ஆப்கான், பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே கைகலப்பு – ஐ.சி.சி விசாரணை

409

லீட்ஸ் நகரில் நேற்று (29) நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு நாட்டு ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியைக் காண இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஏராளமானோர் மைதானம் வருகை தந்திருந்தனர். 

ரஷித் கானை இலக்கு வைத்து விளையாடியதால் வெற்றி: இமாத் வசிம்

உலகத்தரம் வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்களைக் கொண்ட…….

இப்போட்டி தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்திற்கும், ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கும் இடையிலான கடும் போராக இது காணப்பட்டது. 

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் வீரர்கள் பௌண்டரி, சிக்ஸர்களை அடிக்கும் போது பாகிஸ்தான் வீரர்கள் உற்காசத்தில் கோஷமிட்டனர். மறுபுறத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விக்கெட்டுக்களைக் கைப்பற்றும் போது தங்கள் நாட்டு வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தினர். இந்த ஆரவாரமும், கோஷமும் தான் இறுதியில் கைகலப்பு, அடிதடியாக மாறியது. 

பாகிஸ்தானுக்கு வெற்றி 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 227 ஓட்டங்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் மிகவும் நிதானமாக விளையாடினாலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் கடைசி 3 ஓவர்களுக்கு 18 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் நிலையில், 2 பந்துகள் எஞ்சியிருக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. 

ரசிகர்களின் சண்டை 

இந்த போட்டி நடக்கும் போதே மைதானத்தில் இருந்த இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இரண்டு நாடுகளையும் சேர்ந்த ரசிகர்களும் நேற்று மைதானத்தில் போட்டியை பார்க்கும் போது மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள். முதலில் வாக்குவாதமாக ஏற்பட்ட இந்த முறுகல் நிலை படிப்படியாக கைகலப்பில் மாறியது. இறுதியில் இரு நாட்டு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 

இந்த கைகலப்பில் சுமார் 10 பேர் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலில் எதிர் வீரர்களை குறித்து இரண்டு நாட்டு ரசிகர்களும் மாறி மாறி தவறாக பேசி உள்ளனர். அரங்கில் இருந்த வெற்று போத்தல்கள், நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை வீசி சண்டை போட்டனர். இறுதியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பில் முடிந்தது. ஒருவரை ஒருவர் சரமாரியாக தூக்கிக்கொண்டு சண்டை போட்டனர். இது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் கூட காண்பிக்கப்பட்டது. 

பாகிஸ்தானை வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது -குல்படின்

பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு கடுமையாகப் போராடியும்……

இதனால் இந்த சண்டை பெரிய வைரலானது. இந்த கைகலப்பை மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. 

பெண் ரசிகைகள் காயம்

பெண் ரசிகைகளும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. மைதானத்தில் ஸ்பிரேயை (spray) வைத்து மாறி மாறி ரசிகர்கள் தாக்கிக் கொண்டனர். இதில் சில பெண் ரசிகைகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ரசிகர்கள் வெளியேற்றம்

இதனையடுத்து பார்வையாளர் அரங்கிற்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த ரசிகர்களை வெளியே கொண்டு சென்றனர். ஆனால் இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. கைகலப்புக்கு காரணமாக இருந்தவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்ப பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இவர்கள் மேற்கொண்டு போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணித் தலைவர்கள் கண்டனம்

ரசிகர்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த கைகலப்பு தனக்கு அதிர்ச்சி அளித்ததாக ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் குல்படின் நயிப் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள். நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. நாங்கள் இங்கே அனைவரிடமும் நட்பு பாராட்ட விரும்புகிறோம். மைதானத்தில் மட்டுமே போட்டியாக காணவேண்டும். ரசிகர்கள் எதற்காகவும் யாரையும் தாக்குவது சரி அல்ல. இதனை நான் உங்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன் என்றார்.

இதேநேரம், பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசிம் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில், நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரர்கள். ஏன் இவ்வாறு சண்டை போடுகிறீர்கள். இது விளையாட்டுக்கு நல்ல விடயமல்ல என தெரிவித்தார். 

மைதானத்துக்கு மேலாகச் சென்ற விமானம்

இது இவ்வாறிருக்க, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மைதானத்துக்கு மேலாக சுதந்திரமான பலுசிஸ்தான் என்ற பதாகையுடனான விமானம் ஒன்று பறந்து சென்றது. 

பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப் பெரிய மாகாணமாகும். இது ஆப்கானிஸ்தானின் வடக்கே எல்லையாக உள்ளது. 

அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு

உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய அரையிறுதி…..

இது தொடர்பில் ஐ.சி.சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கருத்து வெளியிடுகையில், இதுபோன்ற அரசியல் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தடுப்பதற்காக ஐ.சி.சி கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. மேலும், எந்தவொரு அரசியல் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சி செய்யும் எந்தவொரு நபரையும் எங்கள் பாதுகாப்பு குழு தீவிரமாகத் தேடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

ஐ.சி.சி நடவடிக்கை

நேற்று மைதானத்தில் மாறி மாறி தாக்கிக் கொண்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. இவர்களுக்கு எதிராக யோக்ஷயார் பொலிஸாரிடம் புகார் அளிக்க ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் ரசிகர்கள் இப்படி சண்டை போடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐ.சி.சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அனைத்து நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஐ.சி.சி இன் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார். 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<