முதல்முறை குரோஷியாவுக்கா? மீண்டும் பிரான்ஸுக்கா? உலகக் கிண்ணம்…

205

ரஷ்யாவில் 32 நாடுகள் ஒரே கிண்ணத்திற்காக கடந்த ஒரு மாத காலம் 62 போட்டிகளில் பங்கேற்ற பின்னர் கால்பந்து உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு தற்போது இரண்டே இரண்டு நாடுகள் மாத்தரமே எஞ்சியுள்ளன.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் உள்ள 80,000 ரசிகர்கள் கூடும் லுஸ்னிக்கி அரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

பெல்ஜியத்தை வீழ்த்தி பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி

இதில் பிரான்ஸ் முன்னாள் உலக சம்பியன் மற்றும் ஐரோப்பிய சம்பியனாக இருந்து உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் முன்னரே கிண்ணத்தை வெல்ல வாய்ப்புக் கொண்ட அணியாக இருந்தே தற்போது இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.

மறுபுறம் குரோஷியா முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரு சிறிய நாடாகவே தனது பிராந்தியத்தில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது. குரோஷியாவின் மக்கள் தொகை 4.1 மில்லியனாக இருக்கும்போது, அது பிரான்ஸின் வெறுமனே 6 சதவீத மக்கள் தொகைக்கே சமனாகும்.

எவ்வாறாயினும் 1930 இல் முதல் உலகக் கிண்ணத்தை வென்ற உருகுவேயின் மக்கள் தொகை இதனைவிடவும் குறைவாக 1.7 மில்லியன் மாத்திரம்தான். எனவே, உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு மக்கள் தொகை ஒரு காரணமாக இருக்காது.

குரோஷியா – பிரான்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சந்திப்பது இது முதல் முறை என்ற போதும் ஒரு போட்டி அணியாக இரு அணிகளுக்கும் கடந்த காலங்களில் பரீட்சயம் உண்டு. என்றாலும் இதுவரை இரு அணிகளும் சந்தித்த ஐந்து போட்டிகளிலும் குரோஷியாவால் ஒரு ஆட்டத்தில் கூட பிரான்ஸை வீழ்த்த முடியவில்லை.

இதில் 1998 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி இரு அணிகளும் சந்தித்த பிரபலமான ஆட்டமாகும். அதில் போட்டியை நடத்திய பிரான்ஸ் முதல் முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருந்த குரோஷியாவை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியே இரு அணிகளும் சந்தித்த முதல் சந்தர்ப்பமாக இருந்ததோடு அது தொடக்கம் மூன்று நட்புறவு போட்டிகளில் இந்த அணிகள் ஆடி இருப்பதோடு அவை அனைத்திலும் பிரான்ஸே வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 2004 ஐரோப்பிய சம்பியன்ஷிப் குழுநிலை போட்டியில் இந்த இரு அணிகளும் சந்தித்துக் கொண்டபோது அந்த போட்டி சமநிலையில் முடிந்தது. இந்த இரு அணிகளும் சந்தித்த மிக நெருங்கிய போட்டி 2011 இல் பாரிஸில் இடம்பெற்றபோது அந்த ஆட்டம் 0-0 என சமன் பெற்றது.  

எனவே, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குரோஷியா முதல் முறை உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு மாத்திரமல்ல முதல் முறையாக பிரான்ஸை வீழ்த்துவதற்கும் சேர்த்தே களமிறங்குகிறது.

சர்ச்சைகளுடன் முன்னேறிய குரோஷியா

இம்முறை உலகக் கிண்ணத்தில் குரோஷியாவின் முதல் போட்டியிலேயே சர்ச்சை ஏற்படுத்தியவர் அந்த அணியின் முன்கள வீரர் நிகோலா கலினிக். நைஜீரியாவுக்கு எதிரான அந்த குழுநிலை போட்டியில் இடையில் மேலதிக வீரராக செல்ல கலினிக் மறுத்ததை அடுத்து அவர் நேராக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதற்கு மாற்று வீரர் பெறுவதற்கு குரோஷியாவுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் உலகக் கிண்ண தொடர் முழுவதும் ஏனைய அணிகளை விடவும் ஒரு வீரர் குறைவாக 22 வீரர்களுடனேயே ஆடி வருகிறது.

இங்கிலாந்தின் கனவை தகர்த்து குரோஷியா முதல் முறை உலகக் கிண்ண இறுதியில்

அதுமட்டுமல்லாது குரோஷியா தனது உதவி பயிற்றுவிப்பாளர் ஒக்ஜன் வுகோஜெவிக்கையும் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது. ரஷ்யாவுடனான காலிறுதிப் போட்டியில் பெற்ற வெற்றியை உக்ரைனுக்கு சமர்ப்பித்து அரசியல் சர்ச்சையை கிளப்பியதே அவர் வெளியேற்றப்படுவதற்கு காரணம்.  

உலகக் கிண்ணத்தை நடத்தும் ரஷ்யாவுக்கும் அதன் அண்டை நாடான உக்ரைனுக்கும் இடையில் அரசியல் முறுகல் இருந்து வரும் நிலையில் வுகோஜெவிக் ‘உக்ரைன் வாழ்க’ என்று செய்தி அனுப்பினார்.   

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் குரோஷியா நொக் அவுட் சுற்றுகளில் பெரும் போராட்டத்துடனேயே இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்த அணி 16 அணிகள் சுற்றில் டென்மார்க்கிற்கு எதிராகவும், காலிறுதியில் ரஷ்யாவுக்கு எதிராகவும் பெனால்டி ஷூட் அவுட் வரை போராடியே வென்றதோடு இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மேலதிக நேரத்திலேயே அதிர்ச்சி கோலொன்றை போட்டு வெற்றியீட்டியது.

சுமூகமாக முன்னேறிய பிரான்ஸ்

சர்ச்சைகள் இல்லை, பெரிதாக பதற்றங்கள் இல்லை என்ற நிலையில் பிரான்ஸ் அணி அதிக புது முகங்களுடன் இளம் வீரர்களோடு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2018 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற அணிகளில் மிக இளம் அணிகள் வரிசையில் இங்கிலாந்துடன் பிரான்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

2016 இல் தனது சொந்த நாட்டில் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றபோது மிக பலமுடன் வெற்றிவாய்ப்பு அதிகம் கொண்ட அணியாகவே முன்னேறியது. கடைசியில் போர்த்துக்கல்லிடம் தோற்று கிண்ணத்தை தவறவிட்டது.

அந்த கசப்பான உணர்வுடனேயே பிரான்ஸ் இறுதிப் போட்டிக்கு முகம்கொடுக்கவுள்ளது. நொக் அவுட் சுற்றில் பிரான்ஸ் 16 அணிகள் போட்டியில் அபார திறமையை வெளிக்காட்டி ஆர்ஜன்டீனாவை 4-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு காலிறுதியில் உருகுவேயை 2-0 என்றும் அரையிறுதியில் பெல்ஜியத்தை 1-0 என்றும் வீழ்த்தியே அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

குரோஷியாவுடன் ஒப்பிடுகையில் அந்த அணி பெரிதாக நெருக்கடி இன்றி சாமர்த்தியமாக வெற்றிகளை சுவைத்துள்ளது. இது பிரான்ஸுக்கு அதிக உற்சாகத்தை ஏற்படுத்துகின்றபோதும் அதுவே பாதகமாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளன. பிரான்ஸ் அணி ஒரு தினத்திற்கு முன்னரே அரையிறுதியில் வென்றதால் குரோஷியாவை விடவும் இறுதிப் போட்டிக்கு தயாராக அந்த அணிக்கு மேலதிக 24 மணி நேரம் கிடைத்தது மற்றொரு சாதக சூழலாகும்.        

நீயா நானா போட்டி

இம்முறை உலகக் கிண்ணத்தில் இதுவரை 161 கோல்கள் பெறப்பட்டிருப்பதோடு சராசரியாக ஒரு போட்டியில் 2.60 கோல்கள் போடப்பட்டுள்ளன. பொதுவாக கால்பந்து போட்டிகளை பெறுத்தவரை ஆரம்பத்தில் கோல் பெறும் அணிக்கு சாதகமான சூழல் அதிகம் உள்ளது.

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா இரு அணிகளையும் பார்த்தோம் என்றால் அவை இரண்டுமே பெரும்பாலும் முக்கிய ஒரு வீரரின் மீதே நம்பிக்கை வைத்திருக்கின்றன.

இந்த தொடரில் பிரான்ஸ் அடித்த முழு கோல்களில் பாதி அளவானவை இரண்டே இரண்டு வீரர்களாலேயே பெறப்பட்டுள்ளன. ஒருவர் கைலியன் ம்பப்பே மற்றவர் அன்டோனியோ கிரீஸ்மன். இந்த இருவரும் பிரான்ஸுக்காக தலா 3 கோல்களை பெற்றுள்ளனர். ஆனால் குரோஷிய அணியில் ஒன்பது வெவ்வேறு வீரர்கள் பந்தை வலைக்குள் செலுத்த சாமர்த்தியம் பெற்றுள்ளனர்.   

எவ்வாறாயினும் கோல் எவ்வாறு வரும் என்பதை கணிப்பது கடினம். இம்முறை உலகக் கிண்ணத்தில் ஓன் கோல்கள் மாத்திரம் 11 பதிவாகியுள்ளன. பெறப்பட்டிருக்கும் 161 கோல்களில் 48 அதாவது 29.8 சதவீதமான கோல்கள் பொனல்டி, கோனர் அல்லது ப்ரீ கிக் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதாவது எதிரணியின் தவறுகள் இலவச கோல்களை பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.     

குரோஷியா இம்முறை உலகக் கிண்ணத்தில் இரண்டாவது அணியாக சராசரியாக ஒரு போட்டியில் 17 தவறுகளை இழைத்து வருகிறது. இந்த பலவீனம் பிரான்ஸுக்கு கோல் புகுத்துவதற்கு இலவச வாய்ப்பை தரக்கூடியதாகும்.

என்றாலும் இரு அணிகளும் சிறந்த கோல்காப்பாளர்களை கொண்டிருப்பதோடு வலுவான பின்களத்தையும் பெற்றுள்ளன. அதேபோன்று இந்த உலகக் கிண்ணத்தில் போட்டி ஒன்றில் ஒரு கேலுக்கும் குறைவாகவே எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளன. என்றாலும் முன்கள வீரர்களை பொறுத்தவரை பிரான்ஸின் கை ஓங்கியுள்ளது. அந்த அணியின் தாக்குதல் வீரர்களான ம்பாப்பே மற்றும் கிரீஸ்மன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதோடு ஒலிவியர் ஜிரூட்டின் ஆட்டமும் சிறப்பாக உள்ளது. மறுபுறம் குரோஷிய முன்கள வீரர்களான மன்சுகிக் (Mario MANDZUKIC), அன்டே ரெபிக் (Ante REBIC) மற்றும் அன்ரெஜ் க்ரமரிக் (Andrej KRAMARIC) ஆகிய மூவரும் இந்த தொடரில் கோல்கள் புகுத்தியிருக்கும் நிலையில் ஒருவரையும் குறைத்து மதிப்பிட முடியாது.

எவ்வாறாயினும் குரோஷியாவை பொறுத்தவரை அதன் பலம் மத்தியகளத்திலேயே தங்கியுள்ளது. அந்த இடத்தில் இயங்கும் அணித் தலைவர் லூகா மொட்ரிக்கின் ஓய்வில்லாத ஆட்டம் அந்த அணியை இத்தனை தூரம் அழைத்து வந்திருக்கிறது. எனவே, குரோஷிய அணி உலக சம்பியனாவது பெரும்பாலும் அவரது ஆட்டத்தை பொறுத்ததாக அமையும்.     

தங்கப் பந்து யாருக்கு?

இந்த தலைமுறையின் சிறந்த கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இனியும் உலகக் கிண்ண போட்டியில் இல்லை என்று 16 அணிகள் சுற்றிலேயே உறுதியான பின் தங்கப் பந்தை யார் வெல்லப் போகிறார்கள் என்ற கேள்வி பெரிதாக இருந்தது.

இந்த இரு வீரர்களையும் தவிர்த்து தனிப்பட்ட சிறப்பான ஆட்டங்களை காண முடிந்தது. என்றாலும் விருதுக்கான இறுதி வீரரை தேர்வு செய்யும் காரணம் என்னவாக அமையும் என்று தீர்மானிக்க முடியாது. உண்மை என்னவென்றால் சம்பியன் அணியின் வீரர் ஒருவர் தங்கப் பந்தை வென்று 24 ஆண்டுகள் (ஆறு தொடர்கள்) கடந்து விட்டன.

லிதுவேனியாவிடம் போராடி வீழ்ந்தது இலங்கை B அணி

சிலவேளை இந்த ஆண்டு இது மாறக்கூடும். குரோஷிய மத்தியகளத்தில் லூகா மொட்ரிக்கின் அபார ஆட்டம் பல பாராட்டுகளையும் பெற்றுள்ளது. குறிப்பாக குழுநிலை போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்திய ஆடத்தில் அவரது திறமை தெளிவாக தெரிந்தது.

மறுபுறம் பிரான்ஸின் 19 வயதுடைய ம்பாப்பெ அர்ஜன்டீனாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை போட்டு அந்த அணியை வெளியேற்றியது தொடக்கும் அனைவரதும் பார்வை அவரது பக்கம் திரும்பியுள்ளது. 1958 ஆம் ஆண்டு பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் கோல் பெற்ற ஒரே இளவயது வீரராக பதிவாவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார்.

இவர்கள் தவிர பெல்ஜியத்தில் ஏடென் ஹசார்ட், தொடரில் இதுவரை மொத்தம் ஆறு கோல்களைப் பெற்று தங்கப்பாதணி விருதில் முதலிடத்தில் இருக்கும் ஹெரி கேன் ஆகிய வீரர்களும் இந்த விருதுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளனர்.

எது எப்படி இருந்தபோது பிஃபாவின் தொழில்நுட்ப ஆய்வுக் குழுவே தங்கப் பந்துக்கு சொந்தக்காரரை தீர்மானிக்கும். இந்த விருது ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிக்கு பின்னர் வழங்கப்படும்.

உலகக் கிண்ணத் தொடரில் அதிக கோல் பெற்ற வீரருக்கான தங்கப்பாதணி, சிறந்த கோல்காப்பாளருக்கான தங்க கையுறை, சிறந்த ஒழுக்கத்தை பின்பற்றிய அணிக்கான நியாயமான ஆட்ட விருதுகளும் அறிவிக்கப்படவுள்ளன.          

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க