ஆசிய இளையோர் மெய்வல்லுனரின் அடுத்த கட்டப் போட்டிகளுக்கு 4 இலங்கையர்கள் தெரிவு

148

மூன்றாவது தடவையாக இடம்பெற்றுவரும், இளையோர் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் இன்று (15) ஆரம்பமாகியது. இன்றைய நாளில், திறமையான ஆட்டத்தினை வெளிக்காட்டிய இலங்கையின் நான்கு வீர, வீராங்கனைகள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரினுடைய அடுத்த கட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) வரை இடம்பெறும் இந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், இலங்கையை சேர்ந்த 13 வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். இந்த சம்பியன்ஷிப் தொடரில் இன்று மழையின் இடையூறு இருந்த காரணத்தினால் முதல் நாளுக்குரிய போட்டிகள் யாவும் ஈரலிப்பான சூழ்நிலை ஒன்றிலேயே இடம்பெற்றிருந்தது.

சிறுவர் மெய்வல்லுனரில் பிரகாசித்த மலையக தமிழ் பாடசாலைகள்

இதில் கொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலையின் தடகள வீராங்கனையான சந்தீப்பா ஹேன்டர்சன் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் நல்ல பேறுபேறு ஒன்றை காட்டிய முதல் வீராங்கனையாக மாறினார். பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் முதல் கட்டப் போட்டியில் பங்குபற்றிய சந்தீப்பா ஹேன்டர்சன் குறித்த ஓட்டப் போட்டியினை 12.38 செக்கன்களில் நிறைவு செய்து 4 ஆவது இடத்தினை பெற்றுக்கொண்டார். சந்தீப்பா ஹேன்டர்சன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 12.26 செக்கன்களில் நிறைவு செய்து கடந்த காலங்களில் சிறப்பான பதிவுகளை கொண்டிருக்கின்ற போதிலும் மைதான சூழ்நிலைகள் சந்தீப்பாவிற்கு எதிர்பார்த்த அடைவு மட்டத்தினை பெற முடியாமல் செய்துவிட்டது.

எனினும், சந்தீப்பா இந்த முதல் கட்ட போட்டி மூலம் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருப்பதால் குறித்த அரையிறுதியில் சிறப்பாக செயற்பட்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் முதல் கட்ட போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த ஓயாமா ஹனே முதலிடத்தினை பெற்றிருந்தார். ஓயாமா ஹனே குறித்த ஓட்டப் போட்டியினை நிறைவு செய்ய 12.09 செக்கன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் சிலாபம் புனித மரியாள் கல்லூரியின் செமால் மிலிந்த பெரேரா, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் முதல் கட்ட போட்டியினை 10.90 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பெற்றார். இலங்கைக்கு பதக்கம் ஒன்றினை பெற்றுத்தருவார் என எதிர்பார்க்கப்படும் செமால் மிலிந்த நாளை (16) ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தின் அரையிறுதிப் போட்டியில் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாவல ஜனாதிபதி மகளிர் பாடசாலையின் கவிந்தி சஞ்சனா, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் முதல் கட்ட போட்டியை 59.17 செக்கன்களில் நிறைவு செய்து ஐந்தாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். ஐந்தாம் இடத்தினைப் பெற்றது சிறிது ஏமாற்றம் தருகின்ற போதிலும் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக கவிந்தி சஞ்சனாவிற்கு கிடைத்திருக்கின்றது.

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருந்து தப்பிய பங்களாதேஷ் அணி

இதேநேரம் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் முதல் கட்ட போட்டியில் சிறந்த பதிவினைக்காட்டிய மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரியின் நவிஷ்க சந்தீஷ், நாளை இடம்பெறும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் பங்கெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், செபஸ்டியன் கல்லூரியின் ஏனைய வீரரான இசுரு அபேவர்த்தன முதல் கட்டப் போட்டிகளில் சிறந்த பதிவினை காட்ட தவறியதால் அவருக்கு ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் இறுதி போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க