அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு

5255

உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய அரையிறுதி கனவுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளும் முனைப்புடன் இலங்கை அணி, நாளைய தினம் (01) மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பான வெற்றியொன்றினை பெற்றிருந்த இலங்கை அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், இன்னும் தங்கள் முன் உள்ள இரண்டு போட்டிகளில் (மேற்கிந்திய தீவுகள், இந்தியா) வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமில் இணைக்கப்பட்டிருந்த…

இவ்வாறான நிலையில், தென்னாபிரிக்க அணியிடம் தோல்விக்கண்டிருந்த அதே மைதானத்தில் (டர்ஹாம் – ரிவர்சைட் மைதானம்) நாளைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணியை, இலங்கை எதிர்கொள்கிறது.

கடந்த போட்டிகளை பொருத்தவரை இலங்கை அணியின் முடிவுகளில் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வுகள் இடம்பெற்றிருந்தன. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றி, அவுஸ்திரேலிய போட்டியில் தோல்வி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி மற்றும் இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்திருந்தது.

இதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுவாரஷ்யமான முறையில் வெற்றிபெற்றிருந்த இலங்கை அணி, கடந்தகால தோல்விகளை மறக்கடித்து, புதிய நம்பிக்கையை விதைத்திருந்தது. ஆனாலும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தோல்வியால் மீண்டும் இலங்கை அணி அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருக்கிறது.

தொடர் முழுவதும் இலங்கையின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைவது அணியின் துடுப்பாட்டம். ஆரம்ப போட்டிகளில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியிருக்க, பின்னர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றத்தை வழங்கியிருந்தனர். அதேநேரம், பந்துவீச்சு பக்கம் நுவான் பிரதீப் மாலிங்கவிற்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வந்தாலும், முழுமையான பந்துவீச்சு பக்கம் மாலிங்கவின் பக்கத்திலேயே தங்கியுள்ளது.

இவ்வாறான நிலையில், அடுத்தப் போட்டிகளில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் முன்வந்து ஓட்டங்களை குவிக்கும் பட்சத்திலேயே அணியால் எதிர்பார்த்த முடிவினை எட்டக்கூடியதாக இருக்கும். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை விடுத்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா ஆகியோர் துடுப்பாட்டத்தில் அணிக்கு பங்களிப்பை வழங்க வேண்டும்.  அதுமாத்திரமின்றி கடந்த போட்டிகளில் மத்தியவரிசை வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், அவர்களது ஓட்டவேகம் மிக மந்தமான போக்கினை கொண்டிருந்தது. இப்படி இருக்க அடுத்தடுத்த போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெறுவதுடன், ஓட்டவேகத்திலும் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும்.

அதுமாத்திமின்றி, பின்வரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்க வேண்டிய கட்டயாத்தில் உள்ள திசர பெரேரா மற்றும் இசுரு உதான ஆகியோரும், ஆறாவது இடத்தில் களமிறங்கும் மிலிந்த சிறிவர்தன மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் இந்தப் போட்டியில் கட்டயாம் பிரகாசித்தால் மாத்திரமே அணியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் என்பதுடன், மாலிங்க பந்துவீச்சில் அழுத்தங்களை கொடுக்கும் பட்சத்தில் மறுமுனையில் ஏனைய பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பந்துவீச வேண்டும்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியை பொருத்தவரை உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. அதனால், எஞ்சிய போட்டிகளில் அவர்கள் எந்தவத அழுத்தமும் இன்றி எதிரணிக்கு சவால்களை கொடுக்க முனைவர் என்பதுடன், அவர்களது தங்களுடைய பலத்தை வெளிக்காட்டவும் இந்தப் போட்டியில் முனைவர்.

மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டத்தில் கிரிஸ் கெயில், கார்லோஸ் பிராத்வைட், ஷிம்ரொன் ஹெட்மையர் மற்றும் நிக்கோலஸ் பூரன் என அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதுடன், பந்துவீச்சில் ஷெல்டொன் கொட்ரல், ஒசானே தோமஸ் மற்றும் ஷெனொன் கேப்ரியல் என எதிரணியை மிரட்டக்கூடிய பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

எனவே, கடந்த போட்டிகளில் விட்ட தவறினை துடுப்பாட்டத்தில் நிவர்த்திசெய்துக்கொள்வதுடன், அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒன்றிணைந்து எதிரணிக்கு சவால் கொடுத்து நாளைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்திலேயே அரையிறுதிக்கான வாய்ப்பை இலங்கை அணி தக்கவைக்க முடியும்.

இரு அணிகளதும் ஒருநாள் போட்டி மோதல்கள்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளது கடந்தகால ஒருநாள் மோதல்களை பார்க்கும் போது மேற்கிந்திய தீவுகள் அணி அதிகம் சாதகம் கொண்ட அணியாக உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையில் 56 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், அதில் மேற்கிந்திய தீவுகள் 28 போட்டிகளிலும், இலங்கை அணி 25 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 3 போட்டிகளில் முடிவு கிட்டியிருக்கவில்லை.

கடந்தகால உலகக் கிண்ண சந்திப்புகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 வெற்றிகளை பெற்றுள்ளதுடன், இலங்கை அணி 2 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்த இரண்டு வெற்றிகளையும் இலங்கை அணி 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் பெற்றுள்ளது. இதற்கு அப்பால் 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள், இலங்கை வர மறுத்ததன் காரணமாக வெற்றி இலங்கை அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இரண்டு அணிகளும் இறுதியாக ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் மோதியிருந்ததுடன், அதில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு வீரர்கள்

குசல் பெரேரா

இந்த உலகக் கிண்ணத் தொடரில், இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றத்துக்குறிய ஒன்றாக மாறியிருக்கிறது. எனினும்,  குசல் பெரேரா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரமே ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதற்கு முன்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 29 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், அதற்கு அடுத்த ஆப்கானிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அரைச்சதம் கடந்திருந்தார். இறுதியாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 30 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் பெரேரா, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக ஓட்டங்களை பெறக்கூடியவராக உள்ளார்.

ஆனால், இவரால் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியாமை அணி மற்றும் அவரது துடுப்பாட்டத்துக்கு சவாலாக உள்ளது. இந்தநிலையில், நாளைய போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு சவால் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேய் ஹோப்

மேற்கிந்திய தீவுகள் அணியை பார்க்கும் போது அதிரடியாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய பல வீரர்கள் உள்ளனர். ஆனால், நிதானமாகவும், இன்னிங்ஸ் முழுவதும் நின்று துடுப்பெடுத்தாடக்கூடியவர் ஷேய் ஹோப்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 96 ஓட்டங்களை பெற்றிருந்த இவர், மெதுவாக ஓட்டங்களை பெறக்கூடிய ஆடுகளங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலு சேர்ப்பவராக உள்ளார். அதுமாத்திரமின்றி 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவரின் ஓட்ட சராசரி 48.78 என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

உத்தேச பதினொருவர்

இலங்கை அணியை பொருத்தவரை சுகயீனத்துக்கு உள்ளாகியுள்ள நுவான் பிரதீப் உலகக் கிண்ணத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு பதிலாக அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள கசுன் ராஜித நாளைய போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், சுரங்க லக்மாலுக்கு பதிலாக அணியில் இணைக்கப்படுவார் என தெரிவிக்கப்படுவதுடன், ஜீவன் மெண்டிஸுக்கு பதிலாக மிலிந்த சிறிவர்தன அணியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, திசர பெரேரா, மிலிந்த சிறிவர்தன, இசுரு உதான, லசித் மாலிங்க, கசுன் ராஜித

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணியை பொருத்தவரை, இறுதியாக இந்திய அணிக்கு எதிராக விளையாடிய அதே பதினொருவர் அணி இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

மேற்கிந்திய தீவுகள்

கிரிஸ் கெயில், சுனில் எம்பிரிஸ், ஷேய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரொன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர் (தலைவர்), கார்லோஸ் ப்ராத்வைட், பெபியன் எலன், கெமார் ரோச், ஷெல்டொன் கொட்ரெல், ஷெனொன் கேப்ரியல்

ஆடுகளம் மற்றும் காலநிலை

ரிவர்சைட் மைதானத்தின் ஆடுகளமானது கடந்த போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடும் போது, துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமான ஆடுகளமாக தெரிந்த போதும், தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடும் போது, துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளமாக தெரிந்தது. எவ்வாறாயினும், நாளைய போட்டியில் குறித்த ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நாளைய போட்டியின் காலநிலையை பொருத்தவரை, மேகங்கள் சூழ்ந்த காலிநிலை நிலவும் எனவும், மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எவ்வாறாயினும், முடிவு கிடைக்கும் போட்டியாக நாளைய போட்டி அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<