இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான நான்கு நாள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவின் போது, இலங்கை A அணியினர், மேற்கிந்திய தீவுகள் A அணியினரின் துல்லியமான பந்து வீச்சால் தடுமாற்றத்தினை எதிர்கொண்டனர்.

முக்கியமாக மேற்கிந்திய தீவுகள் A அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரஹீம் கொர்ன்வால் கைப்பற்றிய விக்கெட்டுக்களால் போதியளவு ஓட்டங்களை பெறமுடியாமல் இலங்கை A அணி முதலாவது இன்னிங்சில் சுருண்டது. இன்றைய ஆட்ட நேர முடிவின் போது இலங்கை A அணி மேற்கிந்திய தீவுகள் A அணியினரை விட 444 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தங்களது முதலாவது இன்னிங்சில்  4 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்று மேற்கிந்திய தீவுகள் A அணியனரை விட 381 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த இலங்கை A அணியினர், இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் தங்களது முதலாவது இன்னிங்சை தொடர்ந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களுடன் இருந்த திமுத் கருணாரத்னவும், 38 ஓட்டங்களுடன் இருந்த நிரோஷன் திக்வெல்லவும் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று சரிவுப்பாதை ஒன்றினை நோக்கி சென்ற இலங்கை அணியினரை மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு இவர்கள் இருவரினதும் நேற்றைய இணைப்பாட்டம் கைகொடுத்திருந்து. இவர்களின் சிறந்த துடுப்பாட்டம் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில், இன்றைய நாளின் இரண்டாவது ஓவரில் திமுத் கருணாரத்ன மேற்கிந்திய தீவுகள் A அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரஹீம் கொர்ன்வால் வீசிய பந்தில் அவ்வணித்தைவர் சாமர் புரூக்ஸ் இடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்து அரங்கு திரும்பி ஏமாற்றினார். 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த இலங்கை A அணித்தலைவரின் இந்த ஆட்டமிழப்பு இலங்கை அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

இவரை தொடர்ந்து களமிறங்கிய அசேல குணரத்னவும், நிரோஷன் திக்வெல்லவும் அணியை மீட்டெடுக்கும் விதமாக ஆடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் நிரோஷன் திக்வெல்ல தனது 12 ஆவது அரைச்சதத்தை கடந்தார். பின்னர் ஒரு நிலையில் இலங்கை அணியினர் 225 ஓட்டங்களை பெற்றிருந்த போது மீண்டும் ரஹீம் கொர்ன்வெல்லின் பந்து வீச்சினால் தனது ஆறாவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது. இதன்போது 9 பவுண்டரிகள் உள்ளடங்களாக 88 ஓட்டங்களை பெற்று நிரோசன் திக்வெல்ல அரங்கு திரும்பினார்.

இதனால் நூறு ஓட்டங்களை எட்ட இருந்த இவர்களின் இணைப்பாட்டமும் சுக்கு நூறானது. இதன் பின்னர் மேற்கிந்திய தீவுகள் A அணியின் சிறந்த பந்து வீச்சினால் அடுக்கடுக்காக இலங்கை அணியின் விக்கெட்டுகள் பறிபோக 72.5 ஓவர்கள் முடிவில் 245 ஓட்டங்களுடன் இலங்கை A அணியின் முதலாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இலங்கை A அணியின் கடைசி 5 விக்கெட்டுக்களும் 20 ஓட்டங்களிற்குள் பறிபோனதும்  குறிப்பிடத்தக்கது.

நிரோசன் திக்வெல்ல உடன் ஜோடி சேர்ந்திருந்த அசேல குணரத்ன 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உள்ளடங்களாக 46 ஓட்டங்களை பெற்றார்.  பந்து வீச்சில் இலங்கை A அணி வீரர்களை கலங்கடித்த ரஹீம் கொர்ன்வெல் 91 ஓட்டங்களிற்கு 6  விக்கெட்டுக்களையும் இவருடன் சேர்த்து கீயோன் ஜோசேப் 39 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் மற்றும் டிலோன் ஜோன்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர், இலங்கை A அணியை விட 264 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த மேற்கிற்திந்திய தீவுகள் A அணியினர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்று தங்களது ஆட்டத்தை  இடை நிறுத்தி 481 ஓட்டங்களை  இலங்கை A அணிக்கு வெற்றி இலக்காக வழங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் A அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ராஜேந்திர சந்திரிக்கா, அணித்தலைவர் சாமர் புரூக்ஸ் மற்றும் ஜஹ்மர் ஹமில்டன் ஆகியோர் அரைச்சதம் கடந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்து வீச்சில் இலங்கை A அணியின் சரித் அசலன்க, லஹிரு குமார ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

பின்னர், கடினமான வெற்றி இலக்கொன்றான 481 ஓட்டங்களை நோக்கி தங்களது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே சரிவினை சந்தித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய இலங்கை  அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்னெ ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறி ஏமாற்றினர். இந்த தொடர் முழுவதும் லஹிரு திரிமன்னெ சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இதனால் இலங்கை A அணி இன்றைய ஆட்ட நேர முடிவின் போது 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 36 ஓட்டங்களை பெற்றிருந்தது. பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் A அணியின் கேமர் ரோச் மற்றும் டிலோன் ஜோன்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றி இருந்தனர்.

8 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க வெற்றி பெற இலங்கை A அணிக்கு இன்னும் 445 ஓட்டங்கள் தேவைப்படுகின்றது. போட்டியின் இறுதி நாள் நாளை தொடரும்.

 ஸ்கோர் சுருக்கம் 

மேற்கிந்திய தீவுகள் A அணி (முதல் இன்னிங்ஸ்) : 509/9 Dec (137.4) – விஷாஉல் சிங் 161, ஜஹ்மர் ஹமில்டன் 99, சரித் அசலன்க 104/4, திமுத் கருணாரத்ன 6/1

இலங்கை A அணி (முதல் இன்னிங்ஸ்): 245/10 (72.5) – நிரோசன் திக்வெல்ல 88, திமுத் கருணாரத்ன 68, ரஹீம் கொர்ன்வெல் 91/6, கீயோன் ஜோசப் 39/2

மேற்கிந்திய தீவுகள் A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 216/3 Dec (41) – ராஜேந்திர சந்திரிக்கா 68, ஜஹ்மர் ஹமில்டன் 56*, லஹிரு குமார 39/1, சரித் அசலன்க 63/1

இலங்கை A அணி (இரண்டாவது இன்னிங்ஸ்): 36/2 (11) – அவிஸ் பெர்னாந்து 18*, ரோசென் சில்வா 11*, டிலோன் ஜோன்சன் 4/1, கேமர் ரோச் 13/1