நீளம் பாய்தல், ஈட்டி எறிதலில் பிரகாசிக்க தவறிய இலங்கை வீரர்கள்!

Commonwealth Games 2022

169
Commonwealth Games 2022 Day 10

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெற்றுவரும் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் பத்தாவது நாள் நிறைவில், முக்கியமான போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீர, வீராங்கனைகள் வெற்றிகளை பெறத்தவறியிருந்தனர்.

இதில், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்க 10வது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா 13வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

>> அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்ட சச்சின், புவனேக!

பத்தாவது நாளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற போட்டிகளின் முடிவுகள்

நீளம் பாய்தல் (பெண்கள்)

பெண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இலங்கை வீராங்கனை சாரங்கி சில்வா, 13வது இடத்தை பிடித்து போட்டியை நிறைவுசெய்துள்ளார்.

தகுதிச்சுற்று போட்டியில் இவர் 06.42 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த போதும், இறுதிப்போட்டியில் 06.17 மீற்றர் தூரம் பாய்ந்திருந்த நிலையில், 13வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

இந்தப்போட்டியில் பொதுநலவாய போட்டி சாதனையை பதிவுசெய்த நைஜீரிய வீராங்கனை ஈசா புரூம் 07.00 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கம் வென்றதுடன், அவுஸ்திரேலிய வீராங்கனை புரூக் புஸ்சுக்கேல் 06.95 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், கானாவின் டெபோராஹ் அகுவா 06.94 மீற்றர் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

ஈட்டி எறிதல் (ஆண்கள்)

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற சுமேத ரணசிங்க இறுதிப்போட்டியில் 10வது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துக்கொண்டார். இவருக்கு கிடைத்த மூன்று வாய்ப்புகளில் அதிகமாக 70.77 மீற்றர் வீசியிருந்த நிலையில், 10வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

>> Photos – Commonwealth Games 2022 – Day 08

இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷாட் நதீம் பொதுநலவாய போட்டி சாதனை மற்றும் தன்னுடைய தனிநபர் சிறந்த பிரதியினை பதிவுசெய்து 90.18 மீற்றர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை வென்றதுடன், கிரேனேடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் வெள்ளிப்பதக்கத்தையும் (88.64), கென்யாவின் ஜூலியஸ் எகோ வெண்கலப்பதக்கத்தையும் (85.70), வென்றனர்.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷில் தகட்டுக்கான (Plate) இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை கலப்பு இரட்டையர் பிரிவு அணி 2-0 என கயானா அணியை வீழ்த்தியுள்ளது.

கயானாவின் அஷ்லி கஹ்லீல் மற்றும் ஜேசன் கஹ்லீல் ஆகியோரை எதிர்கொண்ட வகீல் ஷமீல் மற்றும் சினாலி சந்திதிமா ஆகியோர் 11-8 மற்றும் 11-8 என இரண்டு செட்களையும் கைப்பற்றியிருந்தனர். இதன்மூலம் இம்முறை ஸ்குவாஷ் தகட்டுக்கான வெற்றியை பதிவுசெய்ததுடன், 9வது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

>> Photos – Commonwealth Games 2022 – Day 07

பதக்கப்பட்டியல் விபரம் (10வது நாள்)

இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவின் பத்தாவது போட்டிகள் நிறைவில், 66 தங்கப்பதக்கங்கள் உட்பட 174 பதக்கங்களை வென்றுள்ள அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தப்பட்டியலின் இரண்டாவது இடத்தை 55 தங்கப்பதக்கங்கள் உட்பட 166 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்தும், 26 தங்கப்பதக்கங்கள் உட்பட 91 பதக்கங்களை வென்றுள்ள கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளன. இதேவேளை இலங்கை அணியானது ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களுடன் இந்தப்பட்டியலில் 31வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <