ஐ.சி.சி இன் ஒருநாள், டெஸ்ட் அணியின் தலைவராக விராட் கோஹ்லி

311

ஐ.சி.சி இன் 2018ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு விதமான போட்டிகளினுடைய அணித்தலைவராகவும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பெயரிடப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு ஆண்டுகளிலும் கிரிக்கெட் விளையாட்டில் அதன் அந்தஸ்து கொண்ட அணிகளில் மிகச் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்து அணிகளின் வீரர்களையும் உள்ளடக்கி ஒரு அணித்தலைவருடன் வருடத்திற்கான சிறந்த அணி எனும் பெயரில் ஒரு அணியை உருவாக்கி வருகின்றது.

>>ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஏற்படப்போகின்ற மாற்றங்கள்

அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை சர்வதேச கிரிக்கெட் பேரவையானது இன்று (22) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் ஐ.சி.சி டெஸ்ட் அணி

இந்திய அணித்தலைர் விராட் கோஹ்லியின் தலைமையில் 2018ஆம் ஆண்டின் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 நியூஸிலாந்து வீரர்கள், 3 இந்திய வீரர்கள், இலங்கை, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒவ்வொரு வீரர்கள் உள்ளடங்களாக மொத்தம் 11 வீரர்கள் ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

6 துடுப்பாட்ட வீரர்கள், 1 சகலதுறை வீரர் மற்றும் 4 பந்துவீச்சாளர்களை உள்ளடக்கியதாக டெஸ்ட் அணி பெயரிடப்பட்டுள்ளது.

 1. டொம் லெதம் – நியூஸிலாந்து

நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் 2018ஆம் ஆண்டில் 7 போட்டிகளில் மாத்திரம் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்களாக 658 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் இலங்கை அணிக்கெதிராக கடந்த டிசம்பர் மாதம் ஆட்டமிழக்காது பெற்ற 264 ஓட்டங்களே 2018ஆம் ஆண்டில் டெஸ்ட்டில் அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாக காணப்படுகின்றது.

 1. திமுத் கருணாரத்ன – இலங்கை

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்ன ஐ.சி.சி டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இடம்பெற்று இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஏழு அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 743 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரது சராசரி 46.43 சதவீதமாகும்.

 1. கேன் வில்லியம்சன் – நியூஸிலாந்து

நியூஸிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார். ஏழு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் இரண்டு சதங்கள் மற்றும் மூன்று அரைச்சதங்களுடன் 651 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் சராசரி 59.18 சதவீதமாகும்.

 1. விராட் கோஹ்லி (அணித்தலைவர்) – இந்தியா

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி 2018ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டில் அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்களை பதிவு செய்த வீரராகவும் விராட் கோஹ்லி திகழ்கின்றார்.

>>தென்னாபிரிக்க தொடர்களுக்கான இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

13 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் மற்றும் ஐந்து அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 1322 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் துடுப்பாட்ட சராசரி 55.08 சதவீதமாகும். மேலும் 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக மூன்று வருடங்களிலும் (2016, 2017, 2018) 1000 ஓட்டங்களை பெற்ற பெருமையும் கோஹ்லி பெற்றுள்ளார்.

எந்தவொரு இந்திய அணித்தலைவர்களாலும் செய்ய முடியாமல் போன சாதனையை கோஹ்லி ஆஸி. மண்ணில் வைத்து நிகழ்த்தியிருந்தார்.

 1. ஹென்றி நிக்கொலஸ் – நியூஸிலாந்து

நியூஸிலாந்து அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான இவர் கடந்த ஆண்டில் ஏழு டெஸ்ட் போட்டிகளில மாத்திரம் விளையாடி மூன்று சதங்கள் மற்றும் மூன்று அரைச்சதங்களுடன் மொத்தமாக 658 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இவரின் துடுப்பாட்ட சராசரி 73.11 சதவீதமாகும். இதுவே 2018ஆம் ஆண்டில் அதிகூடிய துடுப்பாட்ட சராசரியாகும்.

 1. ரிஷாப் பண்ட் (விக்கெட் காப்பாளர்) – இந்தியா

ஆஸி. அணியுடனான தொடரின் போது இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக இளம் வயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்திய ரிஷாப் பண்ட் ஐ.சி.சி டெஸ்ட் அணியில் ஒரு மத்தியவரிசை துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் பெயரிடப்பட்டுள்ளார். எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 2 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 537 ஓட்டங்களை குவித்துள்ளார்.

 1. ஜேசன் ஹோல்டர் – மேற்கிந்திய தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவரான ஜேசன் ஹோல்டர் ஒரு சிறந்த சகலதுறை வீரருமாவார்.

ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இரண்டு அரைச்சதங்களுடன் 336 ஓட்டங்களையும், 33 டெஸ்ட் விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். இதில் நான்கு தடவைகள் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுக்களையும், போட்டியில் 10 விக்கெட்டுக்களை ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார்.

 1. ககிஸோ ரபாடா – தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்க அணியின் 23 வயதுடைய இளம் வேகப்பந்துவீச்சு புயலான இவர் ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

பத்து டெஸ்ட் போட்டிகளில் 52 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் இரண்டு தடவைகள் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுக்களையும், போட்டியில் 10 விக்கெட்டுக்களை ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார். மேலும் இவரே 2018ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக காணப்படுகின்றார்.

>>இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை பெப். 21இல் நடத்த ஐ.சி.சி அனுமதி

 1. நேதன் லயன் – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நம்பிக்கை சுழல் பந்துவீச்சாளரான இவரின் சிறப்பான வெளிப்படுத்தல்கள் காரணமாக ஆஸி. அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது.

2018ஆம் ஆண்டில் பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 49 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இதில் இரண்டு தடவைகள் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

 1. ஜஸ்பிரிட் பும்ரா – இந்தியா

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் தனது பந்துவீச்சு மூலம் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு துணையாக அமைந்துள்ளார்.

கடந்த வருடமே டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் பெற்ற இவர் அந்த ஆண்டிலேயே 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஐ.சி.சி இன் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

 1. முஹம்மட் அப்பாஸ் – பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான இவர் முன்னனி வீரர்கள் அமைந்திருக்கும் வரிசையில் தனியொருவராக ஐ.சி.சி டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் சர்வதேச அறிமுகம் பெற்றுள்ள இவர் கடந்த ஆண்டில் ஏழு போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இதில் 3 தடவைகள் இன்னிங்ஸ் 5 விக்கெட்டுக்களையும், போட்டியில் 10 விக்கெட்டுக்களை ஒரு தடவையும் கைப்பற்றியுள்ளார்.

2018ஆம் ஆண்டின் ஐ.சி.சி ஒருநாள் அணி

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் தலைமையிலேயே 2018ஆம் ஆண்டுக்கான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒருநாள் தரவரிசையில் முதலிரண்டு இடங்களையும் பிடித்துள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 8 வீரர்களும், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த 3 வீரர்களும் உள்ளடங்களாக மொத்தமாக 11 வீரர்கள் ஐ.சி.சி ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் 2018ஆம் ஆண்டில் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்த வீரர்களான விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஜொனி பெயர்ஸ்டோ ஆகிய மூன்று வீரர்களும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

6 துடுப்பாட்ட வீரர்கள், 2 சகலதுறை வீரர்கள் மற்றும் 3 பந்துவீச்சாளர்களை உள்ளடக்கியதாக ஒருநாள் அணி பெயரிடப்பட்டுள்ளது.

 1. ரோஹித் சர்மா – இந்தியா

இந்திய அணியின் உபதலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான ரோஹித் சர்மா 19 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள், 3 அரைச்சதங்கள் உள்ளடங்களாக 1030 ஓட்டங்களை குவித்துள்ளார். இது 2018ஆம் ஆண்டில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டமாகும். இவரது ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 73.57 சதவீதமாகும்.

>>இலங்கை கிரிக்கெட் வளர்ச்சிக்கு நான்கு வருட வேலைத்திட்டம்

 1. ஜொனி பெயர்ஸ்டோ – இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான இவர் 2018ஆம் அதிகூடிய ஒருநாள் ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் இரு இந்தியர்களுக்கு அடுத்ததாக மூன்றாமிடத்தை பிடித்திருந்தார்.

22 போட்டிகளில் 4 சதங்கள் மற்றும் 2 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 1025 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்துடன் 2018ஆம் ஆண்டில் பெறப்பட்ட அதிகூடிய துடுப்பாட்ட வேக சதவீதம் (118.22) இவருடையதாகும்.

 1. விராட் கோஹ்லி (அணித்தலைவர்) – இந்தியா

கிரிக்கெட் உலகில் ஓட்ட இயந்திரம்’ (Run machine) என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் ஒவ்வொரு வருடமும் ஓட்டங்களை அள்ளி குவித்துவரும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி தன்னுடைய சிறப்பான அணி வழிநடத்தலின் காரணமாக ஐ.சி.சி ஒருநாள் அணியின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டில் 14 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 6 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்களுடன் மொத்தமாக 1202 ஓட்டங்களை குவித்துள்ளார். கடந்த ஆண்டில் இவருடைய சராசரியே (133.55) அதிகூடிய சராசரியாக அமைந்திருந்தது.

 1. ஜோ ரூட் – இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் தலைவரான ஜோ ரூட் 24 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்களுடன் மொத்தமாக 946 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் துடுப்பாட்ட சராசரி 83.93 சதவீதமாகும்.

 1. ரொஸ் டெய்லர் – நியூலிலாந்து

நியூஸிலாந்து அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவரான ரொஸ் டெய்லர் 11 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்களுடன் மொத்தமாக 639 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் துடுப்பாட்ட சராசரி 91.28 சதவீதமாகும்.

 1. ஜொஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்) – இங்கிலாந்து

இங்கிலாநது அணியின் விக்கெட் காப்பாளரும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரருமான ஜொஸ் பட்லர் 23 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரைச்சதங்களுடன் மொத்தமாக 671 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரின் துடுப்பாட்ட சராசரி 51.61 சதவீதமாக அமைந்திருந்தாலும், துடுப்பாட்ட வேகம் 113.53 சதவீதமாகும்.

அத்துடன் 2018ஆம் ஆண்டில் விக்கெட் காப்பாளராக 26 பிடியெடுப்புகள், 9 ஸ்டம்பிங் உள்ளடங்களாக 35 ஆட்டமிழப்புக்களை நிகழ்த்தியுள்ளார்.

 1. பென் ஸ்டோக்ஸ் – இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரராக பென் ஸ்டொக்ஸ் துடுப்பாட்டத்தில் 10 இன்னிங்சுகளில் மூன்று அரைச்சதங்களுடன் 313 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 11 இன்னிங்சுகளில் 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

>>இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு

 1. முஸ்தபீஸூர் ரஹ்மான் – பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான இவர் 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 29 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 21.72 சதவீதமாகும்.

 1. ரஷீட் கான் – ஆப்கானிஸ்தான்

தற்கால கிரிக்கெட் உலகில் சுழல் பந்துவீச்சு மூலம் அசத்திவரும், வளர்ந்துவரும் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர் ரஷீட் கான் 2018ஆம் ஆண்டில் 20 ஒருநாள் போட்டிகளில் 48 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இவரே 2018ஆம் ஆண்டில் அதிக ஒருநாள் விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 14.45 சதவீதமாகும். இதுவே கடந்த ஆண்டில் சிறந்த பந்துவீச்சு சராசரியாகும். அத்துடன் ஒரு ஓவருக்கான குறைந்த ஓட்டவீதத்தையும் (3.89) ரஷீட் கான் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 1. குல்தீப் யாதவ் – இந்தியா

இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான குல்தீப் யாதவ் கடந்த ஆண்டில் ரஷீட் கானுக்கு அடுத்ததாக 19 போட்டிகளில் 45 விக்கெட்டுக்களை வீழ்த்தி இரண்டாவது அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவராக பதிவாகியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 17.77 சதவீதமாகும்.

 1. ஜஸ்பிரிட் பும்ரா – இந்தியா

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா ஐ.சி.சி இன் டெஸ்ட் அணியில் இடம்பெற்ற அதேவேளை ஒருநாள் அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டில் 13 ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.63 சதவீதமாகும். அத்துடன் ஒரு ஓவருக்கான ஆகக் குறைந்த ஓட்டவீதத்தையும் (3.62) ஜஸ்பிரிட் பும்ரா பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<