இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வெற்றி கொண்ட நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியதுடன், இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இந்த நிலையில், இந்தியா– நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மும்பையில் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களை மட்டுமே எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ஓட்டங்களையும், வில் யங் 71 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியில் சுப்மன் கில் 90 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 60 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுக்க இந்திய அணி 263 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 28 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியில் வில் யங் மாத்திரம் அரைச் சதம் அடித்து அசத்த மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இன்று ஆரம்பமாகிய மூன்றாம் நாள் ஆட்டத்தை அஜாஸ் படேல் 7 ஓட்டங்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ஓட்டங்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர்.
இதில் அஜாஸ் படேல் 8 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 174 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணிக்கு 147 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்ம – யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி ஆரம்பம் கொடுத்தனர்.
ஆனால், முதல் இன்னிங்ஸைப் போல இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரிஷ்ப் பண்ட் மட்டும் 64 ஓட்டங்களை விளாசினர். அணித்தலைவர் ரோஹித் சர்மா 11 ஓட்டங்களிலும், விராட் கோலி வெறும் 1 ஓட்டத்துடனும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், இந்திய அணி 121 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
- மூன்றாவது டெஸ்டையும் தவறவிடும் கேன் வில்லியம்சன்
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சனை இழக்கும் நியூசிலாந்து
- முதற் தடவையாக முதல் 10 இடங்களுக்குள் கமிந்து மெண்டிஸ்
நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைட்வொஷ் செய்து புது வரலாறு படைத்துள்ளது.
ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.
முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கடைசி டெஸ்ட் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றில் தோல்வியுற்றதே இல்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொண்ட இந்தியாவின் சாதனைப் பயணம் இந்த தொடருடன் முடிவுக்கு வந்துள்ளது. குறைந்தது 3 போட்டிகள் கொண்ட சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி இதுவரை வைட்வொஷ் ஆனதே கிடையாது என்ற சாதனையும் தவிடுபொடியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2000ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா இழந்திருந்தது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி சொந்த மண்ணில் வைட்வொஷ் ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தோல்வியுடன், 2023-2025 சுழற்சிக்கான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்தத் தோல்விக்குப் பிறகு இந்திய அணி 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மறுபுறத்தில் அவுஸ்திரேலியா அணி தற்போது தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட போர்டர் கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. எனவே இந்தத் தொடர் இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றறறது.
இதனிடையே, இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வெற்றி கொண்ட நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது, இதனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அந்த அணியும் அதிகரித்துக் கொண்டுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<