டெல்லி கெபிடல்ஸ் வீரர் அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா தொற்று

145
BCCI

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) T20 போட்டித் தொடரில் டெல்லி கெபிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளரும், தென்னாபிரிக்க வீரருமான அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை இளம் வீரர் ரிஷாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக ஆரம்பம் செய்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் அந்த அணி தமது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது.

IPL தொடரில் இருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்

டெல்லி கெபிடல்ஸ் அணியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ககிஸோ ரபாடாவும், ஆன்ரிச் நோக்கியாவும் முக்கிய வேகப் பந்துவீச்சாளர்கள். இவர்கள் இருவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியாவில் நடக்கும் IPL தொடரில் விளையாடுவதற்காக புறப்பட்டு வந்தனர்.

இதில் இந்தியாவுக்கு வரும்போது, அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றுதான் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ இன் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலின்படி, ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டு 3 தடவைகள் PCR பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என வந்த பின்பே அணியின் உயிரியல் பாதுகாப்பு வலயத்திற்குள் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட IPL வீரர்கள்

இதில் வேகப் பந்துவீச்சாளர் அன்ரிச் நோக்கியாவுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மூலம் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி கெபிடல்ஸ் அணியில் சுழல் பந்துவீச்சாளர் அக்ஸர் பட்டேல், ஏற்கனவே கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில், தற்போது அந்த அணியின் இரண்டாவது வீரராக அன்ரிச் நோக்கியாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, டெல்லி அணியின் ஆரம்ப கட்டப் போட்டிகளில் அன்ரிச் நோக்கியா இல்லாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது இடைநிறுத்தம்

முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ராணா, ரோயல் செலஞ்சர்ஸ்் பெங்களூர் அணி வீரர்களான தேவ்துத் படிக்கல் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகிய வீரர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டனர்.

இதில் நிதிஷ் ராணா, தேவ்துத் படிக்கல் ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் தத்தமது அணிகளுக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…