனுப்ப, ஸமீல் தாலிப் அதனை கோல் நோக்கி உதைத்தார். எனினும் பந்து பின்கள வீரரால் தடுக்கப்பட, தன்னிடம் வந்த பந்தை மீண்டும் கசுன் பிரதீப் கோல் நோக்கி உதைந்தார். எனினும், கம்பங்களுக்கு சற்று அருகாமையால் பந்து வெளியே சென்றது.

மீண்டும் அவ்வணிக்கு ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. எனினும், அதனைப் பெற்ற ஹர்ஷன விதுரங்க அதன் மூலம் சிறந்த பயனைப் பெறவில்லை.

சில நிமிடங்களின் பின்னர் மைதானத்தில் ஒரு திசையில் இருந்து மதுஷான் கோல் நோக்கி பந்தை வேகமாக உதைய, கம்பங்களுக்குள் சென்றுகொண்டிருந்த பந்தை கோல் காப்பாளர் ப்ரியஷான் தட்டி கம்பங்களுக்கு வெளியே அனுப்பினர்.

அதன் பின்னர் கெமுனு வீரர் ப்ரியன்த குமார கோல் நோக்கி உதைந்த பந்தை அனுபவம் மிக்க கோல் காப்பாளர் குமார சிறிசேன இலகுவாகப் பிடித்தார்.

பின்னர் தொடர்ச்சியான பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் ஸமீல் தன்னிடம் வந்த பந்தை பெரேராவுக்கு வழங்க, அவர் அதனை மிக வேகமாக கோல் நோக்கி அடித்தார். கம்பங்களுக்குள் செல்லும் பந்தை ப்ரியஷான் மீண்டும் ஒரு முறை பாய்ந்து தட்டி விட்டார்.

கசுன் பிரதீப் தனது மற்றொரு சிறந்த முயற்சியாக நீண்ட தூரத்தில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களுக்கு சற்று உயர்ந்து வெளியே சென்றது.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக கெமுனு தரப்பினர் பெற்ற ப்ரீ கிக்கின்போதும் அவர்கள் அதன் மூலம் பயன் பெறத் தவறினர்.

அதற்கு அடுத்த நிமிடமே மத்திய களத்தில் இருந்து சிறந்த முறையில் வழங்கப்பட்ட பந்தை மிக வேகமாக எதிரணியின் கோல் வரை எடுத்துச் சென்ற ஸமீல், இறுதி நிமிடத்தில் மிக இலகுவாக கோல் காப்பாளரின் கைகளுக்கே உதைந்தார். எனவே, அவ்வணிக்கான சிறந்த வாய்ப்பு வீணானது.

இதன் காரணமாக முதல் பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவடைந்தது.

முதல் பாதி: கெமுனு கண்காணிப்பு படையணி 0 – 0 இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு

இரண்டாம் பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே கெமுனு படைப்பிரிவினருக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அவ்வணியில் வேகமாக செயற்படும் முன்கள வீரர் சிறிசோம எதிரணியின் பல வீரர்களைக் கடந்து சென்று இறுதியாக பந்தை கோல் நோக்கி உதைந்தார். எனினும் தனது கைகளுக்கே வந்த பந்தை சிறிசேன இலகுவாகப் பிடித்தார்.

ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கெமுனு கண்காணிப்பு படையணி வீரர் R.K ப்ரேமனாயக்க, தன்னிடம் வந்த பந்தை சிறந்த முறையில் பெற்று கோல் காப்பாளர் இல்லாத திசையினூடாக பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி தமது அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெறுவதற்கு வேகமாக செயற்பட்ட இராணுவ சேவைகள் அணியினருக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை மதுஷான் பெற்றார். எனினும், அவரால் சிறந்த நிறைவை மேற்கொள்ள முடியாமல் போனது.

மீண்டும் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற மதுஷான், சிறந்த முறையில் உதைந்த பந்து, கோலின் மேல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு வந்தது. அதன்போது, அவ்வணியின் பல வீரர்களும் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

மீண்டும் சிறிசோம வழங்கிய பந்தை குனசிங்க கோல் நோக்கி ஹெடர் செய்தார். எனினும், இராணுவ சேவை படைப்பிரிவு வீரர் இபாம் ஹெடர் மூலம் பந்தை வெளியேற்றினார்.

அதன் பின்னர் இரு தரப்பினராலும் மாறி மாறி பல முறை கோல்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இரு அணியினதும் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர்களின் சிறந்த தடுப்புக்களினால் அனைத்து முயற்சிகளும் வீணாகின.

இவ்வாறான ஒரு நிலையில், இராணுவ சேவை படைப்பிரிவு அணியினருக்கு கிடைத்த மற்றொரு ப்ரீ கிக் வாய்ப்பை மொஹமட் இபாம் பெற்றார். அவர் உதைந்த பந்து ஒரு திசை கோல் கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.

அடுத்த நிமிடமே இராணுவ சேவை அணியினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் கோலைப் பெற்ற ப்ரேமனாயக்க, 80ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை தனியே எடுத்துச் சென்று, கெமுனு கண்காணிப்பு படையணிக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

எஞ்சிய நேரத்திலும் கெமுனு அணியினர் அடுத்த கோலுக்கான முயற்சியைப் பெற்ற அதேவேளை, எதிரணி வீரர்களின் அனைத்து முயற்சிகளையும் தடுத்து வந்தனர்.

இதன் காரணமாக மேலதிகமாக எந்த கோல்களும் பெறப்படாமலேயே ஆட்டம் நிறைவடைந்தது.

எனவே இந்த வருடத்திற்கான இராணுவப் படையணிகளுக்கு இடையிலான கால்பந்து சுற்றுப்போட்டியின் சம்பியனாக கெமுனு கண்காணிப்பு படையணி தெரிவாகி, கிண்ணத்தை தமதாக்கினர்.

முழு நேரம்: கெமுனு கண்காணிப்பு படையணி 2 – 0 இலங்கை இராணுவ சேவை படைப்பிரிவு

கோல் பெற்றவர்கள்

கெமுனு கண்காணிப்பு படையணி – R.K ப்ரேமனாயக்க 48’ & 80’